Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஆவின் மேஜிக்கில்- அரசாங்கம் செய்த மேஜிக்

ஆவின் கரீன் மேஜிக் பாலில் அரசாங்கம் செய்த மேஜிக்.

ஆவின் பாலில் கொழுப்பு 3% மட்டுமே இருக்கும் டபுள் டோன்டு அதாவது சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் 6% கொழுப்புடைய புல் க்ரீம் பால் வகைக்களைக் காட்டிலும், 4.5 சதவீத கொழுப்புடைய standard அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலையே பெரும்பாலான மக்களும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது ஆவின் பச்சை என்பது அதன் அடையாளம்.

அதன் பெயர் ஆவின் க்ரீன் மேஜிக் என்பது.

ஆவின் கிரீன் மேஜிக்

சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் 20 ரூபாய்க்குக் கிடைத்தாலும், அதில் முற்றிலும் தண்ணீர் கலக்க முடியாது.

கொழுப்பு 6 சதவீதம் இருக்கும் ஆரஞ்சு பாலில் நிறைய தண்ணீர் கலக்கலாம், ஆனால் விலை அதிகம். 1/2 லிட்டர் 30 ரூபாய்.

ஆவின் ஃபுல் க்ரீம்

இந்தக் காரணங்களாலேயே பெரும்பாலான நடுத்தர மக்களிடையே மற்றும் சில மேல்த்தர நடுத்தர மக்களிடையேயும் இந்த ஆவின் பச்சைக்கு தான் மவுசு அதிகம்.

ஒரு சில பணக்காரக் குடும்பங்கள் சமன்படுத்தப்பட்ட பால் வகையை வாங்கி தண்ணீர் கலக்காமல் பயன்படுத்துவார்கள்.

டபுள் டோன்டு

பெரும்பாலும் வியாபாரிகள், தேநீர் கடைகளில் அதிக தண்ணீர் சேர்ப்பதற்காக கொழுப்பு 6 சதவீதம் நிறைந்த புல் க்ரீம் பாலை உபயோகிப்பார்கள்.

ஆனால் 100 ல் 80 வீடுகளில் பச்சைப் பால், அதாவது நிலைப்படுத்தப்பட்ட 4.5 சதவீத கொழுப்புடைய பால் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் மட்டுமல்ல, ஆரோக்கியா, திருமலா, போன்ற தனியார் பால் நிறுவனங்களிலுமே கூட 4.5 சதவீதக் கொழுப்புடைய நிலைப்படுத்தப்பட்ட பால் தான் அதிகம் விற்பனையாவது.

அந்தப்பால் வகையில் தான் இப்போது விலை மாற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆவின் க்ரீன் மேஜிக் பாலில், 4.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீதம் இதர சத்துகளும் இப்போது உள்ளது.

அதே பாலில் குழந்தைகளுக்கு விட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்து அதிகப்படுத்துவதாகச் சொல்லி 8.5 சதவீதமாக இருந்த இதர சத்துகளை 9 சதவீத ஊட்டச்சத்து, மற்றும் விட்டமின் டி என்று சொல்லி மேஜிக் செய்து, பெயரையும் க்ரீன் மேஜிக் என்று மாற்றி சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக விலையை முழுத்தொகையாக்கி விட்டார்கள். அதாவது ரவுண்ட் ஆஃப்.

இந்த கண்கட்டி வித்தையைத் தான் பலரும் கண்டித்து வருகின்றனர். அதாவது 8.5 சதவீத இதர சத்துகள் 9 சதவீதமானது மிகப்பெரிய மாற்றமும் அல்ல, அதை யாரும் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்போவதும் இல்லை.

சரி அந்த விஷயத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றாது என்றே வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் சில்லறைத் தட்டுப்பாடு என்று GPay யுகத்தில் இவர்கள் கூறிய காரணத்தைப் பசு மாடு கூட ஏற்றுக் கொள்ளாது. எருமை மாட்டிடம் சொன்னால் கோபத்தில் எட்டி உதைத்து விடும்.

கொஞ்சம் அந்த சில்லறை மேஜிக்கை ஆராயலாம்.

22 ரூ இருந்த பால் 25 ரூபாய். அதில் உள்குத்தாக இன்னொரு மாஜிக்கும் உள்ளது. அரை லிட்டராக இருந்த பாக்கெட் இப்போது 450 மில்லி.

இப்போது கணக்குப் பார்க்கலாமா?

1/2 லிட்டர் 22 , 1 லிட்டர் 44 ரூபாய்- பழைய விலை.

இப்போது 450 மி.லி -25ரூ. ஒரு லிட்டரின் விலை 55ரூபாய் 55 பைசா வருகிறது.

கிட்டதட்ட ஒரு லிட்டர் பாலுக்கு 11.50 ரூபாய் விலையேற்றம்.

தனியார் பால் நிறுவனங்களில் கூட இப்படி ஒரு மலையேற்றம் போன்ற விலையேற்றம் நிகழ்ந்தது இல்லை.

அரசாங்கம் கடனில் இருக்கிறது என்பதெல்லாம் சரியே. ஆனால் அத்தியாவசிய பொருளில் 44 ரூ, 55 ரூபாயாக உயர்த்துவது என்றால் 25 சதவீத விலையேற்றம்.

இப்படி அத்தியாவசியப் பொருளில் 25 சதவீத விலையேற்றம் என்பது பாமர மக்களுக்குக் கடினமான ஒன்று.

இப்படி பாலில் மாஜிக் செய்வதற்கு மாறாக, ஆவின் நெய், ஆவின் ஐஸ்க்ரீம் போன்ற பொருட்களில் கொஞ்சம் விலையேற்றலாம்.

மேலும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், மகளிர் அனைவருக்கும் இலவசப் பேருந்து போன்ற விஷயங்களில் கொஞ்சம் வடிகட்டலாம்.

தேவையானவர்களைக் கண்டறிந்து அந்தத் திட்டங்களை செயல்படுத்தினால் தேவையில்லாத கடன் சுமை குறையும். இந்த மாதிரியான மாஜிக் மஸ்தான் வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

அடிப்படைப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்குரலாக நினைவுகள்.