Categories
ஆன்மீகம்

அதிசயங்களா நிகழ்கிறது திருச்செந்தூரில்?

சமீபத்திய காலத்தில் திருச்செந்தூர் கடலில் இருந்து,தினசரி ஏதாவது ஒரு கல்வெட்டு அல்லது சிலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

தினசரி என்றால் நித்தமும் அல்ல, அவ்வப்போது ஏதாவது ஒன்று வெளிப்படுகிறது. காரணம் கடல் அரிப்பு.

இந்த கடல் அரிப்பு காரணமாக ஏற்கனவே கடல் வெளியில் கிடந்து மறைந்து போன தேவையற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக வெளியேறுகிறது.

ஆமாம். முன்பு கோவில் புணரமைக்கப்பட்ட போதோ, சீரமைக்கப்பட்ட போதோ ஏதோ ஒரு கல்வெட்டு எழுதப்பட்டு, பிறகு அது உபயோகப்படுத்தப்படாத காரணத்தால் கடற்கரையிலேயே கிடத்தப்பட்டிருக்கும்.

யாரும் அதைக் கண்டு கொள்ளாத காரணத்தால் சிறிது சிறிதாக கடலில் புதைந்திருக்கும்.

இப்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக அது வெளிப்படுகிறது. ஆனால் அதை வைத்து நம்மாட்கள் செய்யும் அக்கப்போர்கள், முருகனுக்கே பொறுக்காது.

காணொளி பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுக்கும் தலைப்புகளைக் கண்டால் , நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே கூட கடுப்பாகத்தான் இருக்க வாயப்பு உள்ளது. ஆனாலும் அதைச் செய்கின்றனர்.

காணோளி விளம்பரம்

உதாரணத்திற்கு, திருச்செந்தூரில் கிடைத்த அதிசய கல்வெட்டு, கடலில் காணாமல் போன பக்தர் என்று ஆரம்பித்து, கடைசியில் இவ்வாறு கடற்கரையில் ஒரு கல்வெட்டு கிடைத்தது, அதில் இது எழுதியிருந்தது என்று பேசி முடித்து விடுகிறார்கள்.

அடுத்தது, இன்னொரு காணொளயில் பழனி முருகன்கிளம்பி வந்து திருச்செந்தூர் கடலைப்பார்க்கிறார் என்று கிளப்பி விட்டார்கள்.

தானாக நிகழ்ந்ததாக உறுதி செய்யப்படவில்லை

அதுவும் அதே கதைதான். ஏதோ ஒரு பாழடைந்த சிலை, கடலில் புதைந்து இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இந்த சமூக வலைத்தளங்களும், தகவல் ஊடகங்களும் சாதாரண நிகழ்வுகளை அதிசயம் போல பாவித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பரபரப்பை உருவாக்கி, பக்தியை, மூட நம்பிக்கையை உற்சாகப்படுத்தும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருவது வருத்தத்திற்குரிய ஒன்று.

திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏன் நிகழ்கிறது என்பதையும் அறிவியல் ரீதியாக விளக்கமாகக் கூறிவிட்டார்கள், அதை சீர் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதாக வாக்கு கொடுத்தாயிற்று.

சீக்கிரம் இந்த வியாபாரத்திற்கு ஒரு வழி பிறக்கட்டும்.

நாம் வலியுறுத்துவது ஒன்று தான். ஏதோ அதிசயம் நிகழ்ந்து விடும் என்று எண்ணி கோவிலுக்குப் போவது பக்தியல்ல.

மனநிம்மதி கிடைத்தால் போதும் என்று போவது தான் பக்தி. மனநிம்மதியையும், இறையையும் தேடத்துவங்கி விட்டால், அதிசயங்கள் நம்முள்ளே இருந்து நிகழத்துவங்கும்.

கடற்கரையில் அல்ல.

கந்தனுக்கு அரோகரா!

அன்புடன் நினைவுகள்.