நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ?
“வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது.
அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது.
சிறுவயதிலேயே பல வேடங்களில் நடித்த கணேசன், திராவிட கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி நடித்து, பெரியாரின் மனம் கவர்ந்தார்.
நீதானே சிவாஜியாக நடித்த கணேசன்?
நீ சிவாஜி கணேசன் தான் என்று பெரியார் பாராட்ட, இவர் சிவாஜி கணேசன் ஆனார்.
பராசக்தி படத்தின் மூலம் கலைஞரின் வசனம் பேசி பெரிய திரைக்கலைஞராகவும் உருவானார். அந்தப்படத்தில் புதுமுகம் நடிக்கக் கூடாது என்ற பல எதிர்ப்புகளையும் மீறி வென்று காட்டியவர்.
நாளடைவில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அங்கே அவருக்கு ஒரு சிலையை தன் சொந்த செலவில் நிறுவினார் கணேசன். மேலும் பல லட்சத்திற்கு போரின் போதும், வெள்ளத்தின் போதும் உதவிகள் செய்துள்ளார்.
கட்டபொம்மனை, ராஜ ராஜ சோழனை, சிவனை, சிவனடியாரை, திருவருட்செல்வரை, வ.உ.சிதம்பரனாரை, இப்படி பல பல தலைவர்கள், கடவுள்கள், அரசர்கள் என பல பேர்களை நாம் நினைக்கும் போது சிவாஜியின் முகம் தான் நம் நினைவுக்கு வரும். அந்த கதாபாத்திரங்களுக்கு அவர் அப்படி உயிர் கொடுத்து நடித்திருந்தார்.
நடிப்புச் சக்கரவர்த்தி , பத்ம்பூஷன் விருதை அடைந்த்து போல, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் பெற்றார். செவாலியே விருது பெற்ற ஒரே இந்திய நடிகர், அதுபோல வெளிநாட்டுப் பரிசுகளை அன்றைய தேதியில் அள்ளிக் குவித்த சாமானிய இந்திய சினிமாக்காரர்.
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றிலும் ஒரு வலம் வந்திருக்கிறார்.
கர்ணன் கதாபாத்திரமாக நடித்த காரணத்தாலோ என்னவோ, தனது மனைவியின் மொத்த நகை, 400 சவரனையும், தனக்குப் பரிசாகக் கிடைத்த 100 சவரன் பேனாவையும் சேர்த்து 500 சவரனை போர்க்கால நிதி உதவியாக இந்திய பாகிஸ்தான் போரின் போது, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் ஒப்படைத்தார்.
இப்படி சினிமாவிலும் வாழ்விலும் நமக்குப் பல நல்ல நினைவுகளை உருவாக்கிய இவர் 275 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த பெருமையை உடையவர். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வென்ற இந்த பெரிய மனிதர், இன்றைய தலைமுறையுடனும் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்திருக்கிறார்.
இரு தலைமுறை ரசிகர்கள் உடைய இவர், நகைச்சுவை, நையாண்டி, ஆக்ஷன், சென்டிமென்ட் அட என்ன சார், சிவாஜி கணேசன்னு சொன்னா போதாதா என்று நீங்கள் சலித்துக்கொள்வது புரிகிறுது.
நினைவுகள் வாசகர்களோடு நடிகர்திலகத்தெப் பற்றிய நினைவுகளைப் பகர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும்.