சென்ற வாரம் ஒரு பெரிய சிங்கம் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த காரணத்தால் குரங்கு 🐵 பல்டியை கவனிக்கத் தவறிவிட்டோம்.
ஆம் வேட்டையன் என்ற சூப்பர் ஸ்டார் ஜோரில் ப்ளாக் என்ற வித்தியாசமான குரங்கு பல்டி படத்தைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.
வேட்டையனுக்கு எதிரான சில சமூக விரோதிகள் இந்தப்படத்தையும் பாருங்கப்பா, அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல் என்று விளம்பரப் படுத்துவதால் ஒரு சுமாரான ரசிகர் கூட்டம் திசைமாறி இந்தப் படத்திற்கு வருகிறார்கள்.
சரி அப்படி திசைமாறி வந்த ரசிகப்பறவைகளை இந்தப்படம் மிகப் பெரிய திகைப்பில் ஆழ்த்தியதா என்றால் ஓரளவுக்கு என்று ஒத்துக்கொள்ளலாம்.
உலக சினிமா அறிவு உள்ளவர்களுக்கு இது புளித்த மாவு தான். ஆனால் எப்போதாவது மிக நல்ல பெயர் பெறும் ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்து.
புத்தம் புதிய கதைத்தளம் ஒன்றுமல்ல.
டைம்லூப் எனப்படும், நேரசிக்கலில் சரியாக சொல்லப்போனால் சுழலில் சிக்கும் கதை தான்.
மாநாடு படம் போல, எதிர்காலத்தில் நடப்பதை அறிந்து தடுக்கும் படமும் அல்ல, இன்டர்ஸ்டெல்லார்போல, என்ன நடக்கிறது என்பதே புரியாமல் திகைத்து வியந்து இறுதியாக ஒரு விடை கண்டறியும் வகையலிம் முழுதாக சேர்க்க முடியாது.
கிட்டத்தட்ட அது போன்ற கதைத்தளம் தான்.
ஒரு குறிப்பிட்ட கருமைப்பகுதியைக் கடக்கும் போது நேர சுழலில் சிக்குவது தான் கதை.
ஆனால் எதிர்காலமா, இறந்தகாலமா என்று நிர்ணயிக்கப்படாமல் சற்று முன்னுக்குப் பின் கதை நகர்வது அழகு.
அதிலும் அதை ரசிகர்களுக்குப் புரியவைத்த காரணத்தால் தான் இயக்குனர் இந்த வெற்றியை ருசிக்க இயன்றது.
படம் துவங்கும் போதே இந்தப்படம் நேரச்சுழலுக்கான கதை தான் என்பதை ஊகிக்கும் படியான காட்சி அமைத்தும் கூட, ஒரு கட்டத்தில் இது அமானுஷ்யமா அல்லது சொந்த சில்லறைப்பகையா என்று ஜீவாவோடு இணைந்து நம்மையும் சிந்திக்க வைத்ததில் இயக்குனர் சாதித்து விட்டார்.
இது போன்ற படங்கள் ஹாலிவுட்டில் மென்று துப்பி இருந்தாலும், தமிழ் சினிமாவில் இது ஒரு புது பதிப்பு.
படம் நறுக்கென 2 மணிநேரத்தில் முடிந்தது மிகப்பெரிய ஆறுதல். அதற்கு மேல் அங்கே இடமில்லை. ஆனால் குவாண்டம் பிஸிக்ஸ் பற்றிய காட்சிகளை இன்னும் சற்று தெளிவாக நீட்டியிருக்கலாம்.
குறிப்பாக எலியும், விஷ கேக்கும் கதை சொல்லப்பட்ட இடம் விளக்கமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு அற்புதமான வித்தியாசமான முயற்சி.
சினிமா ரசிகர்கள் ரசிக்க வேண்டிய படம்.
அன்புடன் நினைவுகள்.