Categories
சிறுகதை தமிழ்

கனவு – சிறுகதை

சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை.
சில கனவுகள் தூக்கித்தில் வந்தால் கூட நம் நினைவை விட்டு அகலுவதில்லை.

அப்படியான ஒரு கனவு தான், நம் கதையின் நாயகனுக்கும்.

கதையின் நாயகனுக்கு திருமணமாகி விட்டது.
இந்த லாக் டவுன் பீரியடில் வேலை இல்லாத காரணத்தால், இரவு 3 மணி வரை விழித்து ஏதாவது படம் பார்த்து விட்டு, காலை 11 மணி வரை தூங்குகிறான்.

அவனது கனவில்…..

கதையின் நாயகன் ராகேஷ், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான்.

அவனது தந்தை ஓரளவுக்கு நல்ல வருமானம் உடையவர். ராகேஷ்க்கு தேவையான அனைத்தும் கிடைக்கத்தான் செய்தது.

ராகேஷ் கல்லூரி விடுதியில் தங்கியிருக்க, ராகேஷின் மற்ற நண்பர்கள் வெளியே ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். வெளியே வீடு எடுத்து தங்கினால், கல்லூரி விடுதியில் தங்குவதை விட செலவு மிச்சம் என்பதால் அங்கே தங்கிவிட்டார்கள்.

பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் போல, ராகேஷ் மற்றும் அவன் நண்பர்களுக்கும் போதை பழக்கம் ஏற்படாமல் இருக்கவில்லை.

அவனது நண்பர்கள் வீடு எடுத்து தங்கியிருந்த வீட்டு ஓனர், நடுத்தர வயது பெண்மணி, அதனால் இவர்கள் செய்யும் தவறை அவள் எளிதாக கண்டுபிடித்து விடுவாள். இதனாலேயே அந்த வீட்டிற்குள் ஏதும் செய்ய இயலாமல், அனைத்தையும் வெளியே எங்காவது செய்து விட்டு , வீட்டிற்கு வந்து அமைதியாக படுத்துக கொள்வார்கள்.

ராகேஷ் பெரும்பாலான நாட்கள் அந்த வீட்டில் தான் தங்கியிருப்பான். அந்த வீடு அவர்கள் சுதந்திரத்துக்கு இடையூறாக இருந்தாலும், அந்த பெண்மணியின் அன்பும், கண்டிப்பும் இவர்களுக்குத் தேவைப்பட்டது.

வாடகை விஷயத்திலும் ரொம்ப கறார் இல்லை.
அதனால் இவர்களும் வீட்டை மாற்றவில்லை.

வெறும் சிகரெட்டில் ஆரம்பித்த இவர்களது பழக்கம், கஞ்சா வரை சென்று விட்டது.

கஞ்சாவையும் தாண்டி, ஏதேதோ அதிக பணத்திற்கு விற்கப்படும் போதை பழக்கத்திற்கும் அடிமையாகிப் போகிறார்கள்.

கல்லூரி படிப்பில், ப்ராஜெக்ட் அது, இது என காரணம் காட்டி வீட்டிலிருந்து பணத்தை கறந்து தங்களது போதை பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்தார்கள்.

ஆனால் சிறிது காலத்தில் கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது.

ஒவ்வொருவனும் அரியர்ஸ் வைத்திருப்பதால் வேலையும் கிடைக்காது. அதிகபட்சம் இங்கேயே தங்கினால் எனக்கு படிக்க வசதியாக இருக்கும் என்று பொய் சொல்லி இங்கே தங்கலாம்.

ஆனால் பழையபடி ப்ராஜெக்ட், பீஸ் என்று சொல்லி வீட்டில் பணம் கறக்க இயலாது.

போதை பயணத்தை தொடர என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்க, அவனது நண்பர்களில் ஒருவன், கொள்ளை அடிக்கலாம் என யோசனை சொல்லுகிறான்.

ஒரு நிமிடம் உறைந்து போனார்கள் அனைவரும்.
என்னடா சொல்ற? என்று ராகேஷ் கேட்க, இரு மச்சி வரேன், என்று அவனது லேப்டாப்பை எடுத்து, சில ஹாலிவுட் படங்களை காட்டுகிறான்.

அதில் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பது எப்படி என்ற விவரங்களை தெரிந்து கொண்டு, சரி கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

ராகேஷ் உடைய கார் கொள்ளை அடிக்க பயன்படுத்தப்படப்போகிறது.

