Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அதிகார துஷ்பிரயோகம்

நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று.

நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.
இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்.

இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே?

நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்?

அதற்கான பதில் தான் இந்த சம்பவம்.

ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும்.

சமீபத்தில் ஆளுநரிடம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அளித்த புகார் ஒன்று ஜீரணிக்க இயலாத ஒன்று.

மாணவர்களின் மீதான ஆசிரியர்களின் அதிகார துஷ்பிரயோகம்.

இது பள்ளிகளிலேயே பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் துவங்கி விடுகிறது என்றால் கூட மேல்நிலை பட்டப்படிப்புகளில், அதுவும் குறிப்பாக
பி எச் டி என்று சொல்லப்படும் முனைவர் பட்டப்படிப்பில் மிக அதிகம்.

இந்த முனைவர் பட்டப்படிப்பில் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே மாணவரின் வழிகாட்டியாக நிர்ணயிக்கப்படுகிறார்.

ஆக அந்த மாணவரின் மீதான ஒட்டுமொத்த அதிகாரமும், இந்த வழிகாட்டியின் கையில்.

அப்படி கொடுக்கப்படும் அதிகாரத்தை இங்கே அத்தனை ஆசிரியர்களும் முறையாகக் கையாளுகிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதில்.

அந்த புகார் மனுவில் இருந்தது போல, தனக்குக் கீழே முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்களை வீட்டு வேலைக்கு நிர்ப்பந்திப்பது துவங்கி, பெண் மாணவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது வரை பல அதிகார துஷ்பிரயோகங்களும், பணம், நகை, வெளிநாட்டு இன்பச் சுற்றுலாவுக்கு பயணச்சீட்டு என்ற முறையில் வசூலும் லஞ்சமாகப் பெறப்படுகிறது என்பது செவி வழிச் செய்தி. இன்று அந்த மாணவரின் தைரியமான செயலால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பல இடங்களில் இது செவி வழிச் செய்தியாக ஆண்டாண்டு காலமாக இருந்தாலும் கூட, நிரூபணமில்லாத காரணத்தால் கேள்விகள் எழவில்லை.

ஆனால் இன்று அது வெளியே வந்துள்ளது.

இனி ஒருபோதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவ சமுதாயத்தின் மீதான இத்தகைய வன்முறை நிகழவே கூடாது.

குறிப்பாக, இது மாதிரி ஆசிரியர் சமுதாயம் செய்யும் தவறு, எதிர்காலத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பதால், இது போன்ற போலியான ஆசிரியர்களின் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முதலில், ஆசிரியர் சமுதாயம் நல்ல ஆரோக்கியமுடையதாக அமைய வேண்டும்.

கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை போல மாணவர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விதிகள் ஆசிரியர்களுக்கும் உண்டு.

ஆனால் எனது அனுபவத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், அவரது முனைவர் பட்டப்படிப்பு முடிய வெகு நாட்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.

என்னுடைய நேரடி நண்பர் ஒருவர், அவரே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக அறிகிறேன்.

அதாவது அந்த குறிப்பிட்ட ஆசிரியரிடம் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து கையெழுத்து வாங்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கறி வாங்கிச் செல்ல வேண்டும் என்றும், அது இயாலமல் போன காரணத்தால் இரண்டு முதல் மூன்று நாட்கள், ஒரு கையெழுத்துக்காக அந்த ஆசிரியரின் அலுவலக வாசலிலேயே நிற்க வேண்டியிருந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இன்னும் சில இடங்களில், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும் செவி வழியாக அறிந்திருக்கிறேன்.

இதெல்லாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் சமுதாயத்தில் புற்றுநோய் போல ஊடுருவியிருக்கும் போலி ஆசிரியர்கள் களையெடுக்கப்பட வேண்டும்.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆசிரியை மட்டும் தண்டிக்கப்படுவது போதாது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் நச்சுப்பிராணிகளை விடக்கொடிய வகையிலான இதுபோன்ற ஆசிரியர்களும் கடுமையான தண்டனை பெற வேண்டும்.

அரசு ஆசிரியர்களுக்கு, அதிலும் முனைவர் ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். அப்படியிருக்க இவர்களுக்கு ஏன் இந்த கேவலமான லஞ்ச ஆசை என்பது விளங்கவில்லை.

பல மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நமநு நாட்டின் எதிர்காலமே ஆசிரியர் சமுதாயத்தின் கையில் தான். அப்படியிருக்க அந்தத்துறையில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சமூக சிந்தனையுடன் நினைவுகள்