Categories
தமிழ்

கோபத்தின் விளைவு- மருத்துவருக்குக் கத்திக்குத்து- சரியா?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் , எல்லை மீறிச் செல்பவன் அதே கோபத்தால் அழிவான் என்பதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய பரபரப்பான மருத்துவர் கத்திக்குத்துச் செய்தி.

அதேபோல வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற ரீதியில் அந்த மருத்துவரும் கூட ஏதோ ஒரு விதத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

காரணம் நானும் எனது சொந்த அனுபவத்தில் பல மருத்துவர்களை சந்தித்தும் , மருத்துவம் பெற்றும், பழகியும் இருந்திருக்கிறேன்.

அந்த மருத்துவர்களிடம் நான் கண்ட நல்ல பண்பு , தன்மையான பேச்சு.

ஆனால் அதே மருத்துவர்கள் பரபரப்பான 24*7 மருத்துவமனையில் எல்லா நோயாளிகளிடமும் , அவர்களது உறவினர்களிடமும் அன்பாக, இனிமையாகப் பேச முடியும் என்பது சாத்தியமல்ல.

நான் மருத்துவரும் காரணம் என்று மேலே குறிப்பிட்டது அவர், சிகிச்சை தரவில்லை என்றோ, தப்பான சிகிச்சை அளித்தார் என்பதையோ குறிப்பதற்காக அல்ல.

ஆனால் நிச்சயம் அவர் அந்த இளைஞரிடம் பேசிய வார்த்தைகளிலோ, பேசிய முறையிலோ ஏதோ ஒரு சில வார்த்தைகளோ , சந்தர்ப்பங்களோ அந்த இளைஞருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்திருக்கலாம்.

ஆனால் அந்த இளைஞர் தரப்பு ஆட்கள் பேசும் போது, அந்த மருத்துவர் சரியான மருத்துவம் தரவில்லை என்றும், தன்னிடம் தகாத முறையில் பேசியதாகவும், கோப்புகளை முகத்தில் வீசி எறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அந்த அம்மா சிகிச்சை பெற்ற பிறகும் குணமடையாமல் இருந்த காரணத்தால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அங்கே அவர்கள் கொடுத்த தகவலின்படி , அரசாங்க மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி ஏதாவது இருந்தால் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு நேரடியாக அந்த மருத்துவரை நோக்கிச் சென்று அவரை சரமாரியாக குத்திவிட்டால் என்ன சரியாகி விடப்போகிறது.

உண்மையிலேயே மருத்துவர் அவரது கடமையை சரியாக செய்திருக்காவிட்டால், அவரை அந்தப்பணியிலிருந்து இடைநீக்கமோ, அல்லது முழுமையான பணிநீக்கமோ செய்யும் படி அரசாங்கத்திடமோ, சட்டத்திடமோ நேர்மையாகப் போராடியிருக்கலாம்.

சட்டமெல்லாம் பணக்காரனுக்கும் , அதிகாரமிக்கவனுக்கும் தான் என்று சொல்லி சொல்லியே அது இல்லாமலேயே ஆக்கி விடப்போகிறோம்.

நேற்று கூட உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிமித்தமாக மக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

சட்டம் நம் பக்கம் சாயவில்லை என்றால், அது சாயும் வரை நாம்தான் வளைக்க வேண்டும்.

அம்மாவுக்கு சிகிச்சை தரவில்லை என்று கோபமாக கத்தி எடுத்து கொலை கூட செய்யும் அளவிற்கு இருக்கும், அந்தத் துணிச்சலை, நேர்மையான சட்டப் போராட்டத்தின் முதலீடாக ஆக்கி வென்றிருந்தால் இந்த இளைஞர் தான் வீர இளைஞரும் கதாநாயகனும் ஆவார்.

ஆனால் அவர் தன் கோபத்தைத் தவறான வழியில் வெளிப்படுத்தி, தற்போது குற்றவாளியாகி நிற்கிறார்.

யாரை தண்டிக்க நினைத்தாரோ அந்த மருத்துவரை அப்பாவி ஆக்கி விட்டார்.

தான் செய்ய நினைத்த காரியம் தலைகீழாக மாறிப்போனது.
தன் கோபம் தன்னையே எரித்து விட்டது.

இந்தப்பதிவு மருத்துவ சமுதாயத்திற்கு எதிரனதாகவோ, அல்லது ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயமும் தனது கடமையைச் செய்யவில்லை என்றோ பழி போடுவதற்கு அல்ல

தனது ஓயாத பணிச்சுமையையும் தாண்டி புன்முறுவலுடன் பேசும் பல மருத்துவர்களும், செவிலியர்களும் , மருத்துவ ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அனைவருக்கும் அந்தப் பொறுமை வந்துவிடாது தான்.

பணிச்சுமை காரணமாக, தலைக்கேறிய கோபத்தில், நோயாளிகளின் உறவினரிடம் ஏதாவது சூழலில் மருத்துவர்களோ, அல்லது மருத்துவப் பணிநாளர்களோ கோபமான தகாத வார்த்தைகளைப் பேசினால், அவர்களின் நிலையறிந்து அதை மறந்து விடலாம்.அல்லது அவர்களுக்குக் கட்டாயம் தண்டனை கொடுக்க வேண்டுமானால் சட்டத்தின் வழியை நாடலாம்.

கோபமும் , வன்முறையும் எதற்குமே தீர்வாகாது.

அன்புடன் நினைவுகள்.