சில நேரங்களில் நாம் கறி எடுத்துப் பக்குவம் பார்த்து, பல மசாலாவகைகளையும் சேர்த்து சேர்த்து சமைக்கும் உணவை விட, சும்மா 2 வெங்காயம், 2 தக்காளி போட்டு செய்த உணவு அட்டகாசமாக அமைந்துவிடும்.
அதுபோலத்தான் எதுவுமே அலட்டிக்கொள்ளாமல்,பெரிய நடிகர்கள், மிகப்பெரிய சுவாரஸ்யமான கதைக்களம், என்று எதுவுமே இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை நமக்கே படமெடுத்துக்காட்டி, இப்படித்தான்டா நம்ம வாழ்க்கை எல்லாம் சிரிப்பா சிரிக்குதுன்னு படம் முழுக்க சிரிப்பா சிரிக்க வச்சு, இறுதியில், என்றாவது ஒரு நாள் எல்லாம் மாறும் அப்படிங்கிற நம்பிக்கையோட மனநிறைவோட வெளில வர மாதிரி ஒரு படம் குடும்பஸ்தன்.
படத்தின் முன்னோட்டமே நம்மைப் படம் பார்க்கத் தூண்டும் அளவில் நகைச்சுவையாக வித்தியாசமானதாக அமைந்திருந்தது.
இன்னொரு விஷயம் கதையின் நாயகன் மணிகண்டன். சமீபத்தில் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட ஒரு விஷயம் என்னவென்றால், மணிகண்டன் படமென்றால் படம் நல்லா இருக்கும், குடும்பத்தோடு பார்க்கலாம்.
இந்த நம்பிக்கையை சற்றும் ஏமாற்றவில்லை இந்த குடும்பஸ்தன்.
சரி கதைக்கு வரலாம். ஏற்கனவே சொன்னது போலத்தான், பெரிய சுவாரஸ்யமிக்க சூழ்ச்சிகள் சூழ்ந்த கதை எல்லாம் இல்லை.
கல்யாணம் ஆன ஒருத்தன் அன்றாடம் எப்படி கஷ்டப்படறான்? அதுலயும் ஒரு படி மேல போயி அவனுக்கு வேலையும் போயிடுச்சுனா அவன் பாடு என்ன? அதுல இருந்து எப்படி எல்லாத்தையும் சரி செய்து வெளியில் வரான்?
இவ்வளவு தாங்க கதை.
சரியா சொல்லனும்னா ரஜினி நடிச்ச ஆறிலிருந்து அறுபது வரை படத்த காமெடியா, இப்ப இருக்க ட்ரென்ட்ல, இப்ப இருக்கிற குடும்ப சூழல்ல, மனுஷங்கள வச்சி எடுத்தா எப்படி இருக்கும்? அப்படித்தாங்க இருந்தது
காமெடினா, சும்மா கண்கலங்கி வயிறு வலிச்சு சிரிக்கிற மாதிரி இருக்குது ஒவ்வொரு காட்சியும்.
படத்தின் துவக்கக் காட்சியான நாயகன் நாயகி ஓடிச்சென்று வீட்டை எதிர்த்துப் பதிவுத் திருமணம் செய்யும் காட்சி அமைந்த விதமே சொல்லி விடுகிறது, முழுப்படமும் எப்படி இருக்கும் என்று. பதிவுத் திருமணமக் காட்சிகளில் சின்ன லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அடுத்தடுத்து படம் யதார்த்தமான காட்சிகளோடு, நமது அன்றாட வாழ்வைப் பிரதிபலிப்பது போல இருப்பதால் நாமும் கதையோடு ஒன்றி விடுகிறோம்.
கதையின் நாயகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும், நாயகி தாழ்த்தப்பட்ட வகுப்பாகவும் காட்டப்பட்டு, அதை வைத்து மிகப்பெரிய பாடம் நடத்தாமல், அதையும் நமக்கு நகைச்சுவையாகவே காட்டியிருப்பது அழகு.
