Categories
சினிமா

வணங்கான்- திரை விமர்சனம்

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் மிகப்பெரிதாக பேசப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வணங்கான் படத்தைப்பற்றிய ஒரு அலசல்.

இயக்குனர் பாலா என்றாலே, அவரது படங்கள் இது மாதிரித்தான் என்ற ரீதியில் மக்களின் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது. அதற்கு சற்றும் சளைக்காத விதமாகத்தான் இந்தப்படமும் துவங்கியது.

மிக எளிமையான அடிமட்ட மக்களைக் கதையின் நாயகர்களாக இவர் காட்டும் அந்த தனிச்சிறப்பு இந்தப்படத்திலும் மாறவில்லை.

ஆனால் இவரது இந்தப்படத்தில் கதநாயகி அழகாக விதவிதமான வேடங்களில் வருகிறார். ஆனாலும் சும்மா சம்பளம் வாங்கிற முடியுமா என்ற ரீதியில் ஊமக்குத்தாக குத்தி மூக்கை உடைக்கும் காட்சிகளை வைக்காமல் இல்லை.

அருண் விஜயை எப்படியாவது அழுக்காகத் தான் காட்டுவேன் என்று அவரது தலையில் பான்பராக் போட்டுத் துப்பி செம்பட்டை ஆக்கியிருப்பது அனாவசியம். ஏன் சார் அடிமட்ட நிலையிலிருக்கும் மக்கள் கொஞ்சம் அழகாக இருந்தால் என்ன தப்பு?

கதாநாயகனின் தோற்றம்.

வழக்கமான பாலா படங்கள் போலவே ஆரம்ப காட்சிகள் ஜனரஞ்ஜகமாக, நகைச்சுவையோடு நகர்கிறது.

கதாநாயகன் அநீதியைக் கண்டால் பொங்குவார் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு சண்டைக்காட்சியோடு துவங்கி, அது காவல் நிலையம் வரை செல்ல, காவல் நிலையத்தல் இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று பொய் வழக்குப் போட, இவர் மாற்றுத்திறனாளி, அதாவது வாய் பேச முடியாதவர் என்ற உண்மை வெளிப்படும் காட்சிகள் கலகலப்பு.

அதன்பிறகு கதாநாயகன் கதாநாயகி எலி பூனை சண்டைக்காட்சிகள் கலகலப்பாக படத்தை நகர்த்துகிறது. அவன் விருப்பத்திற்கு சுற்றித் திரிந்தவன், காதலில் விழுந்து வாழ்க்கையில் திருந்தி இனி நல்ல வேலைக்கும் போகலாம் என்று முடிவு செய்து வேலைக்குப் போன இடத்தில் கிளம்புகிறது பிரச்சினை.

தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நிகழ்ந்த ஒரு வெளிசொல்ல இயலாத அசிங்கத்தினால் கடும் கோபமடைந்த கதாநாயகன் அதற்குக் காரணமான இருவரை கொடூரமாகக் கொலை செய்து விட்டு காவல்துறையிடம் சரணடைகிறான்.

இவன் ஏன் கொலை செய்தான் என்பதை அறிந்துகொள்ள காவல்துறையும், நீதித்துறையும் படும் பாடுதான் மீதிப்படம்.

தவறு செய்த மூவரில் இருவரைக் கொன்ற நாயகன் மூன்றாவது ஆளை எங்கே எப்படித் தேடிக் கொல்லப்போகிறான் என்பது மறுபுறம்.

இதற்கிடையே கதாநாயகனைத் திருத்தி தன் அன்பால் கட்டுப்படுத்த நினைக்கும் அவனது தங்கை மற்றும் காதலியின் பாசக்காட்சிகள் சில நல்ல ரகம்.

கதாநாயகியின் அறிமுகக் காட்சி அருமையான ரகம்.
படகில் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் திருக்குறள் சொல்லி நகைச்சுவை செய்து, கதாநாயகனிடம் ஊமைக்குத்து வாங்கும் வெகுளி நடிப்பில் துவங்கி, இடைவேளைக்குப் பிறகு பாசப்போராட்டம் நடத்தும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நிலைக்கிறார். பாலா னா சும்மாவா? என்ற கேள்விக்கு நடிகர்களின் நடிப்பு பதில் தருகிறது.

கதாநாயகி

மிஷ்கின் மிடுக்கான நீதிபதியாக வருகிறார். அவரது அறிமுகக் காட்சியில் விசில் பறக்கிறது.
போக்ஸோ, பெண் உரிமை போன்ற விஷயங்களைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க நினைக்கும் தறுதலைகளுக்கு செருப்படிக்காட்சி.

அவர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் மிடுக்காக இருக்கிறார்.

காவல் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியதாகத் தோன்றவில்லை.
அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த அளவில் தான் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஈசன் படத்தில் இருந்தது போல அவருக்கு இந்தப்படத்தில் ஒரு பெரிய இடமில்லை.

கதாநாயகன் மூன்றாவது ஆளைக் கொன்றாரா? அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது.
பாலா படம் என்றாலே யாராவது க்ளைமாக்ஸ் ல் சாகனுமே? இப்படியான எல்லா கேள்விகளுக்கும் இறுதிக்காட்சி பதிலளிக்கிறது.

வழக்கம் போல சோகக் க்ளைமாக்ஸ் தான். மாற்றமே இல்லை.

நல்லவேளை பண்டிகை அதுவுமா இந்த அழுகாட்சியப் பாக்கல என்ற மகிழ்ச்சியோடு மக்கள் வெளியேறினர்.

நல்லபடம். பொழுதுபோக்கு, நகைச்சுவையைத் தாண்டி கன்னியாகுமரியில் பச்சைக்குத்தும் வேலையில் இருக்கும் பெண், படகு ஓட்டும் ஆண், டூரிஸ்ட்கைட் பெண், சின்ன டீக்கடை நடத்தும் தம்பதி, சர்ச் பாதிரியார் என படம் ஊர்வாசனையோடு எளிய மக்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அழகாக நகர்கிறது.

இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இப்படியான சம்பவங்கள் இருக்கும் என்பது கூடவே இருந்து பயணித்துப் படமாக்கியதுபோன்ற உணர்வு நமக்குக் கிடைக்கும். அந்த விதத்தில் பாலா என்றுமே வெற்றியாளர் தான்.

சற்று தாமதமானாலும் பாலா படத்தைப் பார்க்காமல் இருப்போமா என்ன?

நல்ல ரசிகனாக பாராட்டுகளோடு,

நினைவுகள்.