Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

புத்தாண்டை வரவேற்போம்

புத்தம் புதிதாக பிரிண்டிங் பிரஸ் வாசனை நுகர்ந்து, சரஸ்வதியா, லட்சுமியா, பிள்ளையாரா, பெருமாளா என்று தேடித்தேடி எடுத்து ஆசை ஆசையாகத் தொங்க விட்ட நாட்காட்டி முழுதையும் கிழித்துத் தள்ளியாயிற்று. இன்று அது கலையிழந்து வெறும் எலும்புக்கூடாகத் தெரிகிறது.

நாம் கடந்து வந்தது, ஒரு ஆண்டு என்று எளிதாகச் சொல்லிவிட இயலாது.

365 நாட்கள். 8760 மணி நேரங்கள். இன்னும் நிமிடம் மற்றும் நொடிகளில் கணக்கிட்டால் பெரிய வியப்பாகத்தான் இருக்கும்.

வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும், பயனுள்ளதாக வாழும் ஆட்களைக் காண்பதரிது.

அப்படி வாழச் சொல்லவுமில்லை. ஆனால் அந்த 365 நாளில் ஏதோ ஒரு நொடியில் நமக்கான அந்த நேரம் பிறந்து நாம் வாழ்வில் இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் சென்று விடுவோம் என்ற நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு புத்தாண்டையும் எதிர் கொள்கிறோம்.

ஆனால் வழக்கம் போல, இந்த வருஷம் என்னத்தக் கிழிச்ச? காலண்டர் தாள மட்டும் தான் என்பது போன்ற மீம்களை டிசம்பர் மாதங்களில் படித்து மகிழ்ந்துவிட்டுக் கடந்து செல்கிறோம்.

என்னுடைய சொந்த அனுபவத்தில் இந்த 2024 ஆம் ஆண்டு வழக்கம்போல நகர்ந்த ஒன்றல்ல.
ஏதோ ஒரு நாள் எனது கல்லூரி நண்பன் சிவப்ரேம் திடீரென ஒரு குறுந்தகவலில், நீ எழுதுறியே, இதையே நாம ஒரு வலைத்தளப்பக்கமாக உருவாக்கலாமா?

அதில் நீ சும்மா எழுத வேண்டாம். ஏதாவது பணம் தருகிறேன் பெற்றுக்கொள். அப்போது தான் பொறுப்பு வரும் என்றான்.

சரி நண்பா, நல்ல முடிவு, என்று சொல்லிவிட்டு எப்படியும் இந்த வருடத்திற்குள் இதைத் துவங்கி விடுவான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவன் கூறிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

வலைத்தளமெல்லாம் தயார். நீ இன்றே எழுத்து வேலையைத் துவங்கு என்றான்.

உண்மையிலேயே, நான் சும்மா சமூக வலைத்தளங்களில் எழுதித் தள்ளிப் பொங்கி கருத்து சொல்லும் போது என்னிடம் வந்து அதைப்பற்றி சிலாகித்தவர்களை விட, ஒரு வலைத்தளத்தில் ஆசிரியராக நான் எழுதுகிறேன் என்று அறிந்து பல நண்பர்களும் சிலாகித்தனர்.

ஒரு யூடியூப் சேனல் நடத்துபவர் கூட, உங்களுடைய எழுத்து நடை நன்றாக உள்ளது. எனது சேனலுக்கு நான் பேசுவதற்காக எழுதித் தருவீர்களா என்று விசாரித்தார்.

இதெல்லாம் பெருமையா? என்றால் அதை நீங்கள் என்னிடத்தில் இருந்து அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.

தினமும் எழுதுவதற்கு சிறிது யோசிக்க வேண்டும்.
நமது அன்றாட வேலைகளின் நடுவே அது நிகழ வேண்டும். ஏனென்றால் நான் முழு நேர எழுத்தாளரும் அல்ல. பிறகு அதை நான் எனது அலைபேசியில் டொக் டொக் என அச்சிட்டுக் கட்டுரையை உருவாக்கி, வலைத்தளத்தில் பதிவேற்றி, அதை உங்களிடம் பகிர்கிறேன்.

வருடத்தில் அனைத்து நாட்களிலும் ஒரு கட்டுரை வீதம் தவறாமல் பகிர்ந்து விட்டோம் என நம்புகிறேன்.

இதற்கெல்லாம் நானும் எனது நண்பனும் படும் மெனக்கெடல்களுக்கான பாராட்டு தான் இப்படி முகம் தெரியாத நபர் என் எழுத்தைப் பற்றி சிலாகிப்பது.

எனது வாழ்வில் சென்ற ஆண்டில் அந்த ஒரு சிறிய முன்னேற்றத்தை அளித்த எனது நண்பன் சிவப்ரேம் க்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு.

இந்தப்பயணத்தைத் தொடர்கிறேன்.

எனக்குக் கடவுள் அனுப்பிய தூதர் போல, உங்களுக்கும் இந்த ஆண்டில் ஏதாவது ஒரு தூதர் வரத்தான் போகிறார் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டைத் துவங்குங்கள். புதிய காலண்டர் 365 தாள்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த முறை கிழிக்கப் போவது தாள்களை மட்டுமல்ல என்ற நம்பிக்கையை மனதில் கொள்ளுங்கள்.

நம்ம வாழ்க்கையில மட்டும் அந்தோணி வரமாட்றாரு, காசி தான. வரானு வருத்தப்படாதீங்க. இந்த வருஷம் அந்தோணி, லதா மேடம் எல்லாரும் வரப்போறாங்க.

ஜாலியா ஸ்டார்ட் பண்ணுங்க..

Happy New Year.