நடிகர் டெல்லி கணேஷ்.
நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர்.
இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார்.
இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல்.
இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி.
பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் பார்த்துள்ளேன்.
படத்தின் கதாநாயகன், நாயகியைத் தாண்டி குணச்சித்திர நடிகராக மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.
வில்லனாகவும் கலக்கியிருந்தார். இவரது வில்லத்தனத்தை அபூர்வ சகோதரர்கள் படத்தில் ரசித்திருக்கிறோம்.
அவ்வை சண்முகி படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பை வெகுவான ஜனங்களைக் கவர்ந்தது.
நாயகன் படத்தில் இவரது கதாபாத்திரம், கமலஹாசனுக்கு இணையானது.
அந்தப்படம் பேசப்படும் வரை நடிகர் டெல்லி கணேஷின் நடிப்பும் பேசப்படும்.
1977 களிலேயே பாலச்சந்தர் அவர்களின் மூலமாக சினிமாத்துறைக்கு வந்துவிட்ட டெல்லி கணேஷ் அவர்களை நமது தலைமுறைக்கு 80,90 களின் படங்களின் மூலமாகவே பரீட்சயம்.
பெரும்பாலும் கமலஹாசன் படங்களில் இவரும் நடிப்பில் கலக்கியிருப்பார்.
மேற்சொன்ன, படங்களைத் தவிர்த்து மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இவரது சமையல்காரன் கதாபாத்திரம் இன்றளவும் ரசிக்கப்படக்கூடியது.
கலைமாமணி விருது பெற்ற இவர் மக்களின் மனதை வென்று ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லனாக அவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இவரது வில்லத்தனத்தைப் பற்றி பேசும் போது சிதம்பர ரகசியம் என்ற படம், மறக்க முடியாத ஒன்று.
விசு, S Ve சேகர், அருண்பாண்டியன் ஆகியோர் நடித்த க்ரைம் த்ரில்லர் படம். இதில் இவர் செம ஸ்டைலான கூலான வில்லனாக வலம் வருவார்.
சமீபத்திய ஆனந்தம் போன்ற படங்களில் ஒரு அமைதியான நல்ல அப்பாவாக, மிடில் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுக்கு இருந்ததைப் போல ஒரு ஜாலியான மாமனாராக இப்படி நம் மனதிலிருத்து நீங்கா இடம் பிடித்த இவர், நேற்று இரவு இந்த மண்ணுலகை விட்டு நீங்கி விட்டார்.
இவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி , கலைமாமணி டெல்லி கணேஷ் அவர்களுக்கு கலை வணக்கத்தை சமர்ப்பிக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் நினைவுகள்.