Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ராம் சரண் பட வேலை ஆரம்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் இணைப்பு இங்கே இருக்கிறது.

இவரைப்பற்றிய நமது பழைய பதிவு

சர்பட்டா பரம்பரை, ரெஜினா, தங்கலான் போன்ற படங்களுக்கு, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ரகமாக ஆடை வடிவமைப்புகளைச் செய்து , தனித்துவமாகத் திகழும் திரு.ஏகாம்பரம் அவர்களிடம்  நாம் கேட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் .

உரையாடல் இதோ:

கேள்வி 1:

தங்களைப் பற்றிய ஒரு பாராட்டுக் கட்டுரை நினைவுகள் வலைதளத்தில் வந்துள்ளதால், வாசகர்களுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.
இருந்தாலும் உங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டத்தைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

பதில்: வணக்கம். எனக்கு சிறு வயதிலிருந்தே கலை ஓவியத்தில் ஆர்வம் அதிகம். எல்லாக் குழந்தைகளையும் போல, ஸ்லேட் ல் வரையத் துவங்கியது தான் எனது முதல் அனுபவம்.

கோவில், குளம், மலை காடு என நான் சிறுவயதில் பார்த்த அனைத்தையும் ஓவியமாகப் புனைவதில் ஆர்வம் ஏற்பட்டு சிறு சிறு முயற்சிகள் செய்து அவற்றை வரையத் துவங்கினேன்.

உயர்கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி இரண்டையுமே எங்கள் ஊர் அரசுப் பள்ளியில் தான் பயின்றேன்.

மேல்நிலை வகுப்பில் நான் வரலாறு பிரிவைத்தான் தேர்ந்தெடுத்தேன். வரலாறு படிப்பதில் எனக்கிருந்த ஆர்வமும், அதைப்படிக்க படிக்க எனக்கிருந்த கலை ஆர்வமும் அதிகரித்தது.

மேல்நிலைப்பள்ளியில் படித்த போதே பாடப்புத்தகங்களோடு நில்லாமல், வரலாற்று ஆய்வுகள் பற்றியும் அறிந்து கொண்டு அதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கலை மீதான எனது ஆர்வம், என்னை வரலாற்றின் ஆழத்தை நோக்கிப் பயணிக்கச் செய்தது. வெவ்வேறு அரண்மனைகள், பலவிதமான கோவில்கள், அதிலிருந்த சிற்பங்கள், கலை அம்சங்களில் மூழ்கித் திளைத்தேன்.

மேலும் நான் நெசவாளர் குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்த காரணத்தால் ஆடை சம்பந்தமான படிப்புகளிலும், ஆராய்ச்சியிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினேன். நான் பள்ளி கல்லாரிகளில் படித்த போது சிறிது நேரம் நெசவு வேலை செய்த பிறகே வகுப்புக்குச் செல்வேன். அதனாலேயே எனக்கு இந்த ஆடை வடிவமைப்பு மற்றும் படிப்பின் மீதான ஆர்வம் ஏற்பட்டது.

கைத்தறி நெசவு இயந்திரம்

அதோடு அல்லாமல், நுண்கலைகளின் நுட்பத்தை ஆடை வடிவமைப்பில் எவ்வாறு இணைக்கலாம் என்று சிந்திக்கத் துவங்கினேன். எங்கள் மக்களின் தொழில் ஏன் நலிவடைந்தது, அதை எப்படி சரி செய்யலாம், தற்கால சந்ததிகளுக்கு பிடித்தாற் போல ஆடை வடிவமைப்பில் என்ன கலை நுணுக்கங்களை சேர்க்க இயலும் என்பதை ஆராயத் துவங்கினேன். அதைத் தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறேன்.

ஆரம்பத்திலிருந்தே இருந்த ஆர்வம் காரணமாக நான் கல்லூரியில் படிக்கும் போது என்னிடம் வடிவமைப்பு சம்பந்தமாக கேள்விகள் எழும்போது ஒரு யோசனை தரவேண்டிய இடத்தில் நூறு விதமான யோசனைகளைத் தருவேன்.

என்னுடைய வரலாற்று ஆய்வுகளும், அதில் நான் கண்ட அனுபவமும், இதற்குத் துணை நின்றன.

