இந்தக் கலியுகத்தில் இப்படியும் ஒருவரா?
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற பாடலின் வரிகள் இவருக்குத் தான் பொருந்துமோ?
இவர் பெயர் கல்யாண சுந்தரம். ஆனால் இவர் பாலம் கல்யாண சுந்தரம் என்றே அழைக்கப்படுகிறார்.
பாலம் என்பது இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயர்.
ஊரில் ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இவருக்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான விளம்பரம் என்று நினைக்கத் தோன்றலாம்.
அது ஏன் என்பதை அவரது கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், சிறுவயதில் இவரது அம்மா சொன்ன வார்த்தைகளை மறக்காமல் பின்பற்றி வாழ விரும்பியிருக்கிறார்.
அவை என்னவென்றால், பிறர் பொருளுக்கு ஆசை கூடாது, நீ சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கை தானம் செய்ய வேண்டும், தினமும் ஒரு உயிருக்காவது உன்னாலான நல்லதைச் செய்ய வேண்டும்.
இவரது நேர்மைக்கு உதாரணமாக ஒரு கதை இருக்கிறது, அதற்குப் பிறகு இவரது ஈகை குணத்தை என்னவென்று பார்ப்போம்.
இவரது தந்தை கோவில் அறங்காவளராகப் பணிபுரியும் போது, கோவில் ஊழியர் கோவில் பலா மரத்தில் இருந்து ஒரு பழம் விழுந்ததைப் பங்கு வைத்து இவரது குடும்பத்திற்கும் சில சுளைகளைத் தந்துள்ளனர்.
அதை மனதில் வைத்திருந்த இவர், தனக்குப் பின்னாளில் குடும்ப சொத்து கிடைத்த போது, அந்த நிலத்தைக் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டார்.
அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் வரும்.
இது அவரது நேர்மையின் சிறப்பு.
பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படிப்பில் இணைந்தார்.
அந்தப்பிரிவில் இவர் ஒரு மாணவர் தான் இருந்தார் என்ற காரணத்தால், மாற்றி வேறு படிப்பை எடுக்க வற்புறுத்தப்பட்டார்.
ஆனால் இவர் தமிழ்மீது இருந்த ஆர்வம் காரணமாக, அதை விட்டுக்கொடுக்கவில்லை.
இது இவரது மன உறுதிக்கான ஆதாரம்.
பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகப் பிரிவில் பட்டம் பயின்றார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வானொலிப் பேச்சைக் கேட்டு, இந்திய சீனப்போரின் போது நிதி உதவியாகத் தனது 8.5 சவரன் தங்கச் சங்கிலியை காமராஜரிடம் கொடுத்தார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள குமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரியில் நூலகராகப் பணியாற்றினார்.
தான் நூலகராகப் பணியாற்றி சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும், தொண்டிற்காக மட்டுமே செலவு செய்து விட்டுத் தான் வாழ்வதற்காக இரவு நேரங்களில் உணவகங்களில் பணிபுரிந்து அதில் வந்த வருமானத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்.
இப்படி ஓர் மனிதனை இந்த நூற்றாண்டிலேயே கண்டதில்லை என்று அமெரிக்கா கண்டறிந்து இவருக்கு, The Man of the Millenium என்ற விருது வழங்கி கௌரவித்தது.
இதற்கு அர்த்தம் என்னவென்றால், இந்த ஆயிரமாண்டு, ஆயிரம் நூற்றாண்டுகளில் இவரைப்போன்ற மனிதரில்லை என்பதே!
இந்த விருதோடு ரொக்கப் பணம் , 30 கோடி வழங்கப்பட்டது. எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல் அடுத்த நொடியே இவர் அந்த மொத்தப்பணத்தையும் தொண்டிற்காக ஒதுக்கி விட்டார்.
இதை அறிந்து உலகம் முழுக்க இவரது புகழ் பரவியது.
நடிகர் ரஜினிகாந்த் இவரைத் தன் தந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் இவரோ ஓரிரு மாதங்களில் திரும்பிவிட்டார்.
இவருக்கு சென்னையில் பலகோடி மதிப்பிள்ள ஒரு நிலம் எழுத்தித் தரப்பட்டது. அதை வேண்டாம் என ஒதுக்கி விட்டார்.
இவர் கர்ணனை விடவும் ஒருபடி உயர்ந்தவர்.
எப்படியென்றால் கர்ணனாவது தனக்குக் கிடைத்த அரண்மனை வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் இவரோ ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த ஒரு வசதியும் எனக்கும் தேவையில்லை என்று கூறி எளிமையாகவே வாழ்கிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பாக Notable intellectual in the world என்ற பட்டமும், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால் அது இவருக்குத் தான் என்று பரிந்துரைத்தது.
ஐநா சபை சார்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் சிறந்த 20 மனிதர்களில் இவரும் ஒருவர்.
நினைவுகள் சார்பாக இவரை வணங்குகிறோம்.