Categories
நினைவுகள்

கடைசிப் பேருந்து.

எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும்.

அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம்.

இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான்.

கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் கடைசிப் பேருந்து. இரவு 10.45 மணிக்கு எடுத்து 11.30 க்கு எட்டயபுரம் அடையும்.

முதலில் லயன் என்ற நிறுவனம் ஓட்டியது, பிறகு திருமுருகன். இப்போது என்னவென்று தெரியவில்லை.

ஆனால் கடைசிப்பேருந்து. அதாவது 10.45 வண்டி என்றால் பிரபலம்.

கோவில்பட்டி என்பது நகராட்சி. என் ஊர் பேரூராட்சி.

ஆதலால் மிக வெகு ஜனம் எங்கள் ஊரிலிருந்து கோவில்பட்டிக்கு தான் வேலைக்கு செல்வார்கள்.
பெரும்பாலானோர் ஜவுளிக்கடைகளில் விற்பன்னர்.

ஜவுளிக்கடை விற்பன்னர் வேலைக்கு எட்டயபுரம் ஆட்கள் என்றால் மவுசு தான்.

அதனாலேயே ஜவுளிக்கடைகளில் விற்பன்னர் வேலை செய்யும் எங்கள் ஊர் ஆட்கள் அதிகம். விரல் விட்டு எண்ணினால், ஒரு பேருந்துக்கு ஆள் சேர்ந்து விடும்.
அதில்லாமல் கோவில்பட்டிக்கு மொத்த வியாபாரத்துக்காக வரும் வியாபாரிகள், வழியிலிருக்கும் ஊர் மக்கள், சில்லறை வேலைக்கு வந்தவர்கள், படம் பார்க்க வந்த இளவட்டங்கள், எதிர்பாராமல் வெளியூர் சென்று கோவில்பட்டி கடைசிப் பேருந்தைக் கணக்கிட்டு வந்து சேர்ந்தவர்கள் என அந்தப் பேருந்துக்கு எப்போதும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

புதுப்பட ரிலீஸ் போல, ஒவ்வொரு நாளும் 10.45 க்கு ஒரு கொண்டாட்டமாகத் தான் இருக்கும்.
என்னங்க EMARல வேலை பாக்குற ஆளுக வரல? அப்படின்னு நடத்துனர் கேட்டு, பேருந்தைக் கிளப்பும் அளவிற்கு அதில் தினசரி பயணிக்கும் ஆட்கள் வழக்கமானவர்கள். சில நாட்களில் முன்னமே யாருக்காவது தகவல் சொல்லி, பேருந்து ஊருக்குப் போகும் வழியில் ஓரிரு ஜவுளிக்கடைகளில் நின்று ஆட்களை ஏற்றிச் செல்லும்.

வியாபாரிகள் கொண்டு வந்த மொத்த சாமான் பைகள், ஜவுளிக்கடைகளில் வேலைக்கு வந்தவர்கள் சாப்பாடு கொண்டு வந்த கைப்பை, என்று மனிதர்களையும் தாண்டி அந்தப் பேருந்து சுமந்த விஷயங்கள் அதிகம்.
ஒரு நாள் முழுக்க வேலை செய்து விட்டு இரவு 11.30 மணிக்கு ஊர் போய்ச்சேரப் போகும் மக்கள், வீட்டிற்குச் சென்று சிரித்துப் பேச நேரம் இருக்குமா?

வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே பாதி தூக்கம் தூங்கியிருப்பார்களே?

வேலை நேரத்திலும், முழுக்க வேலை தான்.
அதனால், அந்த ஒட்டுமொத்த மக்களின் அளவளாவலும், சிரிப்பும் இந்தப் பயண நேரமான 30 -45 நிமிடத்தில் தான்.

