குஜராத் மாடல்.
இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.
அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது.
அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது.
அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு, மோடி Vs ஜெயலலிதா வில் யார் வென்றார்கள் என்ற அறிவிப்பைச் செய்தது.
கல்வியறிவில் துவங்கி, குழத்தைப் பிறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் சுகாதாரக் குறியீடு என அனைத்திலும் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது.
அப்போது மட்டுமல்ல எப்போதுமே கல்வியறிவு, சுகாதாரம், ஆகியவற்றில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாகவே இருந்துள்ளது.
அதையும் தாண்டி, சாலை வசதி, மின்சாரம், கட்டிட அமைப்புகள், பாலங்கள் என அனைத்திலும் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாகவே தமிழ்நாடு இருந்து வருகிறது. இது திமுக, அதிமுக என்ற பாகுபாடு இல்லாமல், பிற மாநிலங்களைக் காட்டிலும் நமது அரசியல்வாதிகள் வளர்த்தெடுத்தது.
எனது நேற்றைய, இன்றைய அகமதாபாத் அனுபவங்களை வைத்து தான் இதை எழுத விழைகிறேன்.
இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரம், அதிலும் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரம் என்ற காரணத்தால் இந்த நகரின் கட்டமைப்பு மற்றும் தோற்றத்தின் மீது எனக்குப்பெரிய மரியாதை இருந்தது.
அந்த எதிர்பார்ப்பு விமான நிலையத்திலிருந்து 4 கிமீ பயணித்த உடனேயே ஏமாற்றமானது.
மாநில நெடுஞ்சாலைகளுக்கு இணையான சாலைகள், பழமை மாறாத கிராமத்துத் தோற்றம் என்று 85-90 களின் சென்னையின் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் கிராமங்கள் போன்ற தோற்றம்.
அதனாலென்ன? பழமை மாறாத நகரம் என்று சொல்லி சமாளிக்கக் கூடியது அல்ல.
இது சமச்சீரான வளர்ச்சியின்மைக் குறியீடு.
இங்கு இன்னமும் பாதிபேர் கல்வியறிவில்லாத மக்களாகவே இருக்கிறார்கள். படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்கள் ஏதோ பூர்வ ஜென்மத்தில் தனி வரம் வாங்கி வந்த தோற்றத்தில் வாழ்கிறார்கள்.
கல்வியறிவைப் பெற முயற்சிக்காமல் அன்றாடக் கூலியாக வாழ்பவர்கள், சாதாரண மனிதர்கள் இப்படித்தான் வாழ முடியும் என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.
இரவில் உணவுக்காக தொழிற்போட்டையின் அருகிலுள்ள கடைத்தெருவுக்குச் சென்றிருத்தேன்.
ஒரு பெரிய சந்திப்பு. அதாவது அகமதாபாத் நகரின் உள்ளே இருக்கும் தொழிற்பேட்டையின் அருகே உள்ள சந்திப்பு.
அந்த சந்திப்பில் ஒரு சாலை சமிஞ்ஞை இல்லை, போக்குவரத்துக் காவலர் இல்லை என்பதெல்லாம் பரவாயில்லை. ஆனால் ஒரு தெரு மின்விளக்கு கூட இல்லை என்பதே அதிர்ச்சி.
அந்த சந்திப்பைச் சுற்றி உள்ள கடைகளை மூடிவிட்டால் சுடுகாட்டுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
அதுமட்டுமல்ல, நான் மேற்கூறிய தொழிற்பேட்டை உள்ளேயும் ஒரு இடத்தில் கூட ஒரு மின்விளக்கு கூட இல்லை.
இதே தமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த சந்திப்பில் 5000 வாட்டில் இரண்டு, தொழிற்பேட்டை உள்ளே 10 ஆயிரம் வாட்டில் நான்கு விளக்குகளும் இருந்திருக்கும்.
இப்படி இருட்டுலயே வாழ்ந்துட்டு மின்மிகை மாநிலம் என்று அறிவிப்பது கேவலம்.
மேலும் ஆங்கிலம் என்பது பத்தில் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அரைகுறை இந்தியை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைத்தாலும் இவர்கள் குஜராத்தி பேசுகிறார்களா, இந்தி பேசுகிறார்களா என்பதும் விளங்கவில்லை.
இந்த தொழிற்சாலை முக்கிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கிமீ தூரம் இருக்கிறது. இந்த 3 கிமீ தூரத்திற்கும் ஒரு விளக்கு கூட இல்லை.
மேற்கூறியபடி முக்கிய சந்திப்பிலேயே விளக்குகள் இல்லை என்கிற போது இதை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?
குஜராத்தின் கல்வியறிவு விகிதம் 78 சதவீதம் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இங்கே இளைஞர்கள் கூட ஆங்கிலத்தில் திணறுகிறார்கள். திணறுகிறார்கள் என்றால் 160 ரூபாயை ஆங்கிலத்தில் சொல்வதற்கு அவர்களால் முடியவில்லை.
அப்படி என்றால் எந்த 78 சதவீதத்தினர் படித்தனரோ அவர்களை நான் சந்திக்கவில்லையா?
அல்லது நான் சந்தித்தது எல்லாமே பாக்கி 22 சதவீத ஆட்களையா?
தமிழ்நாட்டில் ஒரு கீரை விற்கும் ஆயா கூட சமயத்தில் ஆங்கிலத்தில் பேசுகிறது. இதை ஒப்பிடும் போது எனக்கு இவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டே இருக்கும் போது வாய்நிறைய பாக்கோடு , ஒருவன் என்னிடம் வந்து, “ஆப் ஐஐடி பர்மனன்ன்ட் ஸ்டாஃப் ஹே சார்?” என்றான். இல்லப்பா நான் டுபாக்கூர் என்று சொல்லவுமே, அவன் ஆங்கிலத்தில் “ஐ ஹேவ் அப்ளைடு பார் ரிசர்ச் இன் ஐஐடி கான்பூர்” என்றான்.
எனக்கு சுளீர் என்று இருந்தது.
இங்கே பாக்கு போடுறவன் எல்லாம் படிக்காதவனும் இல்லை, பாக்கு போடுறதால அவனுக்கு ஆங்கிலம் தெரியலனும் இல்லை.
ஆனால் ஒரு தனியார் நிறுவனத்தில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் பலருமே ஆங்கிலத்தில் சிறிதும் உரையாட முயற்சிக்காமல், இந்தியில் மட்டுமே பேசுவது அவர்களது மொழிப்பற்றா அல்லது அறியாமையா என்று விளங்கவில்லை.
எது எப்படியோ, மொத்தத்தில் நாமெல்லாம் அங்கே போய் பார்க்கவா போறோம் என்ற எண்ணத்தில் குஜராத் குஜராத் என்று பெருமை பேசியது அயோக்கியத்தனம் என்பதை உணர்ந்துகொண்டேன்.
புதியதோர் பயணத்தில் ஒரு புதிய பதில்.
அன்புடன் நினைவுகள்.