பேராசை பெருநஷ்டம்
இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம்.
ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு மோசடி, அதிக லாபம் தரும் முதலீட்டு மோசடி, அதிக வட்டி தரும் மோசடி, MLM மோசடி என்று ரக ரகமாக இதற்கென ஒரு பட்டியலே போடலாம்.
பட்டியல் என்பது வித விதமான மோசடிகளுக்குப் போடப்பட்டாலும், இத்கெல்லாம் மூல காரணம் ஒன்று தான். ஏமாறுபவர்களின் பேராசை.
வங்கியில் போட்டால் ஒரு லட்ச ரூபாய்க்கு வருடத்திற்கு 6000 ரூபாய் தான் வட்டி கிடைக்கிறது. ஆனால் இங்கே வந்தால் ஒரு லட்சத்திற்கு நாங்கள் மாதம் 6000 தருகிறோம் என்று கூறியதை நம்பி ஏமாந்த பல ஆயிரம் மக்கள்.
ஒரே ஒரு 25000 ரூபாய் கொடுத்தால் மாதம் மாதம் இரண்டு கிராம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கம் தருவோம் என்று கூறியதை நம்பி ஏமாந்த பல ஆயிரம் மக்கள்.
இப்படி ஒவ்வொரு மோசடிக்கும் பின்னே மக்களின் பேராசை தான் மூலக்காரணம். இன்றும் கூட ஒரு செய்தியைக் கடந்து வர இயன்றது. யூடியூப்பில் ஏதோ காணொளியைப் பார்த்து அதிக லாபம் பெற நினைத்து ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் ஏமாந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்று.
அவரை ஏமாற்றியவர்கள் கம்போடியா நாட்டைச் சார்ந்த கும்பல்.
உண்மையிலேயே இதில் ஆராய்ந்து பாருங்களேன்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. கையில் எவ்வளவு கோடி பணம் இருந்திருந்தால் அவர் ஒன்றரை கோடி பணத்தைக் கேவலம் யூடியூப் காணொளியில் கண்ட தகவலை நம்பி முதலீடு செய்திருப்பார்?
அத்தனை கோடி பணம் அவர் யாரை ஏய்த்து சம்பாதித்தார்? என்பது முதல் கேள்வி.
இரண்டாவது கேள்வி. இதில் அவர் ஒருவேளை பணத்தை ஏமாறாமல் லக்கி பாஸ்கர் போல ஒன்றரை கோடியை பலமடங்கு பெருக்கி விட்டார் என்றால், அவர் அந்தப்பணத்திற்கு நியாயமாக வரி கட்டுவாரா என்ன?
என்ன சொல்லி வரி கட்டுவார்? நான் கம்போடியாவில் ஒன்றரை கோடி முதலீடு செய்து பதினைந்து கோடி சம்பாதித்தேன். நியாயமாக வரியைக் கட்டுகிறேன் என்று கட்டுவாரா?
அவர் இந்த ஒன்றரை கோடியே பதுக்கல் பணமாக வைத்திருந்தாரோ என்னவோ?
ஆக இவரும் திருடன் தான். திருடனைத் திருடன் ஏமாற்றி விட்டான் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
பரிதாபமெல்லாம் வரவில்லை.
இப்படி அரசாங்கம், காவல்துறை, பொதுத்துறைகள், வங்கிகள் என அனைவரும் கதறிக் கதறி சொல்வதை மீறி தனது பேராசையால் ஏமாறுபவர்களைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும். பிறகு தான் அவர்களை ஏமாற்றியவனைக் கைது செய்ய வேண்டும்.
எப்படியோ, இவரும் ஏமாற்றியோ, அல்லது ஏமாற்றும் நோக்கத்தில் தான் இந்தத்திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார் என்பதை மனதில் கொண்டு அவருக்கு தண்டனை தரப்பட வேண்டும்.
தினமும் ஒரு செய்தி வந்தாலும் இன்னும் மக்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.
கதறலோடு கதறலாக, நாங்களும் கதறுகிறோம்.
பேராசை பெருநஷ்டம்.
தயவு செய்து ஏமாறாதீர்கள்.
அன்புடன்
நினைவுகள்.