குறை சொல்வதற்காக அல்ல.
ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம்.
ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது.
படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம்.
மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன?
நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும்.
ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெறும் மருத்துவருக்கும் லட்சங்களில் சம்பளமும் வெறும் பாராட்டும் கைதட்டலும்.
சினிமாவை விட இயல்பாகி விட்டதா? கேவலமாகி விட்டதா விண்வெளி ஆராய்ச்சியும் மருத்துவமும்?
நம்மில் பெரும்பாலானோர் ரசிக்கிறோம், கை தட்டுகிறோம், மகிழ்கிறோம். இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த சினிமாக்காரர்களின் வசதிகளையும், வாழ்க்கையையும், ஒவ்வொரு சினிமா சம்பாதிக்கும் கோடிகளையும் பார்க்கும் போது, நானும் என்போன்றோரும் உண்மையிலேயே பைத்தியம் என்றே தோன்றுகிறது.
ஓரு சினிமா 600 கோடி சம்பாதித்தது, 1000 கோடி சம்பாதித்தது என்று அன்றாடம் விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. கிட்டதட்ட உண்மையும் கூட.
ஆனால் நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட காசு இல்லாமல் பொதுமக்களிடம் கூத்தாடுவார்கள்.
பல துணை நடிகர்கள் வைத்தியம் பார்க்க காசு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு சாவதும் உண்டு!
அப்போது எங்கே போகிறது இந்த கோடிகள்?
ச்சீ… என்று தோன்றுகிறது இவற்றை பார்க்கும் போது.
120 ரூபாய் பெறுமானமுள்ள டிக்கெட்டை, முதல் நாள் 200 முதல் 1000 ரூ வரை கொடுத்துப் பார்க்கும் பைத்தியக்கார ரசிகர்களின் பணத்தில் தானே இந்தப் பகுமான வாழ்க்கை?
ஒரு மாசத்துக்கு 30,000 முதல் 50,000 வீதம் ஒரு சினிமா ஒரு வருடம் எடுக்கப்பட்டால் ஒரு கதாநாயகனுக்கு 3,60,000 ரூ முதல் 6,00,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டால் யாராவது நடிக்க வருவார்களா? நடிப்பை ஆத்மார்த்தமாக செய்யாமல் தொழிலாக செய்து சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட இவர்களுக்குத்தான் நாம் பைத்தியக்கார ரசிகர்களாக இருக்கிறோம்.
அதே மாதிரி ஒரு படத்துக்கு 5-6 லட்சம் எந்த இயக்குனராவது படம் எடுப்பாரா?
அப்படியென்றால் 30,000 சம்பளம் வாங்கும் பொதுஜனம் மட்டும் நியாயமாக தியேட்டரில் 200 ரூ கொடுத்து டிக்கெட் வாங்கி 480 ரூபாய்க்கு பாப்கார்ன் வாங்கித்தின்று படம் பார்த்து இந்த வியாபார நோக்கம் கொண்ட சினிமாவை வாழ வைக்க வேண்டுமா?
சம்பளத்தைக்குறைத்துக்கொண்டு, வாய்கிழிய வசனம் பேசுவது போல நீ வாழ்வதற்காக மட்டும் சினிமாக்காரர்கள் சம்பாதித்தால், சினிமா டிக்கெட் விலை 30-50 ரூ என நிர்ணயிக்கலாம்.
பிறகு பேசலாம் தியேட்டரில் படம் பாருங்கள் என்று!
அதை விட்டு ஒரு கதாநாயகன் 200 கோடி சம்பளமும், ஒரு இயக்குனர் 50 கோடி சம்பளமும், மற்றவர்கள் ஏகபோகமாக சம்பளமும் வாங்கிக் கொண்டு, 20,000 ரூ சம்பாதிக்கும் ஒரு இயல்பான குடும்பஸ்தன் 1000 ரூ செலவு செய்து தியேட்டரில் வந்து படம் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
சத்தியமாக இல்லை.
நீங்கள் எதை செய்கிறீர்களோ, அதுவே உங்களுக்கும் செய்யப்படும்.