Categories
நினைவுகள்

மாடி பஸ்- கம்பீரமான இரட்டை அடுக்குப் பேருந்தின் நினைவுகள்

மாடி பஸ்.

உண்மையிலேயே அந்த வகைப் பேருந்தின் பெயர் இதுதானா என்பது தெரியாது.

ஆனால் மாடி பஸ் என்று சொன்னாலே எல்லாருக்கும் கண்டிப்பாகப் புரிந்து விடும். ஆமாம் டபுள் டக்கர் பஸ் என்று ஆங்கிலத்திலும், மாடி பஸ் என்று தமிழிலும் வழக்காடலாக இருந்தது அந்த வகைப் பேருந்து.
இதில் பஸ் என்பது தமிழ் வார்த்தை என்றே பலரும் நம்பியிருந்ததும் உண்மை.

இதன் உண்மையான தமிழாக்கம் இரட்டை அடுக்குப் பேருந்து என்பதாகும். ஆனால் அதைச் சொன்னால் பலருக்கும் விளங்காது.

சரி சில விஷயங்களில் மொழி முக்கியமல்ல. பீலிங் தான் முக்கியம். அதாவது உணர்ச்சிகளும், அனுபவமும் தான் முக்கியம்.

அந்த வகையில் நம்மில் பலருக்கும் மாடி பஸ் என்றாலே தனி பீலிங் தான்.

இந்த இரட்டை அடுக்குப் பேருந்துகள் ஒரு சிறப்பு அனுபவம் தான்.

பலரையும் போல எனக்கும் 18 A எண் கொண்ட தாம்பரம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான வழித்தடத்தில் தான் அந்தப் பேருந்தில் பயணித்த அனுபவம்.

அது ஒரு அலாதியான அனுபவம் தான். பெரும்பாலும் அந்தப்பேருந்தில் வழக்கமாக அந்த வழித்தடத்தில் பயணிப்பவர்களும், அலுவல் காரணமாக தினமும் அந்த வழித்தடத்தில் வருபவர்களும், அவசரமாகப் பயணம் மேற்கொள்பவர்களும், மாடியில் ஏறுவதில்லை. கீழேயே நின்றோ, அமர்ந்தோ பயணத்தை முடித்துக் கொள்வார்கள்.

அதனால் என்னைப் போன்ற ஆர்வக் கோளாறுகளுக்கு மாடியில் நிற்பதற்கோ, பெரும்பாலும் நான் பயணித்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்ற காரணத்தால் அமர்வதற்கும் கூட இடம் கிடைத்து விடும்.

மேலே மாடியில் ஏறிய உடன் அதே வழக்கமான மொக்க காமெடி, மாடில டிரைவர் இல்லடோய் என்று சொல்லி, நண்பர்களுடன் ஒரு சிரிப்பு சிரித்ததும், அங்கிருக்கும் நடத்துனரின் மைண்ட் வாய்ஸ் அவரது முகத்தைப் பார்த்தே உணர முடியும். வந்துட்டானுங்க, மாடி ஏறி என்று அவர் சிடுமூஞ்சியுடன், எங்க போகனும் என்று கேட்டவுடன் சில்லறையைக் கொடுத்து தாம்பரம் என்றதும், அமைதியாகி விடுவார். நல்லவேளை இவங்க சில்லறை கொடுத்தாங்க என்று சிடுமூஞ்சி, சிரித்த மூஞ்சியாகிவிடும்.

அடுத்து தாம்பரம் வரை மாடி போர்ஷன் நமக்கு தான்.

பழைய புகைப்படம்

பெரும்பாலும் மௌன்ட் சாலை TVS ல் ஏறிப் பயணப்படத் துவங்கி, தாம்பரம் வரை செல்வதே வழக்கம்.

சத்யம் திரையரங்கு சென்று விட்டு, இந்த TVS நிறுத்தத்தை அடைந்து அங்கிருந்து தாம்பரத்திலுள்ள மச்சானின் அறைக்குச் செல்லும் பயண அனுபவம் தான் இந்த மாடி பஸ் அனுபவம்.

நான் கல்லூரி காலத்தில் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்காகவே சென்னை வந்து போகும் சமயத்தில், மெரினா, சத்யம் போல இந்த மாடி பஸ் பயணமும் எனது ஆசைகளில் ஒன்று.

இணையத்தில் பதிவிறக்கியது.

அதன்பிறகு தொடர்பேருந்தில் சில அனுபவங்கள்.
அதற்குப் பிறகு எனக்கும் MTC க்குமான தொடர்பு குறைந்து விட்டது.

மாடி பஸ்கள் மறைந்து மாடர்ன் பஸ்கள் வரவும். நானும் படிப்பு முடித்து உத்யோகம் பார்க்க, டூவீலர் ஏறவும் சரியாக அமைந்தது.

என்னுடைய இனிய பயண நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் மாடி பஸ்கள் பற்றி இன்று சமூக வலைத்தளம் ஒன்றில் காண நேர்ந்தது.

அதன் உத்வேகத்தில் எனது இனிய நினைவுகளை இந்த நினைவுகள் வாசகர்களுக்காகப் பகிர்கிறேன்.

அன்புடன் நினைவுகள்.