நிகழ்ந்த அந்த மறக்க முடியாத பேரழிவும், நிகழும் இப்போதைய விளைவுகளும், வளர்ச்சி என்ற பெயரில் தான் முதலில் துவங்கப்பட்டது.
விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஏதோ ஒரு பெயரில் தான் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எலிகளின் மீது சோதனை ஓட்டம் போல வளரும், வளராத நாடுகளில் மக்கள் தொகையுள்ள நகரங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
நான் இங்கே பேசுவது போபால் விஷவாயு சம்பவத்தை உருவாக்கிய யுனியன் கார்பைடு நிறுவனத்தைப்பற்றி தான்.
விவசாய வளர்ச்சி என்ற காரணம் கூறித் துவங்கப்பட்ட அந்தப்பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலை, நமக்குத் தந்த பேரழிவைப் பற்றி திரும்ப ஒரு முறை பேச வேண்டிய அவசியமில்லை.
வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்பது மிகக்கோபமான சாபம். அத்தகைய சாபத்தை சாதாரணமாக வளர்ச்சி என்ற பெயரில் ஒரு நகரத்தின் பொதுமக்களுக்கு இந்த அரசாங்கம் பரிசாக அளித்தது.
இறுதியில் இந்தப்படுகொலைகள் ஒரு விபத்தாகத் தான் வரலாற்றில் பதியப்பட்டது. அந்த விபத்தை ஏற்படுத்திய நிறுவனமோ அல்லது அதன் நிர்வாகப் பணியாளர்களோ, கடுமையாக தண்டிக்கப்டவில்லை.
மாறாக அபராதம் வேண்டுமானால் விதிக்கப்பட்டிருக்கலாம்.
1984 ஆம் ஆண்டோடு இந்த விபத்தோடு இது ஒழிந்த்து என்றும் இதை முடித்து விடமுடியவில்லை.
இந்தப் பேரழிவின் பக்க விளைவுகளால் மக்கள் இன்றளவும் தினம் தினம் சந்தித்து வரும் சீரழிவுகளும் உண்டு.
குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள், விபத்தில் முழுதாக இறந்து போகாமல் உயிர் பிழைத்த மக்கள் படும் ரனவேதனை போன்ற சீரழிவுகளைத் தாண்டி இன்னொரு அதிர்ச்சியும் இதில் உள்ளது.
விபத்து நடந்த அந்த ஆலையிலருந்து கழிவுகள் இப்போது அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
377 டன் கழிவுகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகத் தகவல். அதை இத்தனை ஆண்டுகளாக , அரசாங்கமும் செய்யவில்லை, லாபம் சம்பாதித்த யூனியன் கார்பைடு நிறுவனமும் செய்யவில்லை.
இத்தனை ஆண்டுகளாகியும் இதை செய்ய முடியவில்லையா என்ற நீதிமன்றம் கண்டித்த பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதிலும் சிக்கல் என்னவென்றால் இந்தக் கழிவுகளை அப்படியே வைத்திருக்கவும் முடியாது.
எரித்து விட வேண்டும். எரித்த அந்த சாம்பலில் விஷத்தன்மை இருக்குமாம். அதை புதைத்து விட வேண்டுமாம்.
புதைத்த அந்த சாம்பல் நிலத்தடி நீரோடு கலந்தால் மீண்டும் நச்சு.
அப்படியே இந்த சாம்பல் காற்றில் கலந்தால் காற்றில் மீண்டும் நச்சு.
இதை அப்புறப்படுத்த பல வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்புதல் பெறப்பட்டாலும், அந்த நாட்டின் எதிர்ப்பு காரணமாக அது நிகழவில்லை.
எனவே இது இப்போது நமது தலைவலியாகி விட்டது.
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூர்விகமான அமெரிக்க நாட்டிறகுள், இதிலிருந்து ஒருபிடி சாம்பலைக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.
வளரும் நாடுகள் தான் பாவப்பட்டவர்கள்.
இப்போது இந்தக் கழிவு ஏற்றப்பட்டு, கன்டெய்னர் லாரிகள் மூலமாக அருகே உள்ள நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பீதாம்பூர் என்ற தொழில் நகரம் அது. போபாலில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது.
இப்போதும் அந்தக் கழிவு விஷம்தான் என்ற காரணத்தால், அதை இந்த ஊரில் அழிக்கக் கூடாது, என்று போராட்டம் வெடித்திருக்கிறது.
வழக்கம்போல் போராட்டக்காரர்கள் வளர்ச்சிக்கு எதிரான ஆட்கள் என்று சொல்ல முடியவில்லை.
இம்முறை அரசு உத்தரவை, அல்லது நீதிமன்ற உத்தரவைச் செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று கைது செய்யப்பட்டிருக்கலாம்.
இதே போன்று அன்று அந்த ஆலை நிறுவப்படும் முன்பே யாராவது தடுத்திருந்தால், இந்த வளர்ச்சி எனும் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். எம்மக்கள் வளராவிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.
இப்படி 40 ஆண்டுகள் கழித்தும், எமது மக்களைப் பயமுறுத்திப் பழிவாங்கும் இந்த நச்சுக் கழிவுகளை இப்படி நாம் மடியில் சுமக்க வேண்டிய அவசியமில்லையே!
ஆதங்கத்துடன் நினைவுகள்.