Categories
அறிவியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது.

ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார்.

இப்போது நீங்கள் பிறந்த வருடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகமில்லை. 2012 தான். அப்படி என்றால் இப்போது வயது 12? அப்புறம் பேராசியர் எப்படி?

அதுதான் இவரது சிறப்பு.

இவர் பேராசியர் மட்டுமல்லாமல், இவருக்கு இன்னொரு புனைப்பெயரும் உள்ளது.
இந்தக்கால ஐன்ஸ்டீன்.

சரி ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம். பங்காளதேஷிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ரஷிதுல் மற்றும் ஷகீதாவின் இரண்டாவது மகன் இவர். இவர் பிறந்து 6 மாதமாக இருந்த போது முழு வாக்கியங்களில் பேசத் துவங்கி விட்டாராம்.
அதாவது, 6 மாதக் குழந்தை, “அப்பா, ஆபிஸ் போயிட்டு எப்படி வருவீங்க? வரும் போது எனக்கு செரலாக் வாங்கிட்டு வாங்க” என்று பேசினால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருந்திருக்கிறது அவரது பெற்றோருக்கும். இரண்டு வயதில் இவர் கரடி பொம்மைகளோடு விளையாடவில்லை.

பல தீர்க்க முடியாத கடினமான கணக்குப் பாடங்களை எடுத்துத் தீர்த்து விளையாடியிருக்கிறார்.

இயற்பியலில் குறுக்கே புகுந்து, நெடுக்கே எழுந்து , ஒரு யு டர்னும் போட்டிருக்கிறார்.

வேதியியல் பாடத்தை மூளைக்குள் வேக வைத்திருக்கிறார்.

இவரது அபார, அபிரிமிதமான, அசாத்தியமான இந்த செய்கைகளைப் பார்த்து மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்த அவரது பெற்றோர், வழக்கமான மனிதர்களைப் போலவே இதை சோசியல் மீடியாவில் பதிந்துள்ளனர்.

இது பரவலாகி பலருக்கும் தெரிந்து மெட்கர் இவர்ஸ் கல்லூரியின் துணை முதல்வர் இவரை நேர்காணல் செய்திருக்கிறார். இரண்டு வயதில் ஒரு கல்லூரி துணை முதல்வரோடு நேர்காணலில் ஈடுபட்ட சோபர்னோவின் புகழ் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வரை பரவிவிட்டது.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பது தகவல் ,செய்தி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஒளிபரப்பும் அமெரிக்க அரசின் ஊடகம். அதில் சோபார்னோ பாரி தன்னுடைய மூன்று வயதில் பேட்டி அளித்தார்.

Sobornno isaac bari

அவரது பேட்டி இரண்டு முறை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வில் ஒலிபரப்பப்பட்டு மிகப் பிரபலமானது. 1942 ஆம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா துவங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அதில் பேட்டியளித்த மிக இளம் வயதுடையவர் இந்த சோபர்னோ பாரி தான்.

ஏப்ரல் 2016 ல், நியூயார்க் சிட்டி கல்லூரியின் முதல்வர் இவருக்கு தற்கால ஐன்ஸ்டீன் என்ற பட்டமளித்தார். தொடர்ச்சியாக இவர் எழுதிய கணித மற்றும் இயற்பியல் தேர்வுகளே இதற்குக் காரணம்.

அமெரிக்க முன்னாள் பிரதமர் பாரக் ஒபாமாவிடமிருந்து இவருக்கு சிறப்புப் பாராட்டுகளும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து பாரட்டுக் கடிதமும் அனுப்பப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஆசிய மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஹார்வர்டு திட்டத்தில் பேச இவருக்கு அழைப்பு வந்தது.

இந்தாயவிலுள்ள SP புனே பல்கலைக்கழகத்தில் பாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

இவர் இரண்டு புத்தகமும் எழுதியுள்ளார்.
வன்முறை வேண்டாம், அன்பாக வாழ்வோம் என்பதை வலியுறுத்தி The Love என்ற புத்தகமும், Manish என்ற புத்தகமும் (கற்றல் தொடர்பானது) எழுதியுள்ளார்.

மேலும் தினம் தினம் இவரது புகழ் மேலோங்கிக் கொண்டே போகிறது, பட்டியலும் நீள்கிறது.
இது ஒரு அசாதாரணமான, அசாத்தியமான நடவடிக்கை தான்.

இதைப்போல நாம் ஆக முடியும் என்று யோசிப்பது அவ்வளவு அறிவார்ந்த செயல் ஆகாது என்றாலும், அதுவும் முடியாத காரியம் என்று நாம் சொல்வதற்கும் நமக்கு உரிமை இல்லை.

ஆனால் இதிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். மனித மூளை வியப்பானது.

அளப்பரிய செயல்களைச் செய்யவல்லது. அதை நாம் வீணாக மழுங்கடித்து விட்டு, நம்மை நாமே குறை கூறிக் கொண்டு வளராமல் இருந்த இடத்திலேயே இருப்பது தவறு.

கற்றது கை மண் அளவு என்பதை எப்போதும் மறவாமல், கற்கும் ஆர்வத்தை சாகும் வரை கைவிடாமல் வாழப்பழகுவோம்.

அன்புடன் நினைவுகள்