சுங்கச்சாவடிகள்.
பொதுவாக சுங்கச்சாவடிகள் என்றாலே வெறுப்பு தான். என் பணம் வீணாப் போகுது. ஏற்கனவே சாலை வரிகள் எல்லாம் கட்டிதானே வண்டிய வாங்கினேன்.
இதுல இப்ப இதுக்கு வேற ஏன் தனியா நான் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியில் துவங்கி, சுங்கச்சாவடிகளில் இனி பணம் ரொக்கமாக செலுத்தக் கூடாது, அனைத்து வண்டிகளிலும் பாஸ்டேக் அட்டை நிச்சயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் வரை எப்போதும் சுங்கச்சாவடிகள் என்றாலே மக்களுக்கு எரிச்சல் தான்.
மேலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கில் அணிவகுத்து நிறப்து என்பது மக்களுக்கு மிகப் பெரிய எரிச்சலை உண்டாக்கும் விஷயம்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் உண்டு. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல, சுங்கச்சாவடிகள் ஒரு விதத்தில் மக்களுக்கு ஆறுதல் தான்.
ஆமாம்.
முதல் ஆறுதல், ஒரு எல்லைக்கோடாக அது உபயோகிக்கப்படுகிறது.
முன்பு போல இப்போதெல்லாம் பேருந்துகள் ஊருக்குள் செல்வதில்லை.
பயணத்தின் நடுவே நாம் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கு சுங்கச்சாவடிகள் ஒரு அடையாளமாக இருக்கிறது.
மகிழுந்துகளில், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியும் ஒரு எல்லைக்கோடு தான். அப்பாடா, இந்த டோல்கேட் தாண்டிட்டோம் என்று ஒவ்வொரு சுங்கச்சாவடியைத் தாண்டும் போதும் ஒரு ஆறுதல் அடைவதோடு ஒரு இளைப்பாறுதலையும் செய்து கொள்கிறார்கள்.
சுங்கச்சாவடிகளை மையமாகக் கொண்டு பல வியாபாரங்களும் துவங்கிவிட்டன.
பெரும்பாலும் சுங்கச்சாவடிகளைச் சுற்றி, தேநீர் விடுதிகளும், உணவகங்களுமே இருக்கும். ஆனால் இப்போது ஜவுளி வியாபாரம் முதல், பொம்மை உட்பட பல வியாபாரங்களும் சுங்கச்சாவடிகளின் அருகே வந்துவிட்டன.
நெடுஞ்சாலைப் பயணத்தின் போது தேநீரும், உணவும், கிடைத்ததைத் தான் உண்ண வேண்டும் தலையெழுத்து என்பது மாறிவிட்டது இந்த சுங்கச்சாவடி கலாச்சாரத்தால்.
இப்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிரபலமான உணவகங்களும், ஏன் கே எப் சி கூட சுங்கச்சாவடிகளின் அருகே வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன.
பயணத்தின் போது வயிற்றுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று எண்ணி, சாப்பாட்டையும் தவிர்த்து பிஸ்கட்டையும் தண்ணியையும் உணவாக உண்டு பயணித்த காலம் மாறிப் போனது.
இப்போதெல்லாம் பிரியாணி முதல் க்ரில் சிக்கன் வரை சகலமும் நெடுஞ்சாலைகளில் விற்பனை ஆகிறது.
மேலும் ஒவ்வொரு 60-70 கிமீ தூரத்தில் ஒரு சுங்கச்சாவடியும் அதைச்சுற்றி மிகப்பெரிய கடைகளும் வந்துவிட்ட காரணத்தினால் சொந்த வாகனங்களில் செல்வோர், கழிவறைப் பயன்பாட்டைப் பற்றி பயப்படுவதே இல்லை.
முன்பெல்லாம் பயணம் முடிந்து ஊரில் போயி மகிழ்ச்சியாக இருந்த காலம் மாறி இப்போது பயணமே மகிழ்வானதாக மாறிப்போனது. ஆனால் பணம் பிரதானம்.
கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல, சுங்கச்சாவடி கலாச்சாரத்தால் இப்படி ஒரு மகிழ்ச்சியான பயணம் மக்களுக்குக் கிடைக்கிறது.
அதிலும் எனக்கு விருப்பமான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நினைக்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்
அன்புடன் நினைவுகள்.