பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களில் புது சினிமாவும் ஒரு முக்கிய அங்கம். அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்?
தீபாவளி கூட ஒரு நாள் கூத்து தான். ஆனால் பொங்கல் அப்படியல்ல. கண்டிப்பாக குறைந்தபட்சம் 3 நாட்களாவது விடுமுறை இருக்கும் என்பதால் பொங்கலுக்கு இறங்கும் படங்கள் அதிகம்.
பண்டிகை வரும் முன்பே படங்கள் வெளியாகி பண்டிகைகளைத் துவங்கி வைத்த எண்ணத்தை உருவாக்கி விடும்.
எஸ் தலைவன் படம் முதல் நாளில் 300 கோடி வசூல், அமெரிக்காவில் ஐம்பது கோடி வசூல் என்று வடை சுட ஆரம்பித்து, வாய்ச்சண்டை முதல் இணையதளம் வரை அனல் பறக்கும். படம் நல்லா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெரிய நடிகர்களின் படம் என்பதால் ஒரு வாரத்திற்குத் திரையரங்குகள் கலை கட்டும்.
2014 ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா படங்கள் வந்தபோது இருந்த அதே அளவு கொண்டாட்டம், 2023 துணிவு, வாரிசு என்ற அஜித், விஜய் படங்கள் மோதிக் கொண்ட போது இருந்த்து.
ஆனால் துணிவு படத்துவக்க விழா கொண்டாட்டத்தில் நடந்த கசப்பான சம்பவம், ஒரு புதிய விதிமுறையை உருவாக்கியது. இனி எந்தப்படமும் காலை 9 மணிக்கு முன்பு வெளியிடப்படாது என்பது அது.
போன வருடம் பொங்கலுக்கு வெளியான படங்களும் சொதப்பல்தான் என்றாலும், அஜித் விஜய்க்கு அடுத்த தலையமுறையான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகி ஓரளவு மக்கள் கூட்டத்தைத் திரையரங்குகளின் பக்கம் ஈர்த்தது.
அயலான் குழந்தைகளின் கவனத்தை ஈர்த்த காரணத்தால் ஓரளவு குடும்பங்களின் கூட்டம் நிறைந்தது.
ஆனால் இந்தப் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு இல்லை.
அஜித்குமார் அவர்களின் விடாமுயற்சி தனி ஆளாக தாண்டவம் ஆடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்ற செய்தி சினிமா ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது.
வெளியான படங்களும் பெரிய கவன ஈர்ப்பைச் செய்யவில்லை. இந்தியன் 2 மூலமாக மிகப்பெரிய அவப்பெயரை எடுத்த ஷங்கர் அவர்களின் கேம் சேஞ்சர் படம், தமிழ் கதாநாயகனுடையது இல்லை என்பதாலும், மேலும் படம் ஓரளவுக்குத் தான் இருக்கிறது என்ற பேச்சும் உள்ளது. அதனால் மக்கள் அதை பெரிதும் சட்டை செய்யவில்லை.
பாலாவின் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் வணங்கான் படம் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதே பேச்சு.
பல வருடங்களாக தூசியடைந்திருந்த மதகஜராஜா, சந்தானம் காமெடிக்காக மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், பொறுமையா வந்த படம் தானே, நாமளும் பொறுமையாவே பாப்போம் என்ற ரீதியில் தான் என்போன்ற பல ரசிகர்கள் இன்னும் திரையரங்கின் பக்கமே காலடி எடுத்து வைக்காமலிருக்கக் காரணம்.
போக்கிரி பொங்கல், வாரிசு பொங்கல் என்று பட்டியலிட்டுப் பொங்கலிட்ட தமிழ் சினிமாவுக்கு இந்தப் பொங்கல் இனிப்பில்லாத வெண்பொங்கல் தான்.
பாக்கலாம், படங்கள் எப்படி இருக்கிறது என்று.
எதிர்பார்ப்புடன், ஏமாற்றத்துடன்
நினைவுகள்.