Categories
சினிமா தமிழ்

ப்ளடி பெக்கர்- திரை விமர்சனம் .

தீபாவளி பட வரிசை (அமரன், பிரதர்) விமர்சனம் இன்னும் முடிந்த பாடில்லை.

அடுத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பைக் கிளறி, முதல் நாள் இணைய வாசிகளால் கிழித்துத் தொங்கவிடப்பட்ட ப்ளடி பெக்கர் திரைப்படம்.

இணைய விமர்சனங்களையும், ரசிகர்களின் விமர்சனங்களையும் கேட்டு, இந்தப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கும் படம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்.

வித்தியாசமான படங்களை விரும்பும் ஆட்களுக்கு இது ஏமாற்றம் அளிக்காத ஒரு நல்ல படம் தான்.

கதைக்களம் புதியது. திரைக்கதை ஒரு வீட்டினுள்ளே குறிப்பிட்ட சில கதாபத்திரங்களை வைத்தே நகர்வதால் சற்றே நெளியச் செய்கிறது. மற்றபடி கழுவி ஊற்றும் அளவிற்கு இது அவ்வளவு மோசமில்லை.

அரண்மனை, தில்லுக்கு துட்டு போன்ற பேய் படங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே நான்கு, ஐந்து ஆட்கள் கும்மியடித்து குதூகலம் செய்வது போன்ற திரைக்கதை தான்.

சற்றே சிறிய பதட்டமும், சில இடங்களில் நல்ல நகைச்சுவையும், கதையின் மையக்கருவில் கதாநாயகனைக் கொண்டு இணைக்கும் ட்விஸ்ட்டும் சிறப்பு.

க்ளைமாக்ஸ் காட்சியில் ராதாரவி வந்த பிறகு கலகலப்பு.

கவின் மற்றும் அவரோடு இருக்கும் சிறுவனின் ஆரம்ப காட்சிகள் மற்றும் பிச்சையெடுக்கும் காட்சிகள் கலகல ரகம்.

பெட்ரோமாக்ஸ் என்ற தமன்னா நடித்த பேய் படத்திலிருந்து கதாபாத்திரங்கள் திருடப்பட்டுள்ளது.
அதாவது சினிமா பைத்தியம் என்ற கதாபாத்திரம் அந்தப் படத்திலிருந்து உருவப்பட்டிருந்தது.
இந்தப்படத்தில் வந்த அந்த பைத்தியம் கலகலவென சிரிக்க வைக்கா விட்டாலும், எரிச்சலூட்டவில்லை என்ற வகையில் இருந்தது.

பணத்துக்காக கையேந்துபவன் பிச்சைக்காரனா, அல்லது பணத்துக்காக கொலை கூட செய்யத்துணிந்தவன் பிச்சைக்காரனா என்ற ரீதியில் ஒரு கேள்வியை எழுப்புகிறது.

கவினின் மனைவியாக வரும் கதாபாத்திரம் மனதில் ஆழமாகப் பதியவில்லை.

ஒரே ஒரு காட்சியில் நம்மிடையே பரிதாபத்தை சம்பாதித்ததைத் தவிர்த்து மற்றபடி பெரிதாக மனதில் நிற்கவில்லை.

ரெடின் கிங்க்ஸ்லிக்கு நல்ல வாய்ப்பு. அவரது கதாபாத்திரமும் சிறப்பு.

வக்கீல் கதாபாத்திரம் மிரட்டலும், நகைச்சுவையுமாக கலந்து நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ராதாரவியின் குடும்ப வாரிசுகளாக வரும் அத்தனை நடிகர்களும் நல்ல தேர்ந்த நடிப்பைத் தந்து படத்தை உயிரோடு வைத்திருந்தார்கள்.

படத்தின் கதாபாத்திரங்கள்

ஒரு சிறிய சலிப்பைத் தந்தாலும் இறுதி வரை படத்தை முடிங்கடா என்ற ரீதியில் எரிச்சலைத் தரவில்லை.

பல பேய்ப்படங்களில் வீட்டை சுத்தி சுத்தி நகர்ந்த திரைக்கதை, ஹாலிவுட் படங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளும் வித்தியாசமான கதை என்ற பார்த்தவர்களுக்கு இந்தப்படமும் அதே வரிசையில் பத்தோடு பதினொன்று.

ஆனால் பொழுதுபோக்குக்குப் பஞ்சமில்லை.
முதலுக்கு மோசமில்லை.

அன்புடன் நினைவுகள்.