இடைத்தேர்தல்
மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது இந்த இடைத்தேர்தல்.
சமீபத்தில் கூட திரு.ராகுல் காந்தி அவர்கள் தனது வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழ்ந்தது.
இது ராகுல் காந்தி அவர்களின் கதை மட்டுமல்ல.
எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதை செய்வது வழக்கம் தான்.
இந்த இடைத்தேர்தலானது ஒரு உறுப்பினர் உயிரிழந்து, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டாலோ, அல்லது குற்ற வழக்கில் சிறை சென்ற காரணத்தால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் பரவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு நட்சத்திர வேட்பாளர் தான் ஒரு தொகுதியில் நின்று தோற்று விட்டால் என்னாவகுமோ என்ற அச்சத்தின் காரணமாக இரண்டு வேறு தொகுதிகளில் நின்று இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து, இரண்டு தொகுதிகளிலும் பணத்தை வாரி இரைந்து, வெற்றி பெற்று விட்டால், அதில் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை கட்டாயம், ராஜினாமா செய்தாக வேண்டும்.
ஏனென்றால் ஒரு நபர் ஒரு தொகுதியின் சார்பாகத்தான் உறுப்பினராகப் பணியாற்ற இயலும்.
சரி அப்படி ஒரு நபர் ஒரு தொகுதியின் உறுப்பினராக மட்டுமே பணியாற்ற முடியுமென்றால், ஏன் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும்?
ஒரு நபர் ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார் என்று அறிவித்து விடலாமே?
ஒரு அரசுத்தேர்வு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அது இரண்டு மூன்று பிரிவுகளாக, வெவ்வேறு நாட்களாக நடக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
அந்தத் தேர்வுக்கு ஒரு ஆள் மூன்று முறையோ இரண்டு முறையோ விண்ணப்பித்துப் பணம் கட்டினால், அவரை மூன்று முறை தேர்வு எழுத விடுமா இந்த அரசு?
இதேதானே தேர்தல் களத்திற்கும்?
அதென்ன அரசியல்வாதி என்றால் விதிவிலக்கு?
இல்லாவிட்டால், இரண்டு தொகுதிகளில் வென்ற வேட்பாளர் இரண்டு தொகுதிகளிலுமே, உறுப்பினராக இருக்கட்டும்.
சம்பளம் வேண்டுமென்றால் ஒரே சம்பளமாகக் கொடுக்கலாமே? அரசாங்கத்திற்கு செலவு மிச்சம் தானே?
அப்படி இரண்டு தொகுதிக்கு ஒரு உறுப்பினர், அவருக்கு ஒரே சம்பளம், ஒரே பென்ஷன் என்று அறிவித்து விட்டால், அரசாங்கப் பணம் மிச்சம் தானே?
இதையெல்லாம் செய்ய முடியாது, ஆனால் ஒருவர் தனது லாபத்திற்காக இரண்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்று பிறகு ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு மீண்டும் இடைத்தேர்தல்கள் நிகழ்கின்றன.
இந்த அபத்தம் கட்டாயம் மாற வேண்டும்.
ஆதங்கத்துடன் நினைவுகள்.