Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்

கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

கல்வி வளர்ச்சி நாள்
ஜூலை 15

கல்வித்தந்தை, கர்மவீரர், மகத்தான தலைவர் ஐயா காமராஜர் அவதரித்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்று 2006 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு முதல் ஐயாவின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜர் என்ற மாமனிதன் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அவதரித்த போது, அவருக்கே கூடத் தோன்றியருக்காது, பிற்காலத்தில் நமது பிறந்தநாள் தமிழக மக்களால் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படும் என்று.

அதற்காக அவர் மெனக்கெட்டு எதையும் செய்ததாக அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. தன்னால் முடியாத ஒன்றை, தனக்குக் கிடைக்காத ஒன்றை தம் போன்ற ஏழைப்பிள்ளைகளுக்குக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய கர்மவீரர்.

வேறொன்றும் அல்ல கல்வியைத்தான்.

தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

3 கிமீ தொலைவிற்குள் ஒரு ஆரம்பப் பள்ளி, பசி காரணமாக கல்வி இடைநிற்றல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தமிழகம் முழுக்க, ஆரம்பப் பள்ளிகளில் இலவச மதிய உணவு என்பதெல்லாம் இவரது கல்விக்கான பிரம்மாண்ட திட்டங்கள்.

நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் ஓரிரு பள்ளிகளில் இருந்த இந்த மதிய உணவுத் திட்டத்தை, தமிழ்நாடு முழுக்க அமல் செய்தவர் ஐயா காமராஜர்.

படிக்காத மாமேதை என்று அவர் போற்றப்படக்காரணம், அவரது தொலைநோக்கு சிந்தனைகளே ஒழிய வேறென்ன?

காமராஜர் காலத்தில் கல்வி கட்டமைக்கப்பட்டது போல, நீர் மேலாண்மையும் மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டது.

பல தடுப்பணைகள், சிற்றணைகள் இவரது ஆட்சிக்காலத்தில் கட்டமைக்கப்பட்டது. இவரது 9 ஆண்டு கால ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மக்களின் நலனிலும், வளர்ச்சியிலும் மட்டுமே அக்கறை கொண்டிருந்த காமராஜர் போல இன்னொரு அரசியல் தலைவரை நாம் தேடிக் கண்டுகொள்ள இயலாது என்றால் அது மிகையல்ல.

இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தானாகவே முன்வந்து பதவி ஆசைகளின்றி எல்லாவற்றையும் துறந்த காமராஜருக்கு , சொத்தோ, சொந்தமோ ஏதுமில்லை. கடைசி வரை மக்களுக்காகவே வாழ்ந்து இறந்து போன ஐயா காமராஜரை மக்களாகிய நாம் தவறாது நினைவில் கொண்டு போற்ற வேண்டும்

பாரத் ரத்னா.ஐயா.காமராஜர், கர்மவீரர், கலல்வித்தந்தை, மாமனிதன் பற்றி நினைவுகள் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டதில் பெருமை.