Categories
கருத்து தமிழ்

பதிப்பாசிரியர் குறிப்பு : நினைவுகளை பற்றி – 03

நினைவுகள் வலைப்பக்கத்தின் நோக்கம், செயல்பாடு, மற்றும் இதற்கு பின்புறமாக இருக்கும் காரண, காரியங்களை தொடர்ந்து ஆராய இந்த ஆசிரியர் பக்கம்.

Oct-28-2024

அன்புள்ள வாசகர்களுக்கு,

நினைவுகள் வலைத்தளம் துவங்கி நான்கு மாத காலத்தில், சின்ன சின்ன மைல்கற்களை கடந்து பயணித்து கொண்டு இருக்கிறது.

ஒரு வார இதழ் அல்லது மாத இதழ் நடந்த வேண்டும் என்பது எனக்கொரு நீண்ட கால கனவு. என்னுடைய இளமையில், அதாவது சிறுவனாக நான் வாசித்தது எல்லாம் நியூஸ் பேப்பர்களும், வார இதழ்களும் தான்.

விகடன், குமுதம், தினமணி, தினமலர், தினத்தந்தி என்று விதமான பத்திரிக்கைகளை வித்தியாசப்படுத்தி பார்க்கும் பொழுது எழுத்துளுக்கும் தராதரம் உண்டு என்று எனக்கு அப்போதே புரிந்து விட்டது.

நான் இவைகளை வாசித்த காலத்தில் இதழ்கள் விற்க கவர்ச்சி தேவைப்பட்டது. பிரபலமான இதழ்களிலும் முன்பக்கத்தில் நடிகைகளின் படங்களே பெரும்பாலும் இடம்பெற்றன. தினசரி செய்தித்தாள்களுக்கும் இதே கதி தான். சினிமா செய்திகள் அல்லாமல் பிழைக்க முடியாது, நடிகைகளின் வண்ண புகைப்படங்கள் இல்லாமல் பின்பக்கங்கள் கிடையாது.

அவதூறு (scandal) செய்திகள் வெளிவரும் போது, தலைப்புச் செய்தியையும் புகைப்படத்தையும் பொறுத்து இதழ்கள் விற்பனை சூடு பிடிக்கும்.

இத்தகைய சூழலில், போட்டியாளர்களின் தந்திரங்களையும், விற்பனை எதிர்பார்ப்புகளையும் பத்திரிகைகள் எதிர்கொள்ள வேண்டும்.

குறைகள் இருந்த போதிலும், பொதுவான வாசகனுக்கு பொழுதுபோக்கும், கொஞ்சம் தகவலும், அரசியல் அறிவுரையும் கொடுப்பது மட்டுமல்லாமல் வாசிப்பு பழக்கத்தைத் தக்கவைக்கவும் இவைகளே உதவுகின்றன.

இவைகளின் தரம் உயர்ந்து இருக்க வேண்டும், இவற்றின் தரத்தை உயர்த்துவதின் மூலம் ஒரு நாட்டு மக்களின் சிந்தனையை, பார்வையை வளப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்பலாம். சரி நிலவரம் என்ன?

Media Ownership Matters என்ற ஜெர்மனிய இயக்கம் 2018இல் நடத்திய தரவு பகுப்பாய்வின் படி பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள், வெகு சிலரின் கையில் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், “இந்தியாவின் மீதான ஆய்வு, அதிகமான மீடியா நிறுவனங்கள் இருப்பது, பல தரப்பான கருத்துகள் கொண்ட ஊடக நிலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது அவசியமல்ல, என்பதைக் காட்டுகிறது.” என்று reporters without borders என்ற இயக்கத்தின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக உரிமை பிரச்சனை நமது நாட்டுக்கு மட்டும் தனியாக இல்லை. பொதுவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த(?) நாடுகளிலும் இந்த சிக்கல் உண்டு. ரூபார்ட் முர்டக் என்ற மீடியா முதலை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய மற்றும் தேசிய பத்திரிகைகளுக்கு சொந்தக்காரர்.

அதிகாரம் தேடுபவர்கள், அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள நேரடியாகவும் மறைமுகமாகவும், ஊடகங்களை நாடுகின்றனர்.

அமேசான் உரிமையாளர் (கம்பெனி, காடு அல்ல), ஜெப் பேசோஸ், அமெரிக்க தலைநகரமான வாஷிங்ட்டனில் செல்வாக்கு உள்ள, அந்நாளில் தடுமாறிக்கொண்டிருந்த வாஷிங்ட்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையை சில வருடங்களுக்கு முன் தனக்கு சொந்தமாக்கினார். நேற்று வரையில் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தில் இவர் நேரடியாக அதிகாரம் செலுத்தியதாகத் தரவில்லை.

