Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஒரு குடிமகனின் கருணை மனு.

இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை.

ஒரு கிராம மக்கள் எழுதும் மனு.

ஐயா, வணக்கம்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம்.

ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று.

சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் வாங்க என்று கூறி, மின்சாரத்துறை உடனடியாக செயல்பட்டு எங்கள் ஊருக்கு இப்படி மூன்று வாரமாக மின்சாரம் இல்லாத நிலையை மாற்றி இருந்தால், நான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன் சொல்லியிருப்பேன் “நான் இந்தியன்” என்று.

அது பரவாயில்லை, அவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், ஒரு கிராமத்து மக்களின் மனக்குமுறல் அவர்களுக்கு என்ன விளங்கவா போகிறது?

கிராமத்து மக்கள் இரவில் குளிரூட்டும் சாதனத்தை இயக்கியா உறங்கப் போகிறார்கள்? கிராமத்துப் பிள்ளைகள் நிலவொளியில் கூட படிப்பார்களே?
கிராமத்து முதியவர்கள் இருளிலும் பார்வைக் குறைபாடின்றி சரியாக நடந்து செல்பவர்களாயிற்றே என்ற எண்ணத்தில் மூன்று வாரமாகியும் எங்கள் ஊருக்கு மின்சாரம் வராததைப் பற்றி வருத்தப்படாமல் சிந்திக்காமல் இருந்திருக்கலாம்.

ஒருவேளை எங்கள் கிராம நிர்வாக அலுவலரோ, அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளரோ கூட இதுபற்றி அறியாமல் இருந்திருக்கலாம்.

பரந்த பாரதத்தில் இந்த குட்கிராமத்தில் மூன்று வாரமாக மின்சாரம் இல்லை என்றால் என்ன ஆகி விடப்போகிறது என்று கூட நினைத்திருக்கலாம்.

மின்சார வாரியத்தில் விசாரித்த போது பக்கத்து கிராமத்திலிருந்து இங்கே மின்சார வினியோகம் தருவதற்கு ஏற்பாடு நடைபெறுவதாகச் சொன்னார்கள்.
ஒரு நகரத்திலுள்ள மிகப்பெரிய திரையரங்கில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டால் அடுத்த மூன்று நொடிகளில் மின் இணைப்பு வரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவிட்ட பாரதத்திருநாட்டில் ஒரு 5000 மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு மின் இணைப்பை சீரமைக்க மூன்று வாரம் போதவில்லை எனும் போது, நான் எப்படிப் பெருமையோடு “நான் ஒரு இந்தியன்” என்று சொல்வேன் ஐயா?

காவல்துறையிடம் “குற்றவாளியைப் பிடித்து விட்டீர்களா?” என்று கேட்டால், “ட்ரான்ஸ்பார்மரோடு, மின் இணைப்பு கம்பிகளும் காணாமல் போயிருக்கிறது. மின் வாரிய ஊரியர்களின் துணை இல்லாமல் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை” என்று கூறுகிறார்கள்.

ஐயா, எங்கள் ஊரின் மின்சாரம் திருடப்பட்டு இப்போது யாருக்குச் செல்கிறது?

வேறேதேனும் வளர்ச்சிப் பணிக்குச் செல்கிறதா?

அப்படி ஏதாவது தங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லிவிடுங்கள். ஒரு நாட்டிற்காக ஒரு கிராமத்தை இழப்பதாக எண்ணிப் பெருமை அடைந்து கொள்கிறோம்.

நாங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வது பெரிய கடினமான காரியமல்ல. ஆனால் மின்சாரம் இல்லாத காரணத்தால் சென்ற வாரம் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட மன் கி பாத் நிகழ்ச்சியை எங்களால் காது குளிரக் கேட்க முடியவில்லை. அதில் பாரத நாட்டின் முன்னேற்றம் பற்றிப் பேசும் நீங்கள் ஒரு வேளை எங்கள் கிராமத்தின் மின்சாரம் எடுக்கப்பட்டு எங்கே கொடுக்கப்பட்டது என்று சொல்லியிருப்பீர்களோ என்ற ஏக்கம் எங்களைத் தூங்கவிடுவதாயில்லை.

மின்சாரம் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை இனி இல்லை. உத்திரப்பிரதேச மாநிலம் புதான் மாவட்டத்தில் உள்ள சோரா கிராமம் மின்சாரம் இல்லாத கிராமப் பட்டியலில் இணைக்கப்படுகிறது என்று சொல்லிவிட்டீர்களோ என்று பரிதவித்து இருக்கிறோம்.

எது எப்படியோ, வெளிச்சத்தில் மனு எழுதியிருக்கிறோம், எங்கள் இருளை நீக்க.

கட்டாயம் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் சோரா கிராமப் பொதுமக்கள்

சார்பாக, கற்பனையாக

நினைவுகள்!