பண்டிகைகள் வந்தாலும் போதும் இந்த ஆம்னிப் பேருந்துகளுக்குக் கொண்டாட்டம் தான்.
பொங்கலையே நம்பியிருக்கும் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை விடிவதாயில்லை. மஞ்சள் விளைவிப்பனிடம் பேரம், காய்கறி விலை ஏறினால் காட்டம் காட்டும் பொதுமக்கள், இந்த ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளைக்கு விடிவு காலம் வராதா என்று ஏங்கினால் மட்டும் போதாது.
எப்படி தக்காளி விலை கட்டுபிடி ஆகாத காலத்தில் தக்காளியைத் தவிர்க்கிறோமோ, அதே போல முருங்கைக்காய் விலை உயரும் போது, முருங்கைக்காய் இல்லாம சாம்பார் ருசிக்காதா என்று பழகிக் கொள்ளும் மக்கள், இந்த ஆம்னிப்பேருந்துகள் நியாயமான விலையை விட அதிகம் வைக்கும் போது அதைப் புறக்கணிக்கத் துவங்கினால் ஒழிய இதற்கு விடிவு காலம் வராது.
நேற்று இது சம்பந்தமாக தமிழ் நாளிதழ் ஒன்றில் ஒரு தலையங்கம் வந்தது.
ஆம்னிப் பேருந்துகள் வழக்கம்போல கட்டணக் கொள்ளையடிப்பது பற்றியும், அதைத் தடுப்பதற்காக அரசாங்கம் செய்யும் மேம்போக்கான சில கூற்றுகள் பற்றியும் புகாராக எழுதப்பட்டிருந்தது.
சும்மா சாலைகளில் ஒரு நாலு ஆம்னிப் பேருந்துகளில் ஏறி இறங்கி பரிசோதனை செய்து விட்டு அதில் இரண்டு பேருந்துகளிப் மீது நடவடிக்கை எடுத்து விட்டு, நாங்களும் கட்டணக் கொள்ளையைத் தடுத்தோம் என வித்தை காட்டுவதாக எழுதப்பட்டிருந்தது. உண்மையிலேயே இந்தப் பேருந்துகளின் இருக்கைகள் விற்பனையாகும் இணையப்பக்கங்கள் சிலவற்றைப் பார்த்தாலே தெரியும் கட்டணக் கொள்ளை எப்படி ஜோராக நடைபெறுகிறது என்று.
ஆனால் அரசாங்கத்திற்கு அதில் அக்கறை இல்லை.
ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி முதலாளிகளைப் பகைத்துக் கொள்ள எந்த அரசும் முன்வராது.
ஏன் பாதி தனியார் பேருந்துகளின் முதலாளிகள் அரசியல்வாதிகளின் பினாமிகளாகக் கூட இருக்கலாம்.
அப்படியிருக்கும் போது இந்தக் கட்டணக்கொள்ளை தடுக்கப்பட ஒரே வழி, நம் கையில் தான் உள்ளது.
புறக்கணிப்பு எனும் ஆயுதத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டால் எவனும் கொள்ளை அடிக்க நினைக்க மாட்டானல்லவா.
எப்போதும் சந்தை என்பது நியாயமாக சமநிலையோடு இருக்க வேண்டும். அந்த சமநிலையைப் பாதுகாப்பதில் நுகர்வோருக்குத் தான் பெரும்பங்கு இருக்கிறது. ஒரு பொருளின் விலை அதன் நியாயமான மதிப்பைத் தாண்டி விற்கப்படும் போது, அது நமக்கு அத்தியாவசியமானதாகவே இருந்தாலும் அதைப் புறக்கணித்துப் பழகி விட்டால், எந்தப் பொருளும் சந்தையில் நியாயமில்லாத மதிப்புடன் விற்பனை ஆகாது.
இங்கே யாருக்கும் தனது மதிப்பைத் தாண்டி, செய்யும் வேலையைத் தாண்டி சம்பளம் தரப்படுவதில்லை.
ஏன் கட்டணக் கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் கூட வழக்கமான சம்பளத்தைத்தான் பெறுவார்களே ஒழிய, அடிக்கப்படும் கொள்ளையில் பங்குப் பணம் ஏதும் தரப்படப்போவதில்லை.
அப்படியிருக்கும் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக, அந்தப் பேருந்து ஊழியர்களும் கூட தனது முதலாளிகளை எதிர்த்து குரலை உயர்த்தலாம். ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்று.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு நம் கையில் தான் உள்ளது.
நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்குப் அநியாயம் கூட சினிமாப்படங்களில் வந்துவிட்டது. ஆனால் இந்த கட்டணக் கொள்ளை இன்னும் பெரிய வெளிச்சத்திற்கு வரவில்லை.
வரவும் வாய்ப்புகள் குறைவு.
நாம்தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் நமது வயிற்று எரிச்சலைக் கொட்ட வேண்டும்.
தொடர்ந்து பேசுவோம்.
பிரச்சினை தீரும் வரை பேசுவோம்.
ஆதங்கத்துடன் நினைவுகள்.