இந்த முறை, அந்நாட்டுப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ வாபோ ஆதரிப்பதை தடுத்திருக்கிறார். இந்த செய்தியை எப்படி புரிந்து கொள்வது? ஒரு விதத்தில் இது சரி தானே? ஒரு பத்திரிகை ஏன் ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்? சமநிலையாக இருக்க வேண்டாமா?

இவர்கள் ஆதரிக்கவில்லை என்று இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் சந்தாவை தள்ளுபடி செய்துவிட்டதாக கேள்வி.

இன்னொரு பக்கம் அமெரிக்க அரசு நிறுவனங்களை (government institutions) கேலிப்பொருளாக்கி, அவற்றை காயலன் கடைக்கு (பணக்காரன் என்று படிக்கவும்) விற்பனை செய்த டிரம்ப் நிர்வாகத்தை கேள்வி கேட்பதையே வா போ தன் கொள்கையாக கொண்டு சில வருடங்கள் இயங்கியிருக்கிறது. இடது சாரி கொள்கையை கடைபிடிக்கும் ஒரு பத்திரிக்கை, அதே கொள்கையை பரைசாற்றும் கட்சிக்கு தேர்தலின் போது ஆதரவளிப்பது என்ன தவறு? இது தெரியாமலா பேசோஸ் அந்த பத்திரிக்கையை வாங்கினார்?

இங்கே இடது சாரியா வலது சாரியா, என்பது கூட வித்தியாசம் கிடையாது. இலவசமாக ஆயிரம் பொருள் கொடுக்கக்கூடிய இடத்தில் கலைஞர் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைக்காட்சி பெட்டி கொடுத்ததற்கான காரணம் என்ன?


இன்று செய்தி என்று நமக்கு கிடைப்பது பெரும்பாலும் இன்டர்நெட்டில். இன்டர்நெட் பிரபலமான கடந்த 20 ஆண்டுகளில் பத்திரிக்கைகளையும், தகவல் பரிமாற்றத்தையும் வெகுவாக பாதித்திருக்கின்றன.

பத்திரிகைகள் இன்று இன்டர்நெட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கின்றன. கிளிக்பைட் எனப்படும் தவிர்க்க முடியாத தலைப்புகளாலும், மீமிகளாலும், டோப்பமின் ஏற்ற இரக்கத்தாலும் நாம் திண்டாடுகிறோம். சராசரி கவன இடைவெளி குறைந்து விட்டது.

மேலும் இன்டர்நெட் யுகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பல பத்திரிகைகள் மூடப்படவும், மீடியா முதலைகளின் வேட்டைக்கும் இரையாகவும் நேர்கிறது.

பத்திரிகைகளுக்கு சிக்கல் தான். வாடிக்கையாளர்களுக்கு?

சோர்வான நாட்களில் சோசியல் மீடியா போன்ற ஒரு வரம் கிடையாது. சிரிப்போ, வெறுப்போ, எதாவது ஒன்றை கொடுத்து நம்மை ஆசுவாச படுத்தி விடும்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அத்தனை பொழுதுபோக்கும் முற்றிலும் இலவசம்.

இலவசமாக கொடுக்கப்படும் ஒன்று துவக்கத்தில் தரம் மிகுந்து இருக்கவே நாம் அதனை நம்பி பிற்காலத்தில் மோசம் போவது இங்கும் நடக்கலாம் என்பது எங்கள் கருத்து. மேலும் அங்கு வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும், திறமையும் அங்கே, அதாவது சோசியல் மீடியா வில், வளர்க்கப்பட்டதாக இருப்பதில்லை.

இலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் (3,694,321,119,297.19 அல்லது மூன்றரை லட்சம் கோடி இந்திய ரூபாய்) கொடுத்து ட்விட்டர் தளத்தை வாங்கியபோது பலரும் சிரித்தார்கள். அவர் வாங்கியது அந்த தளத்தின் டெக்னாலஜியை அல்ல ட்விட்டரின் வாடிக்கையாளர்களை.

அமெரிக்க பொது தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் இந்த தருணத்தில், தேர்தலை ஒரு புறமாக திருப்ப தினமும் இன்று x இல் (ட்விட்டர் 2.0) மஸ்க் மெனக்கெட்டுகொண்டிருக்கிறார்.

அண்மையில் நிகழ்ந்த விழா ஒன்றில் மனித உருவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி மனித இயந்திரங்களை அறிமுக படுத்தினார் மஸ்க்.

வில்லங்கம் என்னவென்றால் அவை உண்மையாக தாமாக இயங்கவில்லை. பின்னால் சிலர் இவ்வியந்திரங்களுக்கு குரல் கொடுத்து அவற்றை உண்மையென நம்ப வைத்தனர். நிகழ்ச்சி நிரலில் இவை பற்றி விளக்கமும் இல்லை. ஓரிரு நாட்களுக்கு இவை உண்மையா என்று புரியவே இல்லை. சிலர், இது உண்மையாக இருந்தால் உலகையே மாற்றிவிடும் என்று கருத்து தெரிவித்தனர்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை வெளி வருகிறது. விழாவில் பங்கெடுத்தவர்களும், ஆர்வலர்களும், வீடியோக்களை ஆராயும் பொழுது இவை உம்மையல்ல என்று விளங்குகிறது.

