பொதுவாக கற்றல் என்பது இந்த நாள் வரை பெரும்பாலும் புத்தக மற்றும் எழுத்து வடிவில் தான் உள்ளது.
பள்ளிகளில் என்னதான் நவீனம் புகுந்தாலும் இன்றளவிலும் ஆசிரியர் எழுதி அதை மாணவர்கள் கவனிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
நாம் ஒரு வீடியோவைப்பார்த்து, அல்லது ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.
அது நமது கற்பனைத்திறன்.
உதாரணமாக, அந்தக்காலத்தில் டிவி, யூடியூப் எல்லாம் இல்லாத போது, குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, பெரும்பாலான விஷயங்களை செவி வழியேதான் அறிந்து கொண்டார்கள்.
அப்போது அவர்களின் கற்பனை சிறிது தூண்டப்படுகிறது.
உதாரணத்திற்கு இந்த வாசகத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மரப்பலகையில் அமர்ந்து ஆசாரி வேலை செய்கிறார்.
இப்போது அந்த மரப்பலகையை எப்படி யூகிக்கலாம்?
சிறிய கால்களை உடையதாக, பழமையான தோற்றம் கொண்டதாக ஒருவர் யோசிக்கலாம், இன்னொருவர் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய உயரம் கொண்ட மரப்பலகையாக அதை யோசிக்கலாம்.
ஆனால் இப்படி யோசிக்கும் போது ஒரு கேள்வியும் எழும். எந்த உயரத்தில் பலகை இருந்தால் அவருக்கு வேலை செய்ய தோது?
மிக உயரமான பலகை ஆசாரிக்கு உபயோகப்படுமா?
இப்படி கற்பனைத்திறன் தாண்டி, கேள்வி ஞானமும் தருவது செவி வழி கற்பித்தல்.
மாறாக நாம் பலகையைக் காட்டிவிட்டால் அங்கே இந்த கற்பனைக்கோ, கேள்விக்கோ அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.
இராவணனை கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள், இராவண மகாராஜாவின் பத்து தலைகளை தனக்கு ஏற்ற பாணியில் கற்பனை செய்திருப்பார்கள்.
உதாரணமாக ஒரு 3 வகையான கற்பனைகளை இங்கே கையில் வரையப்பட்ட ஒரு யதார்த்தமான ஓவியமாக காட்டியிருக்கிறோம்.
இராவணரின் பத்து தலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன தேவை என்பதைப்பொறுத்து கற்பனை செய்து கொள்கிறார்கள்.
அதாவது ஒருவருக்கு ஒரே நேரத்தில் எட்டு திசையையும் பார்க்க ஆசை எனில் எட்டுத்திக்கும் நோக்கும் தலைகளை கற்பனை செய்வார்.
சிலர் பிரம்மனைப்போல நாற்புறம் பார்த்தால் போதுமென அதற்கு தகுந்த முறையில் தனது கற்பனையை சுருக்கி அமைப்பார்.
எப்படியோ இங்கே இராவணன் என்பது அவரவர் கற்பனை.
அப்படி கற்பனைகள் வெளிப்பட்டு குழப்பம் வரும்போது தான் கேள்வி எழும். பத்து தலைகளும் எந்தெந்த திசைகள் நோக்கி அமைந்திருக்கும் என்று.
அப்படி கேள்வி வரும்போது பதில்களும் வரக்கூடும். பத்து தலை என்றால் பத்து தலை உறுப்பாக அல்ல, பத்து நபர்களின் மூளைகள் செய்யக்கூடியதை ஒற்றை ஆளாக செய்வதால் அப்படி பத்து தலை என்று பட்டம் சூட்டப்பட்டார் என்று.
கார்ட்டூனில் பத்து தலைகளை உருட்டி உருட்டி காட்டும் போது, இராவணின் உருவம் இதுதான் என்று தீர்ப்பாகிறது. கற்பனைக்கும் கேள்விக்கும் இங்கே இடமில்லை.
இப்படி கற்பனைத்திறனையும், கேள்வித்திறனையும் அதிகரிக்கும் வாசிப்பு மற்றும் செவிவழி கற்றல் முறைகளை நாம் கைவிடக்கூடாது்.