கொள்ளை அடிக்கப்படப்போகும் வங்கி, இவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து சில தூரம் தள்ளி இருக்கிறது.

அந்த வங்கியின் நடவடிக்கைகளை ஒருவர் மாற்றி ஒருவர் நோட்டமிட துவங்குகிறார்கள்.

வங்கியில் ஆளுக்கு ஒரு புது கணக்கை துவங்கி, தினசரி ஏதாவது தேவை என்று சொல்லி வங்கியை நன்கு நோட்டமிடுகிறார்கள்.

வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள், இரவு காவலர், வங்கியின் அருகில் இரவில் திறக்கப்பட்டிருக்கும் கடைகள், அந்த பகுதி அடங்கும் நேரம், வழியில் உள்ள சிசிடிவி கேமராக்கள், எல்லாவற்றையும் நோட்டமிட்டு கொள்ளை அடிக்க சரியான பாதை, திட்டம், நேரம் எல்லாவற்றையும் வகுக்கிறார்கள்.

வங்கியில் இருக்கும் இரவு காவலரை மயக்கிவிட்டு வங்கியின் மெயின் டோர் பூட்டை உடைத்து விட்டு, இவர்கள் உள்ளே சென்றதும், மறுபடியும் வெளியே ஒரு புது பூட்டு தொங்க விட்டு விடலாம், கொள்ளை அடித்து விட்டு வெளியே வந்தவுடன், பூட்டை திறந்து, மீண்டும், புது பூட்டை வைத்து பூட்டி விட்டு ஓடிவிடலாம், காவலர் எழிந்திருக்கும் வரை, வெளியல் இருந்து யார் பார்த்தாலும் வங்கி பூட்டியிருப்பது போலத்தான் தோன்றும்.

அனைவரும் இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாளில் ஊர் அடங்கிய பின்னர், காரில் கிளம்புகிறார்கள்.

வங்கி அருகே செல்லாமல் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் அருகே காரை ஓரங்கட்டி விடுகிறார்கள்.

வெளியில் இருந்து யார் பார்த்தாலும், அந்த கார் அந்த வீட்டிற்கு சொந்தமானது, ஓரங்கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தோற்றம் கொடுக்கும்.

அதிலிருந்து கண்ணன் மட்டும் ஒரு பையுடன் இறங்கி நடந்து போகிறான். வங்கி அருகே சென்றதும், நோட்டமிடுகிறான்.

இரவு காவலர் விழித்து நடந்து கொண்டிருந்தார்.

அவரிடம் அருகில் சென்று, “அண்ணா வத்திப்பெட்டி இருக்கா” என்று கேட்க, அவர் பேச்சுக்கொடுக்கிறார்.

“யார் தம்பி நீங்க? இந்நேரம் பையோட எங்க போறீங்க?” என்று கேட்க, “பாங்க் கொள்ளை அடிக்க வந்திருக்கேன்“ என்று கண்ணன் கலாய்க்கிறான்.

“சரிதான், எல்லாரும் அப்படி கிளம்புங்க, இல்லாதவனுக்கு அபராதமும், இருக்கிறவனுக்கு கடன் தள்ளுபடியும் பண்றானுங்க” என்று காவலர், அரசியல் பேச பேச்சு கலகலக்கிறது.

“தம் அடிப்பீங்களாணே, இந்தாங்க, கம்பெனி கொடுங்க” என்று கண்ணன் வெள்ளந்தியாக சிகரெட் கொடுக்க, காவலரும் அதை வாங்கி வாயில் வைக்கிறார்.

அதில் ஏதோ தடவப்பட்டிருந்த்ததால் உடனடியாக அவர் மயங்க, அவரை அப்படியே இருக்கையில் சாய்த்து தூங்குவதைப்போல செட்டப் செய்து விடுகிறான் கண்ணன்.

அருகிலிருந்த நண்பர்களுக்கு தகவல் கொடுத்ததும் பூட்டை உடைக்கும் ஆயுதங்களுடன் வருகிறார்கள். பூட்டை உடைத்து விட்டு, இருவர் வங்கியினுள் போக, வேறொரு புதிய பூட்டை தொங்கவிட்டு, கண்ணன், காருக்கு ஓடுகிறான்.

