Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

வாகை சூடியவரை வாழ்த்துவோம். வெற்றியாளர்களை வளர்த்தெடுப்போம்.

நேற்றைய பரபரப்பான செய்தி, அனைவருக்கும் பரவசமளித்த செய்தி இந்தியாவின் இளம் வீரர் சதுரங்கப் போட்டியில் உலகளவிலான முதலிடம்பெற்று வாகை சூடிய செய்தி.

அதுவும் அதில் மேலும் சிறப்பம்சம் என்பது இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது.

தமிழக முதல்வர் வாழ்த்திய போது

உலகளவில் சதுரங்கப்போட்டியில் இளம் வயதில் வாகை சூடி வரலாறு படைத்த குகேஷ் தொம்மராஜூ ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
அவரது தந்தை ரஜினிகாந்த் தனது மருத்துவப் படிப்புக்காக, சென்னை வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவர் காது, மூக்குத் தொண்டை நிபுணர். தாயார் பத்மாவதி, நுண்ணுயிரில் பிரிவாளர்.

மகனின் ஆசையையும் லட்சியத்தையும் உணர்ந்து கொண்ட அவனது பெற்றோர் மற்றும் சுற்றத்தினரின் உற்சாகத்தின் காரணத்தாலேயே இந்த வரலாறு சாத்தியமாகியிருக்கிறது.

நடப்புச் சாம்பியனான சீனாவின் டிங் லிரேனை 14 சுற்று கொண்ட ஆட்டத்தில் 7.5-6.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்திருக்கிறார் குகேஷ். இவருக்கு வயது 18.

இதற்கு முன்பு 22 வயதான ரஷ்யாவின் கேரி கேஸ்பரோவ் 1985 ஆம் ஆண்டு வாகை சூடியதே வரலாறாக இருந்தது. கிட்டதட்ட 39 வருடங்கள் கழித்து இந்த வரலாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

14 சுற்றுகள் ஆட்டத்தில் உலக நடப்பு வெற்றியாளர் என்ற காரணத்தினால் டிங்லிரேனும், கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டிச் சுற்றில் வாகை சூடியதன் காரணத்தால் குகேஷும் இதில் பங்குபெற வாய்ப்பு அமைந்தது.

குகேஷ் எதிர் டிங்லிரேன்

முதல் ஆட்டத்தில் டிங் லிரேன் வென்று தான் நடப்பு வெற்றியாளர் என்பதை நிரூபித்துக் கொண்டாலும், இரண்டாவது ஆட்டத்தை சமன் செய்தும், மூன்றாவது ஆட்டத்தை வென்றும், தானும் சளைத்தவர் அல்ல என்று குகேஷ் நிரூபித்தார்.

அடுத்தடுத்து 10 ஆவது போட்டிகள் வரை மாறி மாறி சமன் ஆனதால் போட்டி கலையிழந்தது.

11 ஆவது போட்டியில் குகேஷ் வென்றதும் ஆட்டம் சூடு பிடித்தது. 12 ஆவது போட்டியைக் கைப்பற்றி லிரேன் சமநிலைப்படுத்தினார். 13 சமன் அடைந்த காரணத்தால் ஆட்டம் மேலும் சூடானது.

14 ஆம் ஆட்டம் என்ன ஆகுமோ என்று உலகமே எதிர்பார்த்த நிலையில், லிரேன் செய்த சிறிய தவறை தனக்கு சாதகமாக்கி, குகேஷ் தனது 58 ஆவது நகர்த்தலில் உலக சதுரங்க வாகையைத் தனதாக்கிக் கொண்டார்.

எண் 1 முதல் 14 வரையிலான எண்கள் சுற்றுகளின் வரிசை. 2782 மற்றும் 2728 என்பது இருவரின் FIDE புள்ளிகள்.

7.5 மற்றும் 6.5 என்பது இருவரின் இறுதிப் புள்ளிகள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14– சுற்றுகள்.
Gukesh Dommaraju (IND) 2783 0 ½ 1 ½ ½ ½ ½ ½ ½ ½ 1 0 ½ 1- 7½
Ding Liren (CHN) 2728 1 ½ 0 ½ ½ ½ ½ ½ ½ ½ 0 1 ½ 0 -6½

இவர் தனது 17 ஆவது வயதில் FIDE மதிப்பில் 2750 புள்ளிகளுடன் இருந்தார். (FIDE- International Chess Federation.)

எப்படி கிரிக்கெட்டில் ஒரு அணிக்கும், ஒரு வீரருக்கும் அவர் போட்டிகளில் பங்குகொண்டு, ஆடும் விதம் கொண்டு புள்ளிகளும், தரமும் நிர்ணயிக்கப்படுகிறதோ, அதுபோலவே FIDE அமைப்பின் மூலம் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

அதிலும் இளம் வயதிலேயே இவர் பெற்ற மதிப்பு அதிகம் தான்.

மேலும் இவர் தனது 12 வயதிலேயே பேராதன் (Grandmaster) பட்டம் பெற்றவர். மூன்றாவது இளம் பேராதன் (Grandmaster) என்ற வரலாற்றுக்கும் சொந்தக்காரர் இவர்.

இவரைப் பற்றிய பல செய்திகளும், காணொளகளும் இப்போது பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

அதில் 2017 ஆம் ஆண்டிலேயே இவர் உலக சாம்பியன் ஆவதே நோக்கம் என்று பேட்டி அளித்திருக்கிறார்.

வள்ளுவனின் வாக்கான, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை தவறாமல் பின்பற்றி வென்றிருக்கிறார்.

நினைவுகள் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

மேலும் இதன் மூலமாக பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கையும் விடுக்கிறோம்.

உங்கள் குழந்தைகளின் மீது உங்களது பார்வையை, எண்ணத்தை, கருத்தை, லட்சியத்தைத் திணிக்காதீர்கள்.

வழிநடத்துவது என்பது இன்றியமையாத ஒன்று, ஆனால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவர்களைத் தடுப்பது தவறு.

குகேஷின் பெற்றோர் போல குழந்தைகளை அதன் போக்கில் விட்டால், மேலும் பல சாதனையாளர்களைப் பெறலாம்.

படிப்பில் சாதனை படைக்கும் குழந்தைகள் படிக்கட்டும். விளையாட்டில் சாதிக்கத்துடிக்கும் குழந்தைகளையும், படிப்பைக் காரணம் காட்டித் தடுக்க வேண்டாம்.

அன்புடன் நினைவுகள்.