Categories
கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

என்று தணியுமோ இந்த மாய மோகம்.

என்று தணியுமோ?

இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது.

கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.

அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான்.

என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்?

ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் சினிமா நடிகர்கள் மீதும் தீராத மோகத்துடன் தான் இருக்கின்றனர்.

அதிகாலை சிறப்புக் காட்சி என்ற பெயரில் திரையரங்க உரிமையாளர்களும், பட வினியோகஸ்தர்களும் கொள்ளை லாபம் அடைவதற்காக ஒரு நுழைவுச்சீட்டின் விலை, ஆயிரம், இரண்டாயிரம் என்று கேட்டாலும் அதைக் கொடுத்து, தனக்குப் பிடித்தமான சினிமா நடிகனின் கட் அவுட்களுக்குப் பால் ஊற்றி, அதில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டு தனக்கும் பால் ஊத்திக் கொண்ட பல ரசிகர்களின் கதையைக் கேட்டிருக்கிறோம்.

சமீபத்தில் கூட, எனக்கு ரசிகனே வேண்டாம் என்று சொல்லும் பிரபல நடிகரின் படத்தின் சிறப்புக்காட்சியை சிறப்பிக்கும் வண்ணமாக லாரி மீதேறி நடனமாடி, உயிரிழந்த ரசிகரின் உயிருக்கு மதிப்பளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இனி காலை 9 மணிக்கு முன்பு சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் ஒரு போடு போட்டது நினைவில் இருக்கிறது.

ஆனாலும், தன்னுடைய அபிமான நடிகரின் படத்திற்காக, அலுவலகத்தையும், விடுப்பெடுத்து 9 மணி காட்சியைக் காணும் உயிருக்கு மேலான ரசிகர் கூட்டம் இன்றும் குறையாமல் தான் உள்ளது.

அப்படி ஒரு நாள் விடுப்பு எடுத்துப் படம் பார்க்கும் அளவிற்கு அந்த நடிகர் என்ன செய்து விட்டாரோ இவர்களுக்கு?

இந்த மாதிரி ஆட்கள், வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லாத போது மிகவும் நேர்மையாக அலுவலகம் சென்று விடும் ஆட்களாகக் கூட இருப்பார்கள். ஆனால் தன் தலைவன் படம் வந்து விட்டால் தலையே போனாலும் பரவாயில்லை என்று காலை 9 மணி காட்சியைப் பார்த்தே விடுவார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் சம்பவமும்.

அந்தப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த ரசிகர்களிடம், விளம்பரத்திற்காக, அந்தப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் அந்த திரையரங்கிற்கு வந்திருக்கிறார். அப்போது அவரைக் காண வேண்டும் என்ற ஆவலில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார்.

கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாத காரணத்தால், நடிகரை காவல்துறை வெளியேற சொன்ன போதும் கூட, அவர் அங்கேயிருந்து வெளியேறாமல், சினிமா பாணியிலேயே, புஷ்பா யாருக்கும் அடங்காதவன் என்று வசனம் பேசியிருக்கிறார்.

அவரைக் கண்டித்து பலமுறை வற்புறுத்தி, மல்லுக்கட்டியே காவல்துறை அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனிடையே அந்தப் பெண் இறந்த காரணத்தால், இவர்மீது வழக்குப் பதியப்பட்டு, முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அல்லு அர்ஜூன் கைது

பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழியை உண்மையாக்கி இவரும், பத்து நாள் கூட ஆகாமல் ஜாலியாக வெளியே வந்துவிட்டார். மேலும் இந்த படத்திற்கு இவருக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் என்றும் செய்தி வெளியாக்கியுள்ளது. (ரூபாய் 3,00,00,00,000)

ஒரு உயிர் போனதைக் கூட மதிக்காத சினிமாத்துறை, இவரை மாறி மாறி குசலம் விசாரித்திருக்கிறார்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத தெலுங்கான முதல்வர் திரு.ரேவந்த் ரெட்டி, சினிமாக் காரர்களை மிகச் சரியாக சாடியுள்ளார்.

இந்த சினிமாக்காரர்கள் வரிசையாக அல்லு அர்ஜூனிடம் சென்று நலம் விசாரிக்கிறார்கள், ஆனால் ஒருவரும் இறந்து போன அந்தப் பெண் பற்றியோ, அவரது குடும்பம் பற்றியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையும் அந்த மாநில முதல்வர் சாடியுள்ளார்.

இப்படி ஒரு விமர்சனம் தமிழ்நாட்டில் நிச்சயம் ஒருபோதும் வராது. அந்தத் தைரியமும் யாருக்கும் வராது. ஏனென்றால் இங்கே சினிமாவும் அரசியலும் ஒரு தாய்ப் பிள்ளைகளாக உள்ளன.

அவர்களைப் பொறுத்தமட்டில், பொதுமக்கள் என்றுமே மாற்றான் தாய் பிள்ளைகள் தான் என்பதை அறிந்து கொள்ளாத மக்குச் சாம்பிராணிகளாய், நாம் இன்னும் தலைவர், தலைவர் என்று கூறிக் கொண்டு பணத்தையும், நேரத்தையும், உயிர்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

சினிமா பார்க்கவே கூடாது என்று யாரும் எப்போதும் சொல்வதில்லை. ஆனால் பொழுதுபோக்கும் கூத்துகளில் ஒன்றான அந்த சினிமாவில் பணியாற்றும் கூத்தாடிகளை, கடவுள் போல பாவித்து, மக்கள் செய்யும் அலப்பறைகள் முகம் சுழிக்க வைக்கிறது.

இதில் படித்தவன் படிக்காதவன் என்பதெல்லாம் விதிவிலக்கல்ல.

ஏன் இந்த மோகம்?

அவர்கள் தொழில் செய்து அவர்கள் சம்பாதித்துப் பிழைப்பு நடத்துகிறார்கள். நம்மைப்போல அவர்களும் சாதாரண தொழிலாளிகள் தான்.

அவர்களை ஏன் தலையில் வைத்து ஆட வேண்டும்?

இது புரிந்தாலே இங்கே பாதி பிரச்சினை முடிந்தது.

என்று தணியுமோ இந்த மாய மோகம்?

ஏக்கத்துடன் நினைவுகள்.