வங்கிக்குள் சென்றதும் சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் செயலிழக்க செய்கிறார்கள்.
கேமராக்களை ஹாக் செய்யும் அளவுக்கு அறிவாளிகள் அல்ல, கேமராக்கள் மீது ஏதோ திரவம் தெளித்து, படம் தெரியாமல் ஆக்கி விடுகிறார்கள்.

அவர்கள் நினைத்தபடி லாக்கர்களை உடைத்து பணத்தை திருடிவிட்டார்கள்.

லாக்கர் உடைக்கப்பட்டால் அலாரம் எப்படி ஒலிக்கும், அதை எப்படி நிறுத்தலாம் என்ற வித்தை எல்லாம் அந்த ஹாலிவுட் படத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

படம் எடுக்கிறேன் பேர்வழிகள் எல்லாத்தையும் முழுதாக சொல்லித்தானே கொடுக்கிறார்கள்.

திருடி முடித்ததும், கண்ணன் சரியாக வர, பூட்டை திறந்து ஓடுகிறார்கள். சந்தேகம் வராமலிருக்க மீண்டும் பூட்டை தொங்க விடுகிறார்கள்.

அவர்கள் தப்பித்து வீடு சென்றதும், இரவு அந்த பக்கம் வந்த காவல் ரோந்து வாகனமும், தூங்கிக் கொண்டிருந்த வாட்ச்மேனை பார்த்து, இங்க பாருயா, இப்படி தூங்கினா அப்புறம் கொள்ளை அடிக்காம என்ன செய்வாங்க, என்று ஏளனம் செய்து விட்டு போகிறார்கள்.

பெரும்பாலும் இரவில் அந்த ரோந்து வாகனம், குறிப்பிட்ட 4 அல்லது 5 முறை தான் ரோந்து வரும். அந்த கால இடைவெளியையும் ஆராய்ந்து தான் இந்த திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள்.
பலே கில்லாடிகள் தான்.

ஆனால் ஒரு க்ளூ விட்டுவிட்டார்கள்.
காவலரிடம் சென்று பேச்சு கொடுத்த கண்ணன்?
அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கண்ணன் அந்த காவலரிடம் தான் அங்கு அந்த வீட்டில் தங்கியிருப்பதாகவும், ஊரிலிருந்து இப்போதுதான் வருவதாகவும், பக்கத்து பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆட்டோ, டாக்ஸி பிடிக்க மனமில்லாத காரணத்தால் நடந்து வருவதாகவும் அந்த காவலரிடம் சொல்லி இருந்தான்.

அந்த காவலருக்கு கொடுக்கப்பட்ட மருந்தும், ஆராய்ச்சியால் கண்டறிய இயலாது.

அது கிட்டதட்ட சிலிப்பீங் டோஸ்க்கு சமமான மருந்தே, ஏன், மயங்கி தூங்கிய காவலருக்கே தான் யதாத்த்மாக தூங்கியதாகத்தான்  தோன்றும். அப்படியான மருந்து, நெட்டில் தேடி வாங்கியிருக்கிறார்கள்.

பல வழிகளிலும் தேடி க்ளூ கிடைக்காத காவல்துறை காவலரிடம் மீண்டும் மீண்டும் துருவி துருவி கேட்டார்கள்.

முதலில் கண்ணனை பற்றி சொல்லாத காவலர் இந்தமுறை, “சார் ஒரு பையன் வந்தான், எனக்கு சிகரெட்லாம் கொடுத்தான்,” என்று சொன்னார்.

கண்ணனை காண விரைந்தது காவல்துறை. கல்லூரி மாணவர்கள் என்று சொன்னதால், சற்று பொறுமையாகவே விசாரித்தது.

தம்பி அந்நேரம் எங்க அங்க வந்தீங்க?
“சார், நான் ஊர்ல இருந்து வந்தேன், டாக்ஸி வேணாம் நடந்திடலாம்னு நடந்தே வந்தேன், தம் அடிக்கனும்னு தோணுச்சு, வத்திப்பெட்டி இல்ல அதான், வாட்ச்மேன்ட்ட போய் வத்திப்பெட்டி வாங்கினேன்”

“அன்னைக்கு ராத்திரி அந்த பேங்க கொள்ளை அடிச்சுட்டாங்கனு மறுநாள் என் ப்ரெண்ட் சொன்னான். அன்னையில இருந்து நானும் பயந்துக்கிட்டு தான் இருக்கேன்.”

“எதுக்கு பயம்?“ என்று குறுக்கிட்டார், காவலர்.

