பொங்கலுக்கு வந்த படங்களில் பிரம்மாண்டமானதாக பெரிய பட்ஜெட்டில் தமிழில் ஏதும் வராவிட்டாலும், தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தெலுங்கில் இயக்கிய கேம் சேஞ்சர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
தமிழில் போதுமான போட்டிப்படங்கள் இல்லாத காரணத்தால் இந்தப்படம் பெரும்பான்மையான திரையரங்குகளை ஆக்கிரமித்தது. தமிழ் மக்களும் இயக்குனர் மீதான கோபத்தை மறந்து வேறு வழியில்லாமல் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம். ராம்சரணையும் சமீபத்தில் சில பெரிய டப்பிங் படங்களில் பார்த்துப் பழகி அவரையும் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தமிழ் படங்களுக்கு இணையாகவே இதுவும் சூடுபிடித்து ஓடுகிறது.
மிகப்புதிதான கதைக்களமா என்றால் இல்லை தான்.
ஏற்கனவே ஷங்கர் எடுத்த படங்களையும், கேப்டனின் பேரரசு படத்தையும், மேலும் சில படங்களையும் அரைத்து, புளித்த மாவில் சிறிது டிஜிட்டல் படங்கள் என்ற கேரட் வெங்காயம் தூவி ஓரளவு போரடிக்காத திரைக்கதை என்ற நெய்யை ஊற்றி ஒரு நல்ல ஊத்தாப்பமாக மாற்றி விட்டார்கள்
படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து தான் நான் சென்றேன். அதுவும் நல்லது தான் என்பது இடைவேளையின் நீளத்தின் போது புரிந்தது.
இடைவேளை வரை படத்திலும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வழக்கம்போல கதாநாயகன் என்றால் பத்து பேரை அடித்துப்பறக்கவிட்டு தான் முகம் காட்ட வேண்டும் என்ற பழைய சினிமா க்ரிஞ்ச் பாணியில் ஒரு சண்டை, சண்டை முடிந்த உடனே கதாநாயகன் ஹெலிகாப்டரில் பறந்து இறங்கி ஒரு பாட்டு என்று முதல் 20 நிமிடத்தில் நாம ஏன்டா இந்தப்படத்துக்கு வந்தோம் என்ற ரீதியில் வெறுப்பாகித்தான் போனது.
அதன்பிறகு சரியாகி விடும் என்று நினைத்தால் மாவட்ட கலெக்டரான கதாநாயகன், காவல் அதிகாரி போல ரௌடி தாதாக்களைக் கூப்பிட்டு மிரட்டி, இரண்டு ரெய்டு போகிறார்.
பல ஷங்கர் படங்களிலும், பல படங்களிலும் புளித்துச் சலித்த ரெய்டு சமாச்சாரமும் நம் மனதில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
வில்லனான S.J Surya வந்தவுடன் மனதுக்கு லேசாக ஆறுதல் கிடைத்தது.
இடையே கதாநாயகனின் கல்லூரி காதல் வாழ்க்கை , ஏதோ பரவாயில்லை என்ற ரீதியில். ஆனாலும் அவ்வப்போது பாடல்கள் வந்தது மிகப்பெரிய சலிப்பு.
இரண்டு பாடல்களைக் குறைத்திருந்தால் இன்னும் சுகமாக இருந்திருக்கும்.
ஒருவழியாக கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நேரடி கைகலப்பாகி ( கலெக்டருக்கும்- மந்திரிக்கும்) படம் ஓட ஆரம்பிக்கிறது. லாஜிக் இல்லாத கைகலப்பு தான்.
ஆனாலும் பரவாயில்லை. இவ்வளவு நேரம் படம் ஓடுனதுக்கு இது பரவாயில்லை என்று இருந்தது.
அரசியல்வாதியை எதிர்க்கும் நேர்மையான அதிகாரி என்ற அருதப்பழைய கதைப்பின்னனியில் சுறுசுறுப்பான திரைக்கதை அமைந்த காரணத்தால் படம் தப்பித்தது.
திடீரென ஒரு பகீர் ட்விஸ்டாகி இனி படத்தில் என்ன இருக்கப்போகிறது, அதான் முதல்வன் படத்துலயே பாத்தாச்சே என்று நினைக்கும் போது அதிலும் ஒரு ட்விஸ்ட் வந்து இது முதல்வன் இல்லடா, தென்னவன் என்று ஷங்கர் நம்மைப்பார்த்து சிரிக்கிறார்.
நாமும் எங்க கிரகம் என்று ஒரு புன்னகையைப் போட்டு தொடர்ந்து பயணிக்கிறோம்.
அதில் ஒரு அப்பா ப்ளாஷ்பேக்.
அப்பாடா ஆறுதலான பகுதி. நல்ல பகுதி. இதேபோன்ற ப்ளாஷ்பேக் காட்சிகளைப் பலமுறை பார்த்திருந்தாலும் பரவாயில்லை. இந்தப் படத்தில் இதுதான் சிறந்த பகுதி.
ப்ளாஷ்பேக் முடிந்து மீண்டும் கதாதாயகன் வில்லன் மோதல் சிறிய சுவாரஸ்யத்தோடு நிகழ்கால சம்பவங்களோடு தொடர்புபடுத்தப்பட்டு ஓரளவுக்கு வேகமாக நகர்ந்து க்ளைமாக்ஸ் வந்து சேர்த்தது.
பெரிய போட்டி படங்கள் இல்லாத காரணத்தால் இந்தப்படம் நின்றது.
வேகமாக ஓடாவிட்டாலும் கூட ஓடி வந்தது இதைவிட மெதுவான ஆட்கள் என்பதால் இவருக்கும் ஒரு கோப்பை என்ற ரீதியில் பொங்கல் கல்லாவைக் கட்டிவிட்டது.
ஒரு முறை பார்க்கலாம். ஆனால் ஷங்கரின் மீதான மிகப்பெரிய மரியாதை படத்துக்குப் படம் தேய்கிறது.
இந்தியன் 3 ல் வெல்வாரா?
கம் பேக் ஷங்கர்.
காத்திருப்புடன் நினைவுகள்.