Categories
கருத்து தமிழ்

ஊழியரா?வீட்டு நாயா? நமது வேலைக் கலாச்சாரம் சரியா?

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,
மாலை முழுதும் விளையாட்டு

என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை.

பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு.

ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மேலாளர் அல்லது துறைத்தலவைர், புலனத்தில் ஒரு குழுமத்தை (whatsapp group) உருவாக்கி விடுகிறார்.

அந்தக்குழுமத்தில் முடிந்தால் தன்னை விட உயர் அதிகாரிகளையும் இணைத்தோ, அல்லது அதில் பேசப்படும் விஷயங்களைப் பதிப்பித்தோ, தான் ஒரு நிறுவன விசுவாசி என்று காட்டிக் கொள்வதற்காக, இரவு பகல், சனி, ஞாயிறு என்று பாராமல், அந்த வேலை முடிந்ததா, இந்த வேலை முடிந்ததா?

அந்த வேலை என்ன அளவுகோலில் இருந்தது, இந்த வேலை என்ன அளவுகோலில் இருந்தது? நாளை பகலில் நாம் என்ன வேலை செய்யப்போகிறோம்? இன்றே திட்டமிட்டுக் கொள்வோம் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் தொந்தரவு செய்து தாளிப்பது.

முதலில் ஒரு விஷயத்தை உணர்வேண்டும்.
ஒரு சமூக வலைத்தள தகவல் செயலி, ஒரு மனிதனுடைய தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே.

ஒரு தொழில் காரணத்துக்காக, அதை உபயோகிப்பதே முறையற்றது. வேண்டுமென்றால் நிறுவனத்தின் பெயரில் ஒரு டொமைன் அதாவது .corp ,மாதிரி இணைய தள தகவல் பரிமாற்ற (mail) தளத்தில் தொழில் ரீதியாகப் பேசிக்கொள்ளலாமே?

இலவசம் என்பதால் இதை தங்கள் விசுவாசத்தைக் காட்டும் தளமாகப் பயன்படுத்தி, தங்களின் நேரத்தை மட்டுமல்லாது, தங்களுக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களின் நேரத்தையும் வீண்டிக்கலாமா?

இதையே ஊழியர்கள் திருப்பிச் செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா? பணி நேரத்தில் ஒரு பெண் ஊழியர் யாரிடமோ, வாட்ஸ்அப்பில் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பேசிக் கொண்டிருந்தால் நிர்வாகமோ, நிறுவனமோ ஏற்றுக் கொள்ளுமா?

அது தவறு என்றால், ஞாயிற்றுக்கிழமை, வாட்ஸ் அப்பில் திங்கட்கிழமை என்ன வேலை செய்யலாம் என்று பேசுவதும் தவறு தான்.

தவிர்க்க முடியாத சூழலில் ஏதோ ஒரு காரணத்திற்காக, சிறிது அதிக நேரமோ, அல்லது சனி ஞாயிறுகளிலோ வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் நேரங்களில் வேலை செய்வது தவறல்ல.

சம்பளம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு நாம் தரும் விசுவாசம் என்பது அந்த அளவில் இருந்தாலே பெரிது தான். அதற்குத் தகுந்த பலனும் நிர்வாகத்திடம் இருந்து நாம் திரும்பப் பெற்றால் இன்னும் திருப்தி.

ஆனால் நித்தம், இந்த சமூக வலைத்தளத்தில் ஒரு குழுமத்தைக் கூட்டிக் கொண்டு வேலை வேலை என்று கும்மி அடிப்பது மூடத்தனம்.

ஒரு தகவல் அனுப்ப பத்து ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டால் இந்த விசுவாசம் காணாமல் போய்விடும் என்பது நமக்கும் தெரியும்.

எதுவுமே இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக எல்லை தாண்டி உபயோகித்துப் பழகிவிடக்கூடாது.

எல்லை தாண்டிய உபயோகம் தவறு என்பதை விட, எல்லை தாண்டிய விசுவாச நாடகமும் தவறு.

எந்த நிறுவன முதலாளிகளும், சனிக்கிழமை இரவு, அல்லது ஞாயிற்றுக்கிழமை பகலிலோ, தான் அனுபவிக்கும் இதே மகிழ்ச்சியை, ஆடம்பரத்தை தன் ஊழியர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, என்று சிந்திப்பதில்லை.

அப்படியிருக்கும் போது நாம் மட்டும்அவர்கள் வீட்டுக் காவல் நாய்கள் போல விசுவாசம் காட்டுவது அவசியமற்றது.

திருந்தி வாழ முயற்சி செய்வோம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனாக மாற முயற்சி செய்வோம். அது என்ன என்றால் , வெள்ளைக்காரன் போல, வேலை நேரத்தில் வேலை, விடுமுறை நேரத்தில் வீடு என்று நியாயமாக வாழும் முறை.

நியாயமாக வாழலாம்.

அன்புடன் நினைவுகள்