இந்த காரணத்தாலேயே எனது சக மாணவர்களும் என்னுடைய ஆசிரியர்களும் என்னை வெகுவாகப் பாராட்டியதோடல்லாமல், என்னைக் கண்டு வியந்து, நான் இந்தத் துறையில் மிகப்பெரிய உயரத்தை அடைவேன் என்று எனக்கு ஊக்கமளித்தனர்.

கேள்வி 2:
சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனி ரகம். மேலும் அது 60-70 களில் நடக்கும் கதைப்பின்புலமும் கூட. ஆடை வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அந்தப்படத்தில். அந்த அனுபவம் சொல்லுங்கள். மேலும் அதற்கான ரெஃபரென்ஸ் ஏதாவது இருந்தால் அதையும் சொல்லுங்கள்.

பதில்: சார்ப்பட்டா பரம்பரை எனது முதல் படம். எனக்கு என்றைக்குமே மறக்க முடியாத சிறப்பான படம்.

அதன் அனுபங்கள் தனி நினைவுகள் தான்.

சிறுவயதில் நான் கண்ட அனுபவித்த பல அனுபவங்கள் தான் இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பின் ஆதாரம்.

நாம் சிறுவயதில் பொம்மை கல்யாணம் செய்து விளையாடியிருப்போம்.

அப்படி விளையாடும் போது நிஜ கல்யாணத்தில் எதையெல்லாம் பார்த்திருப்போமோ, அதை ஞாபகம் வைத்து அதே போல, பொம்மையாக செய்ய முயற்சி செய்வோம் அல்லவா?

அதேபோல, விளையாட்டுக்காக பண்டிகை விளையாட்டு விளையாடும் போதும், ஒரு பொங்கல் தினத்தன்று என்னவெல்லாம் படைத்து சாமி கும்பிடுவோமோ, அதே மாதிரி பொம்மைகளை உருவாக்கி விளையாண்ட அனுபவங்கள் நம் போன்ற 90 களின் குழந்தைகளுக்கு இருக்கும். தற்கால குழந்தைகளிடம் அது இல்லை. வழக்கொழிந்து விட்டது.

அப்படியான 60,70 களின் ஞாபகங்களை சேகரித்து வடிவமைக்கப்பட்டது தான் சார்ப்பட்டா பரம்பரையின் ஆடை வடிவமைப்பு.

மேலும் நான் டெக்ஸ்டைல் சம்பந்தமாக படித்த காரணத்தால், ஒவ்வொரு காலத்திலும் ஆடை வடிவமைப்பில் ஏற்பட்ட மாறுதல்களை என்னால் தொடர்ந்து உட்கிரகித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.

60,70 களில் வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற வடிவமைப்பின் தாக்கம் தான் இங்கும் இருந்தது.
அதாவது பிரிட்டிஷ் டிசைன் தான் நடைமுறையில் இருந்தது. ஸ்ட்ரைப்ஸ் வகை ஆடை வடிவமைப்பு அவர்களின் வடிவமைப்பில் இருந்து உருவானது தான்.

மேலும் 1960,70 களின் மெட்ராஸ் என்பது ஆடை வடிவமைப்பில் பிரிட்டிஷ் தாக்கத்திலிருந்து மாறியிருக்கவில்லை. மேலும் தேவைக்கு, பழைய ரஜினி, கமல் படங்களையும் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு உருவாக்கினேன்.

அந்தப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தனி ரகம். அவரவருக்கு ஏற்றார் போல ஆடைகளை வடிவமைப்பது, முதல் படமாக எனக்கு சவாலாக இருந்தாலும், ஆர்வமாகவும் இருந்தது. முதல் படமே, பழைய காலப்படமாக குறிப்புகள் எடுத்து, வரலாறை அறிந்து வடிவமைக்கும் விதமாக அமைந்தது எனது ஆர்வத்திற்குத் தீணியாக அமைந்தது. என்றும் எனக்கு அது சிறப்பான அனுபவம் தான்.

தொடரும்…….

மேலும் இவர் ரெஜினா படம் மற்றும் தங்கலான் படங்களில் தனது ஆடை வடிவமைப்பு மற்றும் வேலை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தங்கலான் படத்தின் ஆடை வடிவமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால் அந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பில் இவர் உபயோகித்தது அனைத்துமே இயற்கை சாயங்கள்.

இது எப்படி சாத்தியம், இதற்கான ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

அடுத்த தொடர்ச்சியில் பேசலாம்.

அன்புடன் நினைவுகள்.