கதையின் நாயகிக்கு மாமியார் வீட்டில் சுத்தமாக மரியாதை இல்லை என்பது சாதிரீதியாக மட்டுமல்லாது ஓடி வந்தவள், ஒன்னுமே கொண்டு வராமல் வந்தவள் என்ற ரீதியிலும் இருக்கிறது. இதையெல்லாமே அழுகாட்சி இல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையாகவோ, அல்லது நறுக்கென சின்னதாக சொல்லிவிட்டுப் படம் நகர்வது சிறப்பு.
கொங்கு மண்டலப்பகுதியில் சாதியை அடையாளப்படுத்திப் பேசும் வழக்கம் இன்னும் ஓரளவுக்கு இருப்பதை, ஏனப்பா, SC னு சட்டையில போட்டுக்கிறியே என்ன அதுனு, வீட்டு மருமகளை சாடை பேசும் காட்சிக்கும், அதற்கு அந்த நாயகி பதிலளிக்கும் விதமும் சிறப்பு.
கதையின் ஒவ்வொரு மாந்தர்களுக்கும் சமமான இடைவெளி கொடுக்கப்பட்டு, அனைவரையும் முன்னிலைப்படுத்தி எடுத்த காரணத்தால் படம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
அதிலும் மணிகண்டனின் அக்கா மாப்பிள்ளை குரு சோமசுந்தரம், அதகளம்.
குடும்ப வன்முறை என்பது குடித்து விட்டு அடிப்பது மட்டுமல்ல, இப்படியும் இருக்கலாம் என்று ஒரு கட்டத்தில் தவித்துப்போன மணகண்டனின் அக்கா கதாபாத்திரத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
பல பொறுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு குடும்பஸ்தனுக்கு வேலை போனால் என்ன ஆவான் என்பதே படம். வழக்கம்போல நண்பர்களின் பேச்சைக்கேட்டு கடன் வாங்க ஆரம்பித்து, கடன் அடைக்கக் கடன், மறுபடியும் கடன், பிறகு சொந்தக்காரனை நம்பி ஏமாந்து ஓடாத தொழிலை வாங்கி அதை கஷ்டப்பட்டு ஓட வைத்து, பிறகு அதிலும் பலத்த போட்டி வந்த காரணத்தால் நலிவடைந்து, ஒரு கட்டத்தில் மானமிழந்து, மரியாதை இழந்து கூனிக்குறுகி, ஒரு வாய் சோறு கூடத் திங்க வழியில்லாமல், என்னடா வாழ்க்கை, நாம ஏன் உயிரோட இருக்கோங்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டு, பிறகு மீண்டும் ஒரு சின்ன உதவியால் மீண்டு வந்து தன்னை மீண்டும் மனிதனாக உணர்ந்த தருணம் இறுதிக்காட்சியில் வந்து நிற்கிறது.
இவ்வளவு சீரியஸாக எழுதப்பட்ட கதையை, இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா? என்ற வித்தியாசமான முயற்சியில் வென்ற படம் தான் இது.
கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கலாம்.
அதிலும் உறவுக்கார குடிகார அண்ணன் படத்தின் இடையிடையேயும், இறுதிக் காட்சியிலும் செய்யும் லோலாயங்கள் நம்மை, இருக்கையிலிருத்து குப்புறத் தள்ளி சிரிக்க வைக்கிறது.
மொத்தத்தில் நம்மைப்போன்ற ஒருவனைத் திரையில் பார்த்து, அவனை நாமாக பாவித்து, அவன் வீழும்போது பதறி, எழும் போது மகிழ்ந்து, வென்ற பிறகு மனநிறைவோடு கதையோடு ஒன்றி மனநிறைவோடு திரையரங்கை விட்டு வெளியே வரலாம்.
எளிமையான இத்தகைய படங்களை கொண்டாடும் ரசிகப்பெருமக்களுக்கு நன்றி கூறி நாமும் இதைக் கொண்டாடலாம்.
பாராட்டுகளுடன்.