திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,
காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை!
ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,
காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது!
அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்!
இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்!
இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?
மணி 10.30 ஆகுது, இன்னும் என்னயா ஆட்டம் பாட்டம்?“ என்று கரகரப்பான குரல் காவல்துறை வாகனங்களில் ஒலிக்கிறது!
எத்தனை எத்தனை கேளிக்கைகள்!?
அத்தனையும் மகிழ்ச்சியைப் பரைசாற்றும் கேளிக்கை நிகழ்ச்சி ஆக இருந்த வரை நன்றாகத் தான் இருந்தது!
திருவிழாக்களின் நிலை இன்று தீபாவளிக்கும்!
வாங்கிய பட்டாசை காலி செய்ய வேண்டுமானால் காலை 4 மணிக்கே எழ வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து எழுப்ப சொல்லி 5 மணிக்குள் தெருவில் இறங்கி பட்டாசு விட்டோமே?
எண்ணெய் தேய்த்து குளித்தால்தான் சக்திமான் வெடிய எடுத்து தருவேன் என்று மிரட்டிய அப்பாவையே பட்டாசு வெடிக்க கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் மிரட்டி வச்சுருக்கே!
இனி அவரு எத சொல்லி எண்ணெய் குளியலுக்கு அழைப்பாரோ?
ஒழுங்கா சாப்புடு இல்லாட்டி வெடிய புடுங்கிருவேன் என்று மிரட்டிய அம்மா இனி சும்மா தான் இருக்கனும் போல!
சரி டைம் சொன்னியே தலைவா!
சன் டிவில சாயுங்காலம் படம் போடுவான், சினிமா போகனும். இப்படி பல கமிட்மென்ட் இருக்கும் போது 8-10 எப்படி வெடிக்கிறது?
2 மணி நேரம் ராக்கெட் விடுறதுக்கே பத்தாதே தலைவரே?
பாட்டில் எடுக்கனும் மண்ணு நிரப்பனும்…
புஷ்வானம், தரச்சக்கரம் சாட்ட பாம்பு மாத்தரை..
சரவெடி அணுகுண்டு சீனி வெடி மிளகா வெடி..
இன்னும் எத்தனை ரகம்யா?
அத்தனையும் சொல்றதுக்கே 2 மணிநேரம் போதாதே?
சரி அத விடு…
இந்த ஒரு நாளை கணக்கில் கொண்டு வருடத்தின் மீதி நாட்கள் அனுத்தையும் கரியுடனும் சாம்பலுடனும் கழித்த எங்கள் சிவகாசி மக்களை நினைத்தாயா தீர்ப்பளிக்கும் போது?
ஒரு கார்ப்பரேட் நிறுவன ஆலையை மூட 15 வருடமாகிறது!
சிவகாசி மக்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போட நேரம் காலம் தடையில்லையோ?
நீங்கள் தீர்ப்பளிப்பதென்றால் முதலில் அவர்களுக்கு ஒரு மாற்று வேலையை அமைத்துத்தாருங்கள் தயவு கூர்ந்து!
பிறகு கவலைப்படலாம் ஒரு நாள் புகைக்காக!
ஆதங்கத்துடன் நினைவுகள்