“இது போல வருங்காலத்தில் நடக்கக்கூடும். இயந்திரங்கள், இடைவெளி இல்லாமல், நாம் கேட்கும் கேள்வியை புரிந்து கொண்டு பதிலளிக்கவோ, செயல்படுத்தவோ முடியும்; இருந்தால் எப்படி இருக்கும்.“ என்ற கனவை புகை போட்டு காட்டுகிறார்கள்.

சோசியல் மீடியாவின் பெரிய சிக்கலே உண்மை எது? பொய் எது? என்ற குழப்பமே. பொய் மற்றும் புரட்டுக்களை நம்மால் முழுமையாக ஒதுக்க முடிவதில்லை. நாம் விரும்பி பார்க்கா விட்டாலும் நம்மை தொடர்ந்து, தொலைக்காட்சி விளம்பரங்களை போல, நம் சிந்தனைகளை கோளாறு செய்கின்றன.

மேலும் அதிகார எண்ணம் கொண்ட சிலரின் கருத்துக்கள் நம்மையறியாமல் நம் மீது திணிக்கப்படலாம். இவை சரியா, தவறா என்பதை விட ஒருவனின் சிந்தனை சுதந்திரம் அழிக்கப்படக்கூடாது என்பது முக்கியம்.

கடந்த 30 ஆண்டுகளில் தொலைக்காட்சி நம் வாழ்வையும், நாம் உட்கொள்ளும் தகவலையும் எப்படி பாதித்ததோ அதே வழியில் இன்று x, instagram போன்ற தளங்கள் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.

மேலும் இவற்றை பயன்படுத்தும் நமது நவீன வாழ்க்கை முறை நம்மை மேன்மேலும் சோர்வாடைய செய்கிறது என்று சொல்கிறார்கள்.

வாசகர்களை இவற்றில் இருந்து மீண்டு தரமான மற்றும் சார்பற்ற எழுத்துக்களை வெகு சில சுதந்திர பத்திரிகைகளே வழங்குகின்றன. இன்றைய தொழில்நுட்பம் இதை பெரிய கஷ்டமில்லாமல் சாத்தியமாங்குகிறது. இருந்தும் மேல் கூறிய பல சிக்கல்களும் இவைகளுக்கும் பொருந்தலாம்.

நினைவுகள் உட்பட.

இவைகள் தனி நபர்களாலேயே இயக்கப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு தக்க சன்மானம் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் பொதுநலத்துடனே, அவர்கள் நேரத்தை தாராளமாக கொடுத்தே எழுதுகிறார்கள்.

இதனால், வேறு சில சிக்கல்களால், பல பதிப்புகளும் விரும்பியதை போல் வெற்றி காண்பதில்லை. செய்தி சுழலுடன், சினிமாவுடன் இணைந்திருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் எழுத்துக்களின் தனித்துவம் நிலைத்திருப்பது தானே?

குறைகள் இருந்த போதும், பொதுவான வாசகனுக்கு பொழுதுபோக்கும், கொஞ்சம் தகவலும், அரசியல் அறிவுரையும் கொடுப்பது மட்டுமல்லாமல், இலக்கிய வாசத்துக்கு அழைத்து செல்லவும் இவை வழிவகுக்கின்றன. (இலக்கியம் என்பது, எனக்கு புரிந்தமட்டில், ஒரு முறை படித்து கடந்துவிட முடியாத வாசகம். திரும்ப திரும்ப படிக்க தோன்றும், படிக்க படிக்க இன்பம் சேரும், புரிதல் கூடும்)

தினமும் பத்திரிகைகள் வாசிப்பவர்கள் கூட அதை கடந்து ஆழமான கதைகளிலும், சிந்தனைகளிலும் தங்களை பொதுவாக ஈடுபாடுத்திகொள்வதில்லை.

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் நேரத்தில், வாசகர்களின் நுணுக்கமான பார்வை, ஆழமான சிந்தனை, மற்றும் சுயமான அனுபவங்கள் அவசியமாகின்றன.

இன்றைய விரைவான தகவல் பரிமாற்றத்தின் நடுவில், நாம் கவனத்தை மீட்கவும், ஆழமான, அற்புதமான கதைகளில் மூழ்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையான தகவல்களை புரிந்து கொள்ளும் திறனையும், ஆழமான வாசிப்பு பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றில் நினைவுகளின் பங்கு சிறியதாக இருக்கும் என்று முழுமனதுடன் நம்புகிறோம்.

தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசகர்களுக்கு நன்றிகளுடன், 
சிவப்ரேம்
(பதிப்பாசிரியர், நினைவுகள்)