Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார்? போதுமா இது? – சிறு குற்றங்களின் தண்டனை விகிதம்

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை.

ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம்.

உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள்.

உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.
“கொலை பன்றவன், கொள்ளை அடிக்கிறவனலாம் விட்ருவாங்க. ரோட்ல சிக்னல க்ராஸ் பன்னவன வந்து புடிச்சு பெரிய தண்டனை கொடுப்பாங்க.”

இந்தக் கோபத்திற்குக் காரணம் என்னவென்றால், இந்த சிறிய குற்றத்தை செய்யும் குற்றவாளிகளில் ஒருவராக நாமும் இருக்கிறோம்.

இதே கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவங்களில், “குற்றவாளியை நீதிமன்றம் கூட அழைத்துப் போக வேண்டாம். நடுரோட்டிலேயே நாய் மாதிரி கல்லால் அடித்துக் கொல்லுங்கள்” என்ற வசனம் வரும்
ஏனென்றால் அந்த வகைக் குற்றத்தைச் செய்பவர்கள் சிறிய அளவிலானவர்களே!

அதானல்தான் இந்தக் கோபம். பாவம் முதல் தடவை கற்பழிச்சிருக்காரு, அவருக்கு என்ன மூடோ என்னவோனு யாரும் வக்காளத்து வாங்குவதில்லை.
ஆனால் சாலை விதிகளை மீறும் அனைவருக்குமே நாம் கட்டாயம் வக்காளத்து வாங்குகிறோம். பாவம் என்ன அவசரமோ?

என்ன அவசரமானாலும் விதியை மீறிவது குற்றம் தான், குற்றவாளிக்கு தண்டனை அவசியம் தான். இதில் காட்டப்படும் அலட்சியமும் சலுகையும் நாளை பெரிய குற்றங்களுக்கும் புலம் பெயரலாம்.

குற்றத்தின் அளவைப்பார்த்து தண்டனையில் சலுகை வழங்குவது சரியல்ல.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனங்களைத் தாறுமாறாக இயக்கக் கூடாது என்பதற்காக தணிக்கை செய்வதற்காக நூற்றுக்கணக்கான இடங்களில் போக்குவரத்துக் காவல்துறை சார்பாக வாகனத் தணிக்கைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

லட்சக்கணக்கில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பைக்குகளில் சாகசம் செய்பவர்கள், அதி வேகமாக வண்டியை ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தும் கூட, 5 பேர் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

230 வாகனங்கள் மேற்கண்ட குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் என்னவென்றால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அனைத்தும் மறுநாள் அந்த இளைஞர்களின் பெற்றோரை அழைத்து கண்டிக்கப்பட்ட பிறகு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடுகிறது.

இது அந்த இளைஞர்களிடையே ஒரு சிறிய பயத்தை உண்டு பண்ணியிருக்குமே தவிர, இனி இந்தத் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணத்தைத் தராது.
காரணம் இன்னொரு முறை இந்த பயத்தைத் தாண்டி யாராவது தைரியம் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் இதே தவறை செய்யத் துணியக் கூடும்.

பறிமுதல் செய்த வண்டிகளை குறைந்தபட்ச நீதிமன்ற அபராதம் கட்டியப்பிறகாவது ஓரிரு மாதம் கழித்துத் திரும்பத் தந்திருக்கலாம்.

அந்த இளைஞர்களுக்கு தண்டனை கொடுக்க மனமில்லை என்றால் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை சில நாட்களுக்கு வாங்கி வைத்துவிட்டுத் திரும்ப அளித்திருக்கலாம். அவர்களை வேறு ஏதாவது ஒழுக்கமான செய்கைகளை செய்ய வைத்திருக்கலாம்.

இப்படி ஏதுமில்லாமல் மறுநாள் காலையில் அவர்களை வரவழைத்து வண்டியைத்திரும்பக் கொடுத்து, திரும்ப சாகசம் செய்வதற்கு வாழ்த்தி அனுப்பியது போல அனுப்பிவிட்டது சற்றே ஏமாற்றம் தான்.

காவலுக்கு இருந்த லட்சம் காவலர்களின் பணிச்சுமையை மனதில் கொண்டேனும் அவர்களுக்கு சிறிய தண்டனையைக் கொடுத்திருக்கலாம்.

குற்றத்தின் அளவைப் பொறுத்து தண்டனைக்கு சலுகை வழங்கப்பட்டால், நாளை அதுவே வழக்கமாகி விடும்.

இனியாவது இப்படி நிகழாமல் இருக்குமா?
இந்த மன்னிப்பு அவர்களுக்கும், அவர்கறைப் போன்றோருக்கும் மனம் திருந்தச்செய்யுமா?

பார்க்கலாம், அடுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது.

எதிர்பார்ப்புடன் நினைவுகள்.