Categories
அறிவியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

விளக்கேற்றி கைதட்ட வேளை வந்துவிட்டதா?

நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது.

மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம்.

ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,
அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டோடு தவித்து துடிதுடித்து இறந்து்போன பல உயிர் பலிகளுடன், நமது கண்களைக் குளமாக்கி கனத்த இதயத்தோடு, போதும்டா இந்த லாக்டவுனும், கொரோனாவும். தயவு செய்து இனி எல்லாரும் ஒழுங்காக வேலைக்குப் போகலாம் என்று பயந்து, எத்தனை தடுப்பூசி வேண்டுமானாலும் போட்டுக் கொள்கிறோம் என்று ஆளுக்கு இரண்டு தவணை ஊசி போட்டதும் இல்லாமல் பூஸ்டர் ஊசியும் போட்டுக் கொண்டு இனி வைரஸ் வராது என்று நம்பி வாழத்துவங்கி, ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்பத்தான் வாழ்க்கைக்கு ஒரு பாதை தெரியுதுனு நம்பி நடக்க ஆரம்பிக்கும் முன்பே, இதோ மீண்டும் ஒரு புதிய வைரஸ். பிறப்பிடம் நெதர்லாந்து என்றாலும், அது பக்குவமாகப் படிப்படியாக வளர்ந்து உலகிற்குள் பாதுகாப்பாகப் பரவியது நமது சைனா பங்காளிகளின் மூலமாகத்தான்.

HMPV- Human Metapnuemo Virus.
இதுவும் சுவாசத்தொற்று தீநுண்மி தான்.
பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு இது சுவாசப் பாதையில் தொற்று மற்றும் சளியை உருவாக்கும் வகை.

HMPV கட்டமைப்பு விளக்கப் படம்.

பெரியவர்களிடமும் இப்போது அதே போலப் பரவியிருக்கிறது.

கொரோனா எப்படி நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதே போன்ற ரகம் தான் இதுவும்.

குறைப்பிரசவக் குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆட்களுக்கு இந்த நோய்க் கிருமி கடுமையான பாதிப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையையும் ஏற்படுத்தக் கூடும்.

ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்களும் இந்த தீருண்மிகளிடம் உஷாராக இருந்தாக வேண்டும்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கும், தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் இந்த வகை வைரஸ் தொற்று வந்து விட்டதாகத் தகவல் பரவியுள்ளது.

இதை நினைத்தால் மனது பதைபதைக்கத்தான் செய்கிறது. மீண்டும் தட்டு டம்ளர் எனக் கொட்டடித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, முதலில் இருந்து ஆரம்பிக்கப் போகிறோமா என்று நினைத்தாலே ஸப்பா.

இதில் அறிவாளிகள் பேட்டி வேற கொடுப்பார்கள்.

ஒரு நாள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராவிட்டால் வைரஸ்கிருமி பசியில் செத்துப் போய்விடும்.
அதற்குப் பிறகு நாம நிம்மதியா, சந்தோஷமா இருக்கலாம்னு.

இன்னும் சில பைத்தியங்கள், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஏன் மணியடிச்சு, விளக்கேத்தனும்னா, அந்த டைம்ல 9 கிரகமும் நேர்கோட்டுல வரும் அப்ப நாம விளக்கேத்துறப்பவும், மணியடிக்கிறப்பவும் வரும் ஆற்றலானது, ஆழிப்பேரலையின் ஆற்றலையும் விட அதிகமானது.
அது வைரஸ்களை துவம்சம் செய்து விடும் என்று மனசாட்சியே இல்லாமல் பேசுவார்கள்.

எது எப்படியோ, இதோ ஊடகங்கள் தம் பங்குக்கு ஆரம்பித்துவிட்டார்கள்.

ஊடக விழிப்புணர்வுச் செய்தி

போதாக்குறைக்கு நாங்களும் பழைய கொரோனா நினைவுகளைக் கிளறிவிட்டோம்.

பார்க்கலாம். மீண்டும் பழைய கதைதானா என்று.

எதுக்கும், சீட்டுக்கட்டி, பல்லாங்குழி, தாயக்கட்டை எல்லாம் எடுத்து பத்திரப்படுத்தி வைப்போம்.

அக்கறையுடன் நினைவுகள்.