அந்த ஒட்டுமொத்த நாளையும் பற்றிப் பேசி விட்டு ஏதாவது அரசியல் பேசி, இடையிடையே பேருந்தில் ஓடும் நடுத்தரப் பாடல்களையும் ரசித்துக்கொண்டே அவர்கள் உதிர்த்த மொத்த சிரிப்பையும் அந்தப்பேருத்து தான் தங்கியிருக்கும்.

அவர்கள் எப்படிச் சிரிப்பார்கள் என்று கேட்டால், அவர்களிடம் நெருங்கிய உறவான மற்ற ஆட்களுக்குத் தெரியாவிட்டாலும் அந்தப் பேருந்துக்குத் தெரியும்.

எப்போதும் காரணமில்லாமல் எந்தவொரு நினைவுகளும் தூண்டப்படுவதில்லை. நேற்று நான் வேறொரு கடைசிப்பேருந்தில் பயணித்த போது எனக்கு இந்த இனிய கடைசிப் பேருந்தின் நினைவுகள் தூண்டப்பட்டது.

நான் பயணித்த கடைசிப்பேருந்து அரசுப்பேருந்து, தனியார் அல்ல.

இந்தப்பேருந்து 10.30 மணி புளியங்குடி என்று பிரபலம். இதே கோவல்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி செல்லும் பேருந்து.

இதில் சங்கரன்கோவிலும், புளியங்குடியும், வேறு மாவட்டமாகிப்போவதால் இந்தப் பேருந்தில் இரவில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கைக் குறைவு தான்.
கழுகுமலையிலிருந்து 4-5 பேர் வரை கோவில்பட்டிக்கு வேலைக்கு வந்தவர்கள் என்னோடு பயணித்தார்கள். பேருந்து கழுகுமலையைத் தாண்டிய பிறகு என்னையும் எனது மனைவியையும் தவிர பேருந்தில் வேறு எந்தப் பயணிகளும் இல்லை.

ஆட்களே இல்லாத கடைசிப் பேருந்து

பேருந்து சங்கரன்கோவிலைத் தாண்டிய பிறகு, ஓட்டுனரும், நடத்துனரும் மட்டுமே பேருந்தை இயக்கிப் புளியங்குடி நோக்கிப் பயணித்தார்கள்.

இதுவும் ஒரு சிறப்பான உணர்வைத் தந்தது என்பதும் மாற்ற முடியாத உண்மை தான்.

பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த காரணத்தால், இந்த முறை இந்தக் கடைசிப்பேருந்து, ஓட்டுனர், நடத்துனரின் சிரிப்புச் சத்தத்தையும், மனதின் சுமைகளையும் தாங்கி வந்தது. இருவரும் அவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு நொடி கூட வீண்டிக்காமல் சிரித்துப் பேசிக்கொண்டே வந்தார்கள்.

நடுவில் ஒரு ஊரில் நிறுத்தி, இருவரும் வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதற்கிடையே அவர்கள் அலைபேசியிலிருந்து, அவர்களுக்குப் பிடித்த பாடலை பேருந்தில் இருந்த ஒலிப்பான்கள் மூலமாக ஒலிக்கச் செய்தார்கள்.

இதில் பொட்டு வைத்தத்தங்கக் குடம் பாடல் ஒலித்த போது, பேருந்தில் இருந்த 7 பேரும் ஹாப்பி.

ஒவ்வொரு கடைசிப் பேருந்தும் சிறப்பு தான்.

யாரோ ஒருவரை தன் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறது.
ஒரு நாள் முழுக்க ஓடிய கால்கள், அந்தப் பேருந்து ஓட்டத்தில் ஓய்வெடுக்கிறது.

முதலாளிகளிடம் வசை வாங்கிய காதுகளில் இனிய பாடல்கள் ஒலிக்கிறது.

இறுகிப்போயிருந்த முகங்கள் சிரிக்கிறது.

இப்படி மனிதர்களை மகிழ்விக்கும் கடைசிப் பேருந்துகள் என்றுமே அழகு தான்.

அன்புடன் நினைவுகள்.