“இல்ல சார், கண்டிப்பாக இந்த மாதிரி விசாரிக்க கூப்புடுவீங்க, நான் வேற வாட்ச்மேன்ட்ட பேசியிருக்கனே, அதான் என்னை அலைக்கழிப்பீர்கள் என்ற பயம் தான்” என்றான்.

ஆமா எந்த பஸ் ல வந்த? காவலர் கேட்க,
பஸ் டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அதை காண்பித்தான் கண்ணன்.

உண்மையிலேயே அவன் அன்று ஊரிலிருந்து பயணம் செய்தே இங்கு வந்திருக்கிறான். மாட்டி விடக்கூடாது என்ற காரணத்தால். பக்கா ப்ளான்.

“சரி தம்பி, ஏன் நடுராத்திரியில வந்து இறங்குற மாதிரி டிக்கெட் போட்ட?“ என்று கேட்ட காவலரிடம், ”!அது அப்படிதான் சார்.

மதியம் கறிசோறு சாப்புட்டு, உடனே பார்சல் எடுத்துக்கிட்டு இங்க கிளம்பி வந்துடுவேன்.

நைட் இங்க வந்து நண்பர்கள் எல்லாரும் சாப்பிடுவோம்“ என்று யதார்த்மாக சொன்னான்.

கண்ணன் பயணம் செய்தது உண்மை, காரணங்கள் தெளிவாக இருக்கிறது.

“சரி, உன் நண்பர்கள் யாருக்காவது கால் செஞ்சு பைக் எடுத்துக்கிட்டு அங்க வர சொல்ல வேண்டியது தானே?”

என்று கேட்க, கண்ணன் கால் லிஸ்ட்டை எடுத்து காண்பித்தான், அவனது நண்பர்களுக்கு அதே இரவில் பத்து பதினைந்து முறை கால் செய்யப்பட்டிருந்தது. “யாரும் எடுக்கவில்ல“ என்று கூறினான்.

“அப்புறம் பாத்தா சார் இந்த நாயிங்க அந்த பக்கமா கார்ல சுத்திக்கிட்டு இருந்திச்சுங்க, அதுல தான் ஏறி வந்தேன்” என்று முடித்தான்.

உண்மையிலேயே அது மாதிரி கால் செய்து அவர்கள் எடுக்க கூடாது என்பது ஏற்கனவே பேசி வைத்திருந்த திட்டம்.

விடைபெற்ற காவலர் மறுநாள் கண்ணனின் செல்போன் பயணம் செய்த பாதையை கவனித்தார். அதாவது நெட்வொர்க். அவன் சொன்னது 100 சதவீதம் உண்மை.

அந்த செல்போன் அவன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி, இங்கே வந்து, அந்த பேருந்து நிலையத்திலிருந்து நண்பர்களுக்கு கால் செய்திருப்பது உண்மை.

காவல்துறைக்கு குழப்பம்.
இருந்த ஒரு லிங்க்கும் சொத்ப்புகிறதே என்று.

அந்த ஏரியாவில் வீடு வீடாக விசாரிக்க துவங்குகிறார்கள்.

எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.

இறுதியாக ஒரே ஒரு க்ளூ. இரவில் கண் விழித்து கடலை போடும் இளைஞன் ஒருவன் மூலமாக.

“சார் அன்னைக்கு ஒரு கார் நின்னுது சார். ஏரியால அந்த கார இதுக்கப்புறம் பாக்கல, அதுக்கு மின்னையும் பாத்த மாதிரி ஞாபகம் இல்ல“ என்று அந்த இளைஞன் சொன்னான்.

அந்த கார் நின்ற இடத்தை காட்டினான். அந்த கார் ராகேஷ் உடைய கார். அதை பற்றி கண்ணன் ஏற்கனவே சொல்லி இருந்த காரணத்தால் இது பெரிய பாயிண்ட்டாக தோன்றவில்லை.

கார் ரொம்ப நேரம் நின்னுச்சா என்று அந்த இளைஞரிடம் காவலர் கேட்க, நான் சிகரெட் அடிச்சு முடிக்கிற வர நின்னுச்சு பாத்தேன் சார்.
அப்புறம் பாக்கல என்றான்.

காவலருக்கு கண்ணன் மீது சந்தேகம் தீரவில்லை.

அவர்கள் கார் இங்கு நிற்க வேண்டிய அவசியம் என்ன?
இந்த இடத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லையே? என்று யோசித்தார்.

