பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை நாம் ஏற்கனவே பேசியிருந்தோம்.
இருந்தாலும் ஒரு சினிமா ரசிகனாக பொங்கல் படங்களை பார்க்காமலா விடப்போகிறோம்.
அந்த வரிசையில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மிகவும் பாவப்பட்ட படமான மதகஜராஜாவைப் பார்த்தாயிற்று.
கிட்டத்தட்ட 12 வருடங்களாக பெட்டியில் அடைபட்டுக்கிடந்த சினிமா இன்று திரையரங்குகளில் இன்றைய பொங்கல் படத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே நமக்குப் புரிய வைக்கிறது, இப்போதைய பொங்கல் படங்கள் எவ்வளவு மோசம் என்று.
இப்போதைய பொங்கல் படம் மோசமா அல்லது பழைய பணிரெண்டு வருடப் படம் அவ்வளவு சிறப்பாக உள்ளதா என்று குழம்ப வேண்டாம்.
மதகஜராஜா ஒன்றும் அவ்வளவு சிறப்பான படமல்ல.
பல வருடங்களாக முடங்கிக் கிடந்த படம். அதிலும் சந்தானம் காமெடியனாக நடித்த படம் என்பதால் மக்கள் அதற்காக சில மதிப்பெண்களை அதிகப்படுத்தி அளித்துள்ளனர்.
சுந்தர்.சி பட பாணியிலான பாட்டு, காமெடி கவர்ச்சி என கலந்துகட்டிப் படம் நகர்கிறது.
படம் திரையில் பார்த்த உடனேயே இது பழைய படம் என்று தெரிகிறது, அதன் தரத்தில்.
படத்தின் தரம் மட்டுமல்ல, கதை, திரைக்கதை, என அனைத்தும் பழையது தான்.
ஆனால் ஒரு விஷயத்தில் சுந்தர் .சி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பதை நிரூபித்து விட்டார்.
அது என்னவென்றால் கவர்ச்சி. அதற்கு மட்டும் குறையே இல்லை. இன்றைய நிகழ்கால சினிமாக்களுக்கு இணையாக 12 வருடத்திற்கு முன்பே இறங்கி அடித்திருக்கிறார்.
பணத்திற்கு மோசமில்லை. பல காமெடி காட்சிகளும் குபீர் சிரிப்பை வரவழைக்காவிட்டாலும் சிரிப்பை வழவழைக்கின்றன.
இரண்டு மணிநேரம் லாஜிக் எதுவும் பார்க்காமல் மகிழ்ச்சியாக சிரித்து விட்டு வரலாம்.
மத கஜ ராஜா – ராஜாவா கூஜாவா- படம் பார்த்தவர்கள் பதிவிடலாமே!
அன்புடன் நினைவுகள்.