Categories
சினிமா தமிழ்

லக்கி பாஸ்கர்- திரை விமர்சனம்

தீபாவளி படங்களின் வரிசையில் தமிழ் படங்களைத்தாண்டி தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் என்ற படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழில் வெளியான அமரன் படத்துக்கு இணையாக இந்தப்படமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் அனைவருக்கும் பரீட்சயமான SCAM 1992, அதாவது ஸ்டாக் மார்க்கெட், ஹர்ஷித் மெஹ்ரா, மகதா வங்கி ஆகிய இந்த மோசடி சுழலில், ஒரு சின்ன எலி தனக்குத் தேவையானத சுருட்டிக் கொண்டு, தனக்குப் பொறி வைத்தவர்களை அதே பொறியில் சிக்க வைத்து விட்டுத் தப்பித்து விட்டால் எப்படி இருந்திருக்கும்?

அப்படி ஒரு கற்பனை கதை தான் இந்தப்படம்.

ஆமாம், அதே 92 மோசடியின் பின்புலத்தில் தான் இந்த பாஸ்கரும், டபுள் க்ராஸ் செய்து தன் புத்திசாலித்தனத்தாலும், தனது அப்பாவின் வழிகாட்டுதலாலும் தப்பிக்கிறார்.

முதலில் கதையின் கதாபாத்திரங்களை நமது மனதில் ஆணி அடித்தாற் போல பதிய வைத்ததில் படக்குழு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

கதாநாயகன், நாயகி, அவர்களின் குழந்தை, அவரது மாமியார்,மச்சான், மச்சான் மனைவி, குழந்தை, நண்பர், சக ஊழியர்கள், பக்கத்து வங்கி மேலாளர்,மோசடி வியாபாரி கரண், கடன்காரர்கள், பானி பூரி கடைக்காரன், என அந்த உலகத்திற்குள் நம்மை ஒன்றிணைத்ததில் படக்குழு மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன கதாபாத்திரம் வந்து போவது கூட நியாயப்படுத்தப்பட்டு நமது மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சில படங்களில் கதாநாயகி கதாபாத்திரமே எதற்கு வந்து போகிறது என்ற ரீதியில் இருக்கும் போது, படத்தில் இருக்கும் இந்தக் கதாபாத்திரங்களுக்கும் ஒரு ஆழமான காரணம் கொடுத்த வகையில் இந்தப்படம் மிக அருமை.

நேர்மையாக வாழ்ந்தால் பணம் எல்லாம் சம்பாதிக்க முடியாது, வேண்டுமானால் நான்கு பேரின் பரிதாபத்தை சம்பாதிக்கலாம்.
பணம் சாம்பாதிக்க வேண்டுமென்றால் புத்திசாலித்தனமாக , மாட்டிக்கொள்ளாமல், யாருக்கும் நஷ்டம் ஏற்படுத்தாமல் சின்ன சின்ன விதிமீறல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து கதையில் ஆழமாக, இரண்டு முறை சொல்லப்பட்டிருக்கிறது.

நேர்மையாக வாழும் கதாநாயகன் தனக்குக் கிடைக்க வேண்டிய, பதவி உயர்வும் கிடைக்காமல், கடன்காரர்களால் அசிங்கப்பட்டு சிங்கிள் டீ குடிக்க வழியில்லாமல் நிற்கும் அந்த நாளில் இந்த சின்ன விதிமீறலை செய்தால் என்ன என்று ஆரம்பிக்கிறான்.

பிறகு அவனது வங்கிக் கணக்கில் 100 கோடி பணம் வரும் வரை சலிக்காமல் அதைத் திரும்ப திரும்ப செய்கிறான்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ரகம்.

நமக்கும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை.

கதாநாயகன் ஏன் நேர்மையைக் கைவிட்டான் என்பது படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்தே சிறிது சிறிதாக காட்டத் துவங்கிய விதம் சிறப்பு.

இணைய விளம்பரப்படம்

கதாநாயகன் குடும்பத்தோடு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று அசிங்கப்படுவது, அவன் கடன் வாங்கிய ஆட்களிடம் அசிங்கப்படுவது என அந்த காட்சிகளின் ஆழம் சிறப்பு.

அதேபோல, ராம்கியும் ,இவரும் சந்தித்துப் பழகி நட்பாகி, மோசடிகள் செய்யும் காட்சிகளும் அருமை.

அதிலும் அந்த கார் மோசடி காட்சிகள் அட்டகாசம், கலகலப்பு.

பல இடங்களில் கதாநாயகன் மாட்டிக் கொள்வது போன்ற தோற்றம் ஏற்படும் போதெல்லாம் நாம் பதறிப்போய் ,அவன் மாட்டிவிடக்கூடாது என்று நினைப்பதும், அவன் தப்பித்த உடனே, நாம் மகிழ்வதும், படக்குழுவின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

அதாவது, அவன் தவறே செய்தாலும் பரவாயில்லை அவன் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தை நம்மிடையே அருமையாக கடத்தி விட்டார்கள்.

அதே கதாநாயகன் சிறிது பணத்திமிரில் ஆடும்போதும் , மீண்டும் திருந்தும் போதும் என வெவ்வேறு ரகமான காட்சிகள் அற்புதம்…

இறுதியில் ஒட்டுமொத்த மோசடி கும்பலுக்கு பெப்பே என்று சொல்லிவிட்டு தப்பித்து அமெரிக்கா செல்வது வேற லெவல்..

படம் பக்கா மாஸ் எண்டர்டெயினர் படம்.
குடும்பத்தோடு ரசிக்கலாம்.
அன்புடன் நினைவுகள்