ஒரு குறிப்பிட்ட சலவை சோப்பு விளம்பரத்தின் அநியாயம் தாங்க இயலவில்லை.
அதைப் பார்க்கும் முன்பு, நமது நினைவிலிருக்கும் பல விளம்பரங்களையும் ஒருமுறை அலசலாம்.
நமது சின்ன வயதில் வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பரப் பாடலைப் பாடாத ஆட்களே இருந்திருக்க மாட்டோம்.
சில விளம்பரங்கள் நமது மனதைக் கவர்ந்தவையாகவும் இருந்தன.
Boost is the secret of our energy போல..
இன்றைய சூழலில் வியாபார போட்டிகள் அதிகரித்த காரணத்தால் பல விளம்பரங்களும் மக்களின் மனதைக் கவர்வதாகவும், சில விளம்பரங்கள் மாற்றி யோசிக்கும் ரகமாகவும் நல்ல விதமாகவே வருவது வரவேற்க்கத்தக்கது.
உதாரணமாக கறை நல்லது என்ற சோப்பு விளம்பரம் போல.
விளம்பரத்திற்காக பெரிய பெரிய நடிகர்களையே சார்ந்திராமல் சில விளம்பரங்கள் இதுபோல மாற்றி யோசித்தவையாக மக்கள் மனதில் நல்லவிதமாகவே பதிந்தது.
ஹார்லிக்ஸ், பூஸ்ட் சாப்பிடாவிட்டால் குழந்தைகள் வளரவே வளராது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகம் நமநு சமூகம்.
விளம்பரங்கள் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின.
விளம்பரங்களின் மூலமாக ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த பழக்கவழக்கத்தையே மாற்றி விட முடிகிறது.
ஆம். சாம்பலில், உப்பில் பல் துலக்கிய நம்மிடம், பல்பொடியைத் திணித்து பிறகு அதுவும் கேடு என சொல்லி, பற்பசை தரப்பட்டது.
இப்போது அதே பற்பசையில் உப்பு இருக்கா? மிளகா இருக்கா என்று மீண்டும் நமது பாரம்பரியத்தையே குறிவைக்கின்றனர்.
பல்லுக்கு மட்டுமல்ல, சோப்பு, சீப்பு, ஷாம்பு என்று ஒன்று விடாமல் விளம்பர மோகத்தில் நாம் நமது பாரம்பரியம் அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.
ஆனால் விற்பவர்கள் என்னவோ, இது மஞ்சளின் சக்தி நிறைந்தது, இது வேம்பின் சக்தி நிறைந்தது என்று நமநு பாரம்பரிய உபயோகப் பொருட்களை மையப்படுத்தி தான் விற்கிறார்கள்.
சரி அது போகட்டும்.
ஆனால் சில விளம்பரங்கள் சற்றும் நியாயமே இல்லாமல் எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது.
அதை பார்க்கலாம்.
முதலில் இந்த பாத்ரூம் க்ளீனர்கள் விளம்பரம்
வீட்டில் நிம்மதியாக தொலைக்காட்சியை ரசித்துக் கொண்டு சாப்பிட முடியவில்லை.
டாய்லெட்டை காண்பித்து அதை துடைத்து கையை வைத்துத் தேய்த்து ஒரு வழியாக்கி விடுகிறார்கள்.
அடுத்தது பல சோப்பு விளம்பரங்கள், கவர்ச்சியில் எல்லை மீறுகின்றன. குடும்பத்தோடு ரசிக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இத்தகைய கவர்ச்சி அவசியமில்லாத ஒன்று.
துணி சோப்பு விளம்பரங்களின் அட்டூழியம் இன்னும் அதிகம். இப்போது ஒரு புதிய விளம்பரம். ஏழு நாள் கறையை நீக்கும் என்று.
ஏழு நாளைக்கு கறை படிந்து துணியை யாராவது துவைக்காமல் வைத்திருக்கப் போகிறார்களா?இப்படி மக்களை முட்டாளாக்கும் விதமாக விளம்பரம் எடுப்பது அவசியம் தானா?
விளம்பரங்கள், நமது அன்றாட பழக்கவழக்கத்தை மாற்றி, நமது பாரம்பரியத்தை சீர்குலைத்தவை.
தொடர்ந்து பேசலாம்.
ஆதங்கத்துடன் நினைவுகள்