இதை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை.
வன்மையாகக் கண்டிப்பதா? கோபம் கொள்வதா? வருத்தப்படுவதா? இல்லை பரிதாபப்படுவதா?
இது எல்லாமே இந்த விஷயத்தில் அடக்கம்.
தமிழ்நாட்டின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே ஒரு இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இது முதல் சம்பவம் அல்ல என்பது.
ஒரு பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில், அதுவும் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள், ஒருவன் இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ச்சியாக செய்வதற்கு துணிச்சல் வரும் அளவிற்கு அந்தப் பல்கலைக்கழக காவலில் ஓட்டை இருந்திருக்கிறது.
ஒரு பல்கலைக்கழகம் என்பது 100 கோவில்களுக்கு ஈடானாது. ஒரு கோவலில் நுழைந்து யார் ஒருவரும் சாமி சிலையைத் தூக்கிச் சென்ற விட முடியாது என்பது போல அல்லவா ஒரு பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பும் இருந்திருக்க வேண்டும்?
கேவலம், ஒரு தனியார் திரையரங்கம், ஒரு பெட்ரோல் பங்க், ஒரு வணிக வளாகத்திலிருக்கும் பாதுகாப்பு அம்சம் கூடவா இங்கே இல்லாமல் போனது.?
சம்பந்தப்பட்ட குற்றவாளி அவனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக வருகிறான் என்றால், அவன் வளாகத்திற்குள் எந்த நேரம் நுழைகிறான், எந்த நேரம் வெளியே செல்கிறான் என்பதைப் பதிவு செய்திருந்தால், அவனது நடவடிக்கைகள் வெளியாகி இருக்குமல்லவா?
அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிர்புறமே இருக்கும் மத்திய அரசின் ஐஐடி வளாகத்தின் காவல் கட்டமைப்பைப் பார்த்தாவது இங்கே சில முன்னேற்றங்களைச் செய்திருக்க வேண்டாமா?
யார் பல்கலைக்கழகத் துணை வேந்தர், எவ்வளவு பணம் புரள்கிறது, என்று அரசியல் செய்து செய்து அண்ணா பல்கலைக்கழக வளாகம் இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறது இன்று.
வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையோ, முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் வெளியிட்டு அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பரவ விட்டிருப்பது இன்னும் மோசம்.
இப்போது அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என அறிக்கை. அப்படி என்றால் முதலில் அதைப் பரப்பிய அவர்கள் மீது என்ன நடவடிக்கையோ?
மேலும் பல செய்திகளைப் பார்க்கும் போது அந்தக் குற்றவாளி அந்த மாணவியிடம், இன்னொரு சாரிடம் நீ சில நேரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாகத் தெரிகிறது.
அந்தக்குற்றவாளியின்அலைபேசி சமிஞ்கை இருந்த இடத்தை வைத்து அவனைப்பிடித்த காவல்துறை, அவன் பேசிய அந்த இரண்டாவது நபரைப் பற்றி வெளியிடாத காரணம் என்னவோ?
ஒருவேளை அவர், அரசியிலிலோ, சமுதாயத்திலோ பெரிய ஆளாக இருக்கக் கூடுமோ? என்ற பல கேள்விகளுக்கு இப்போது காவல்துறை சார்பாக பதிலும் கொடுக்கப்பட்டு விட்டது.
சார் என்று யாருமில்லை. அலைபேசியை அணைத்து விட்டு அந்த மாணவியிடம் லொல்லாயிக்கு சார் என்று பேசினார் என்று.
அப்படியானால் குற்றவாளியின் அலைபேசி அழைப்புப்பட்டியலை காவல்துறை வெளியிடுமா?
சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான் என்பது நிரூபிக்கப்படுமா? என்பதை நாம் அறிந்து கொள்ள நல்ல தருணம்.
இதையடுத்து வரும் செய்திதான் முட்டாள் தனமானது.
காட்டில், விலங்குகள் வேட்டையாடப்படுகிறது என்பதற்காக, வேட்டையாடும் நபர்களைத் தண்டிப்போமா? அல்லது விலங்குகளைக் கூண்டில் அடைப்போமா?
இங்கே இரண்டாவது கதை தான் நிகழவிருக்கிறது.
இனி மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேலே விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனைகள் எல்லாம் வரப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
15 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், வழிப்பறி வழக்குகளும் உள்ள குற்றவாளி கடை நடத்துவாராம், பொண்டாட்டிய கூப்புட பல்கலைக்கலக வாளகத்துக்குள்ள எப்போது எப்படி வேண்டுமானாலும் வருவாராம், ஆனால் பாவம் படிக்க வந்த மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேலே வெளியே நடமாடக் கூடாதாம்? பாதுகாப்பு இல்லையாம்.
அப்படி பாதுகாப்பு தர முடியாது என்றால் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடி விடலாமே?
6.30 மணிக்கு மேல் நம்மால் ஒரு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒரு பெண் பிள்ளையைப் பாதுகாக்க முடியாவிட்டால், காந்தி மகான் சொன்ன இரவு 12 மணிக்கு பெண் சுதந்திரமாக நடமாடுவதை எப்போது அடையப்போகிறோம்?
தங்கள் கனவுகளை நோக்கி வீட்டை விட்டு வெளியே வந்த பெண்களை விடுதிக்குள்ளே பூட்டி வைப்பது தானா உங்கள் திட்டமும் சட்டமும்?
குற்றம் செய்தவனைத் தண்டிப்பதை விடுத்து பாதிக்கப்படும் பெண்களை அடக்கி அடக்கியே பழகிவிட்டோம். அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு உதாரணமாகி விட வேண்டாம்.
இப்போது அண்ணா பல்கலைக்கழகம் விட வேண்டிய அறிக்கை என்னவென்றால், “தைரியமாக இருங்கள் மாணவர்களே, மனம்போல உலாத்துங்கள், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் படியுங்கள்! இனி எவன் வரானு பாத்துரலாம்!”
எதிர்பார்ப்புடன் நினைவுகள்