Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நினைவுகள் – 2024 – ஒரு  பார்வை

நினைவுகள் என்பது சாபமா, வரமா? என்றால் அது அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று.

எதைப்பற்றிய அல்லது எப்படியான நினைவுகள் என்பதைப் பொறுத்தே அது சாபமா அல்லது வரமா என்பது அமைகிறது.

மகிழ்ச்சி தரும் நல்ல நினைவுகளோ அல்லது வருத்தம் தரும் துயர நினைவுகளோ இரண்டும் இரவு பகல் போல ஒன்றில்லாமல், இன்னொன்றில்லை.

கடந்த 2024 ஆம் ஆண்டும் அதற்கு மாற்றில்லை.

நல்ல சுகமான நினைவுகளும் இருந்தது. சில துக்கமான நிகழ்வுகளும் இருந்தது.

அப்படி நாம் கடந்த அந்த சுகமான நினைவுகளை சிறிது அசை போடலாம்.

எனக்கு நினைவிலிருப்பதை, நாம் நினைவுகள் பக்கத்தில் அதிகம் படிக்கப்பட்டவைகளை மீண்டும் ஒருமுறை அசை போடலாம்.

எல்லா வருடங்களையும் போல, 2024 ம் சளைத்தது அல்ல.

திருமணமாகட்டும், விவாகரத்தாகட்டும், முன்னேற்றம், விபத்து, விளையாட்டுத் துறை சாதனை, விண்வெளித்துறை சாதனை, தனிநபர் சாதனை, புதுப்புது ரசிக்கத்தக்க சினிமா, பிரம்மாண்ட தோல்வி கண்ட சினிமா என அனைவரும் வியந்து சுவாரஸ்யமாக அசை போடும் விதமாகவே அமைந்தது 2024.

உலகின் நீளமான கடல் பாலம் அமைந்தது மும்பையில்.

மாதிரி தோற்றம்

மறக்க முடியாத கோர ரயில் விபத்து தமிழ்நாட்டில் கவரைப்பேட்டை அருகே நிகழ்ந்தது.

அகில உலக இளம் சதுரங்கப்போட்டி வெற்றியாளராக குகேஷ்.

20 ஓவர் மட்டைப்பந்து உலகக் கோப்பையை 17 ஆண்டுகள் கழித்து நமது அணி வென்றது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததோடல்லாமல், விவேகானந்தர் பாறையும், வள்ளுவர் சிலையும் கண்ணாடி இழைப் பாலத்தால் இணைப்பு.

கட்டப்பட்ட கண்ணாடி இழைப்பாலம்

இப்படி பல மகிழ்ச்சிகரமான செய்திகளோடு, கல்கத்தாவில், பெண் மருத்துவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், சமீபத்திய அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.
பாண்டிச்சேரியில் சிறுமி கொலை போன்ற மனதை வருத்தும் செய்திகளும் இருந்தன.

இவ்வாறான கொலையாளிகள் தக்கரீதியில் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக இளம்பெண்ணை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நம்முடைய பக்கத்திலும் கூட நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் அது பகிரப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டது.

இவ்வாறான கலவையான பல சம்பவங்களோடு, நாம் பதிப்பித்த, அதிகப்படியாக வாசிக்கப்பட்ட சம்பவங்களையும் நினைவில் கூறுகிறோம்.

நாம் எதிர்பார்க்காத விதமாக அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரை, கோவில் யானை பாகனைக் கொன்ற சம்பவம் தொடர்பானது.

அதேபோல, எனது சொந்த ஊர் திருவிழா அனுபவமும் பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்டது.

நாம் பகிர்ந்த்திலேயே அதிகம் வாசிக்கப்பட்டது GOAT திரைப்பட விமர்சனம் தான்.

விளம்பர முகப்புப் படம்

அதற்குப் பிறகு அதிகப்படியான வாசிப்பு, சமூக ஆர்வலருடனான நேர்காணல் கட்டுரை.

சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஏகன் அவர்களது நேர்காணல் கட்டுரையை விட இவரது நேர்காணல் கட்டுரை அதிகம் வாசிக்கப்பட்டது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

சினிமா விமர்சனங்களில் மெய்யழகன், அமரன், லப்பர் பந்து, புஷ்பா போன்ற படங்களின் விமர்சனங்களும் அதிகம் வாசிக்கப்பட்டது.

மெய்யழகன் விமர்சன முகப்புப் படம்

விடுதலை பகுதி – 2 படத்தின் விமர்சனம் தாமதம் காரணமாகவோ என்னவோ, சிறிது எதிர்பார்ப்பை விடக் குறைந்த எண்ணிக்கையைத் தான் அடைந்தது.

சினிமா விமர்சனத்திற்கு வாசகர்களிடமிருந்து எந்த விமர்சனமும் எழவில்லை. நமது விமர்சனம் சார்பில்லாமல் தரமானதாகவே இதுவரை எழுதப்பட்டு மக்களால் ஏற்கப்பட்டும் உள்ளது.

ஆசிரியர் சிவப்ரேம் எழுதிய வள்ளியம்மாள் பேராண்டி கட்டுரையும், பார்டர் கவாஸ்கர் கோப்பை கட்டுரையும் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை விளம்பர முகப்புப் படம்

வரும் ஆண்டுகளில் அவரது எழுத்துப்பங்களிப்பும் அதிகரிக்க வேண்டும் என்று வாசகர்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் விண்ணப்பிக்கிறேன்.

நினைவுகள் பக்கத்தில் பகிரப்பட்ட பழைய பொக்கிஷ சினிமாவில் மிகப் பழைய படங்கள் பெற்ற வரவேற்பை விட, நடுத்தர படங்கள் சற்றே அதிக வரவேற்பைப் பெற்றன. நூறாவது நாள் படம் அதில் குறிப்பிடத்தக்கது.

நினைவுகள் என்பது எல்லையற்றது.
இது இவ்வளவு தான் என்று கட்டமைக்க முடியாத ஒன்று. கண்டிப்பாக இன்னொரு சூழலில் நாம் தவறவிட்ட நல்ல நினைவுகளைத் தொடர்ந்து அசை போடலாம்.

அன்புடன் நினைவுகள்