இன்றைய நவீன உலகில் வீட்டிற்குள்ளேயே பல பொழுதுபோக்குகள் வந்துவிட்டாலும், கொரோனா என்ற கொடிய நோயினால் முடங்கி, பொது இடங்களுக்குச் செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்து பிறகு விடுதலை அடைந்த பின்னும், சினிமாவுக்கான மவுசு குறையவில்லை.
பெரும்பாலான மனிதர்களின் இனிய நினைவுகளில் பல சினிமாக்கள் தங்கியிருக்கும்.
ஏன் பல முக்கியமான விஷேசங்களும், திருவிழாக்களும், பண்டிகையும் கூட சினிமாவை மையப்படுத்தி நினைவு கொள்ளப்படுவதில் இங்கே பலருக்கும் நிகழும் விஷயங்களில் ஒன்று.
உதாரணமாக எமக்கு 2005 தீபாவளி என்றால் நண்பர்களோடு மழையில் நனைந்து வரிசையில் நின்று மதியகாட்சி சிவகாசி படம் பார்த்தது ஞாபகம் வரும்.
2006 ஆம் ஆண்டு தீபாவளி என்றால் படம் வெளியாகத் தாமதமாகி திரையரங்கில் கலவரமாகி காவலர்கள் லேசாக தடியடி நடத்தி, வரலாறு படம் பார்த்து தல தரிசனம் என்று கதறிய ஞாபகங்கள் நெஞ்சைத்தைக்கும்.
பொங்கல் 2014, வீரம், ஜில்லா போட்டி.
இவ்வளவு ஏன், எனது அக்கா திருமணம் என்றால் முந்தைய நாள் குடும்பத்தோடு இரவுக்காட்சி வேட்டையாடு விளையாடு படத்திற்கு சென்று எங்கள் குடும்பத்தினர் இருதலைமுறை கமல் ரசிகர்கள் என்று பரைசாற்றிய ஞாபகம் தான் வருகிறது.
இப்படி நாடி , நரம்பு ரத்தம் அனைத்திலும் ஊறிப்போன சினிமா என்றென்றும் இனிய நினைவுதானே?
அப்படியான ஒரு இனிய நினைவைத்தரும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வரவிருப்பதைக்காட்டிலும், சமூக வலைத்தளங்களில் 1996 ல் வெளியான இந்தியன் சினிமாவைப்பற்றிய நினைவுகளின் அலசல்கள் தான் அதிகம் பகிரப்படுகின்றன.
லஞ்சம் என்ற பூதம் தலைதூக்கி நின்ற காலத்தில் அதைப்பற்றி தரமாக ஒரு படம் வந்ததும் மக்கள் அதைக்கொண்டாடித் தீர்த்து விட்டனர்.
1995 ல் வெளியான பாட்ஷா படமே அதுவரை தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்தது. அந்த மன்னனின் கிரீடத்தைப்பறித்தது இந்த இந்தியன் தாத்தா.
கதாநாயகனும் புதுரகம், தாத்தா வேடத்தில் கதாநாயகன் என்பது பழக்கப்படாத ஒன்று.
தவிர சுதந்திரப போராட்டம் பற்றி , சுபாஷ் சந்திரபோஸ் வழியை தரமான பிளாஷ்பேக்காக தந்தது மிக அருமை.
பாடல்கள் இன்றும் இளமையாகக் கேட்கலாம்.
படத்தின் கதை, மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே!
உங்களுடன் அந்தப் பழைய இந்தியனை ஒரு முறை நினைத்துக்கொண்டு இந்த புதிய இந்தியனை திரையில் பார்க்கலாம் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.
பழைய இந்தியனில் நாம் முக்கியமாக நினைவுகூர்வதற்கான ஒரு விஷயம், வர்மக்கலை.
அடுத்தது, வழக்கொழிந்து விட்ட பழைய கால தமிழ் எழுத்துகள் சில காட்சிகளில் காட்டப்படிருக்கும்.
மூன்றாவது, அந்நிய துணிகள் எரிப்புப்போராட்டம், சுபாஷ் சந்திரபோஸ் வழியில் சுதந்திரத்துக்காகப் போராடும் கதாநாயகன் என அருமையான ப்ளாஷ்பேக்.
அந்த காட்சிகளின் இறுதியில் வரும் கப்பலேறிப்போயாச்சு என்ற பாடல்.
இன்னொரு புதிய முயற்சி என்னவெனில் இந்தப்படத்தில் இரண்டாவது ப்ளாஷ்பேக் ஒன்று உண்டு.
அதுவரை அப்படி இரண்டு ப்ளாஷ்பேக் கொண்ட படங்கள் வந்ததாக பெரிதாக ஞாபகமில்லை.
இரண்டு கதாநாயகிகள், துள்ளல் ஆட்டத்திற்காக ஒரு கதாநாயகி, கதையின் ஓட்டத்திற்காக ஒரு கதாநாயகி, கதாநாயகன் இரட்டை வேடம், கவுண்டமணி செந்தில் கலாட்டா காமெடி , பரபரப்பான சண்டைக்காட்சிகள் என்று எந்தவிதத்திலும் ரசிகர்களை ஏமாற்றாத படம்.
1996 ல் லஞ்சத்தைப்பற்றிய படம் புதிது. இன்றோ பல படங்களிலும் அதை அரைத்து, இட்லி அவித்து அந்த இட்லியைப்பிச்சுப் போட்டு இட்லி உப்புமாவும் செய்து விட்டார்கள்
இப்போதும் அதே பெரிய மரமா என்ற ரீதியில் இப்போதும் இந்தியன் லஞ்சத்திற்காக மீண்டும் வருகிறார்.
Google Pay, Paytm-um லஞ்சம் கறக்கும்
Come Back Indian, பாடல் வரிகள். எழுதியவர் அறிவு.
corruption rate ah கண்டு QR முழிக்கும்
கையூட்டே இல்லாம தான் countryஉம் வேணும்
சாக்கட சுத்தம் செய்ய இந்தியன் வேணும்
பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.
நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.
அன்புடன் ..
நினைவுகள்…