Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பயணம்- போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு நன்றி

நமது கடந்த பதிவு ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளை. அதன் விளைவு, பண்டிகைகளுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது சற்று சிரரமமான காரியமாகி விட்டது.

அரசுப்பேருந்துகளிலும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது.

டீலக்ஸ் ரக சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் கூட, ஒரு சில மக்களுக்கு அந்தக் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டாம் என்ற எண்ணம்.

மகிழுந்து அதாவது கார் வைத்திருக்கும் மக்கள் ஆம்னிப் பேருந்தின் கட்டணத்தை மனதில் கொண்டு, 4 பேர் காரில் பயணித்தால், ஆம்னிப்பேருந்து கட்டணத்தை விடக் குறைவு தான் என்று காரில் கிளம்பி விடுகிறார்கள்.

கார் இல்லாத மக்கள், தூரத்தைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் கிளம்பி விடுகிறார்கள்.

இதனால் வழிநெடுக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் படும் அவதியும், பல மீம்களாக வருவதைப் பார்க்க முடிகிறது.

இதில் நானும் விதிவிலக்கல்ல. இந்த முறை இருசக்கர வாகனத்தில் நாமும் ஒருகை பார்த்து விடலாம் என்று கிளம்பியாச்சு. உண்மையிலேயே ஒரு எதிர்பாராத அனுபவம் தான்.

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பினால் செங்கல்பட்டு தாண்டவே சனிக்கிழமை காலை ஆகிவிடும் என்பதால், சனிக்கிழமை காலை கிளம்பினேன்

வெள்ளிக்கிழமை கூட்டம் எல்லாம் செங்கல்பட்டை தாண்டி பாதி தூரம் கடந்து விட்டாலும் கூட என்னைப்போல, சனிக்கிழமை கிளம்பிய கூட்டம் சற்றே அதிகம் தான். இன்னைக்குமா? என்ற ரீதியில் கூட்டம் இருக்கத்தான் செய்தது.

இருந்தாலும் இருசக்கர வாகனம் என்பதால் பல இடங்களில் புகுந்து தப்பித்து விட்டேன்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடி வந்த போது நான் கண்ட நிகழ்வு மனதை மகிழ்வித்தது.

இருசக்கர வாகனங்களுக்குப் பிரத்யேகமாக ஒரு சாலை விலக்கு இருந்தது. செங்கல்பட்டு காவல்துறை அங்கே பந்தலிட்டு அமர்ந்து 24 மணி நேரமும் வாகன சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது பரவாயில்லை. மதுராந்தகம், செங்கல்பட்டு பாலங்களில் தனி நபராக ஒரு காவல் அதிகாரி வாகன சீரமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
தனி ஆளாக போகும் வரும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டு, பண்டிகைக்கு ஊருக்குப் போகாமல், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, ஊருக்குப் போகும் மக்களை தன் குடும்பகமாக பாவித்து காவலில் ஈடுபட்டிருந்த அனைத்து காவலர்களுக்கும் அன்பு வணக்கங்கள்.

நாமே வண்டி ஓட்டுனராகும் போது சற்றே சின்சியர் சிகாமணி ஆவது வழக்கம் தான்.

சோறு தண்ணி இல்லாமல், போகுமிடத்தை எவ்வளவு சீக்கிரம் அடையப் போகிறோம் என்ற எண்ணத்திலேயே இருப்பதால், சரியான நேரத்தில் சாப்பிடுவது கிடையாது.

அதே மனநிலையிலிருந்த நானும் மாலை 4 மணி வரை மதிய உணவுக்காக வண்டியை நிறுத்தவில்லை.

மாலை 4 மணிக்கு ஒரு உணவகத்தில் மதிய உணவு கிடைப்பதே அரிது. ஆனாலும் கிடைத்தது.

எதிர்பாராத கூட்டம் காரணமாக அந்த உணவக ஊழியர்கள் சரியாக சாப்பிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனாலும் 4 மணிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் தன் திமிரைக் காட்டிய பலரை சந்திக்க நேர்ந்தது.
“ஹலோ, என்னாங்க. நான் வந்து 15 நிமிஷமாச்சு, சர்வீஸ் இருக்கா இல்லையா?”

“இல்லைனா இல்லைனு சொல்லுங்க” என்று திமிராகப் பேசியவர்களைக் காண நேர்ந்தது.

நானும் சிறிது கடிந்து கொண்டேன், என்னை விட்டு விட்டு அந்த திமிர் பிடித்தவர்களுக்குப் பதில் சொன்ன காரணத்தால்.

நான் வழக்கமான எனது பாணியில் தான் பேசினேன். அண்ணே சோறு போடுணே என்று.

அந்த திமிர் ஆசாமியிடம் ஒருவேளை அந்த ஊழியர் சோறு இல்லை போடா என்று சொல்லியிருந்தால் குடும்பத்தோடு பட்டினி தான்.

ஆனால் திமிர். சர்வர் தானே என்ற திமிர்.
தனது உயர் அதிகாரியிடம் காட்ட இயலாத திமிர். தன் பெஞ்ஜாதியிடம் காட்ட முடியாத ஆன்மை.

பாவம் அந்த சர்வரிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்துகொண்டார்.

இப்படி பல விதமான அனுபவங்களையும் மனிதர்களையும் சந்தித்த பிறகு எனது பயணமும் ஒரு சிறிய களைப்புடன் இனிதே நிறைவடைந்தது.

களைப்பு தான் என்றாலும், ஆம்னி பேருந்தின் கொள்ளை விலையில் சிக்காமல் தப்பித்த ஒரு சிறு ஆறுதல் மனதிற்கு இதம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன் நினைவுகள்