சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி.
இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.
மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை.
வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் தான் என அரசியல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ, அங்கே 3 உயிர் பலியாகி இருப்பதன் காரணம், அலட்சியம் தான். நிர்வாகத்தின் சீர்கேடு தான். கூகுள் அல்ல.
கட்டி முடிக்கப்படாத பாலம் என்று சில இணைய பக்கங்களிலும், பழுதான பாலம் என்று சில பக்கங்களிலும் தகவல் வருகிறது.
ஆனால் எல்லா இணையப் பக்கங்களிலும் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது என்னவென்றால் இந்த விபத்திற்குக் காரணம், கூகுள் மேப்பின் தவறு என்பது.
தன் கடமையை சரியாகச் செய்யாத ஒட்டுமொத்த மனித இனமும், 3 உயிர் பலி ஆன சம்பவத்திற்கு கேவலம் ஒரு இயந்திரத்தின் மீது எளிதாகப் பழிபோடுவது அபத்தம். அது கட்டிமுடிக்கப்படாத பாலமோ, அல்லது பழுதடைந்த பாலமோ.
எப்படி இருந்தாலும் அந்தப்பாலத்தின் மீது வண்டிகள் போகாத வண்ணம் ஒரு தடை, ஒரு அபாயப் பலகை, அல்லது ஒரு விளம்பரம் கூட வைக்கப்படாமல் இப்படி 3 உயிர்களை பலி கொடுத்து விட்டு, கூகுள் மேப்பின் வழிகாட்டுதலால் 3 பேர் பலி என்று வாய்கூசாமல் பேசுவது அநியாயம்.
இது போன்ற ஒரு சம்பவம் அந்நியன் படத்தில் கூட வரும். ஒரு குழந்தை சாலையில் இருந்த மழைநீரில் விழும்போது, அதில் மின்சாரக்கம்பி அறுந்து கிடந்து, மின்சாரம் பாய்ந்து அந்தக் குழந்தை இறந்து விடும்.
இதில் யாராவது ஒருவர் தம் கடமையைச் சரியாகச் செய்திருந்தாலும் அந்தக்குழந்தை இறந்திருக்காது என்று அதன் தகப்பன் வாதாடுவார்.
அதேபோலத்தான் இந்த சம்பவமும் கூட.
பாலம் கட்டும், ஒப்பந்த்தாரரோ, நெடுஞ்சாலைத்துறையோ, போக்குவரத்துக் காவல் துறையோ, இப்படி ஏதாவது ஒரு துறை மக்களின் மீது அக்கறை கொண்டு ஒரு சின்ன காரியத்தை (அபாயப் பதாகையோ, தடையோ) செய்திருந்தால்கூட இந்த விபத்துத் தடுக்கப்பட்டிருக்கும்.
ஒட்டுமொத்த துறைகளின் அலட்சியம் தான் இந்த விபத்துக்குக் காரணம்.
இப்படி அநியாயத்திற்கு அலட்சியத்தோடு இருந்து விட்டு, உயிர் பலிக்குக் காரணம் கூகுள் மேப் என்று கூசாமல் செய்தி பரப்பவும் செய்கிறார்கள்.
அலட்சியம் தான் மிகப்பெரிய ஆபத்து.
ஆதங்கத்துடன் நினைவுகள்.