மீண்டும் கண்ணனிடம் சென்று அவர்கள் நண்பர்களை தனித்தனியாக விசாரித்தனர்.

பாபநாசம் படம் போல, பேசி வைத்திருந்த அவர்களின் வாக்கு மூலத்தில் குழப்பமே இல்லை.

“ஓனர் அக்கா வீட்ல தம் அடிச்சா திட்டும், அதனால தான் அங்க கார நிறுத்தி தம் அடிச்சுட்டு வந்தோம்” என்பது அனைவரின் பதிலும்.

காவல்துறைக்கு இந்த கும்பல் மீது சந்தேகம் இருந்தாலும் ஆதாரம் இல்லையே?
என்னதான் செய்வது.

கைரேகைகள் இல்லை.
சிசிடிவி இல்லை.
இந்த கும்பலை மாட்டிவிட ஆதாரம் இல்லையே?
ஆனாலும் இந்த கும்பல் தான் செய்திருக்க வேண்டும் என்பது காவலரின் உள்மனசு சொன்னது.

பூட்டு!
அந்த புதிய பூட்டு.

மாட்டிக்கொண்டான், கண்ணனின் நண்பன்.
அன்று சென்று அரிகிலிருந்த கடையில் புதிய பூட்டு வாங்கியிருக்கிறான்.

மகிழ்ச்சியுடன் வந்த காவலருக்கு ஏமாற்றம்.
அவன் வாங்கிய புதிய பூட்டு இவர்கள் அறையில் தொங்கிக்கொண்டிருந்தது. “பழசு ரிப்பேர் ஆயிடுச்சுனு புதுசு வாங்கினோம் சார்,” என்றார்கள்.

உண்மையிலேயே கடையில் ஒரு பூட்டு வாங்கிய போது இன்னொன்றை திருடி இருந்தார்கள். வெறித்தனமான திட்டம்.

ஒரு பூட்டு வழியாக கூட மாட்டிக்கொள்ளாத திட்டம்.

இப்படி எதிலேயும் மாட்டிக்கொள்ளாத கண்ணன் மற்றும் ராகேஷ் கேங்.

குற்றவாளி எப்படியும் ஓர் தடயத்தை விடுவான் என்று படித்த காவல் ஆய்வாளர்.

வெற்றி பெறப்போவது யார்.?

சில நாட்கள் கழிந்தது.
கண்ணன் மொபைலுக்கு அவன் கேங் குமார் அனுப்பிய மீம்.

தலைவர் வடிவேலு, தனது 100 வது திருட்டை செய்யப்போகும் முன் அவரது தொண்டர்கள், போஸ்டர் ஒட்டிய காட்சியை எடிட் செய்து, முதல் திருட்டை வெற்றிகரமாக செய்த கண்ணன் மற்றும் ராகேஷ் க்கு எங்களது வாழ்த்துகள்.

“தலைவா யூ ஆர் கிரேட்” வேறு.

கண்ணன் குமாரை கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யாத, நம்ம மொபைல ட்ராக் பண்ண வாய்ப்பு இருக்குனு சொல்லி முடிக்கிற முன்னணி, அதே மீம், இன்ஸ்பெக்டர் மொபைலில் இருந்து கண்ணனுக்கு வருகிறது.

முடிஞ்ச்சு!

ராகேஷ் க்கு மரண பயம்.

தன் தந்தையிடம் இதை எப்படி விவரிக்கலாம், மாட்டிக்கொண்டால் என்ன நியாயம் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருக்க, ராகேஷை பார்க்க அவனது கேர்ள் ப்ரெண்ட் வருகிறாள்.

இவளிடம் சொல்லி புரிய வைக்க முடியாது?
இவ பேசுற பேச்சுக்கு ஜெயிலே பரவால என்று எண்ணிய ராகேஷ் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தான்.

கனவிலும் அவன் கேர்ள் ப்ரெண்ட் ஆக வந்தது அவன் பொண்டாட்டி தான்.

பொண்டாட்டி என்றால் கனவிலும் பீதி தானே?

அதே வாய்ஸ்,

“மணி பத்தரை ஆகுது, நான் இப்ப சமைக்கவா, டீ போடவா, வேலையப்பாக்கவா?
உங்களுக்கு எப்பதான் வேலைக்கு கூப்புடுவாங்களோ”

“இப்படி ராத்திரி 3 மணி வர படம் பாத்துட்டு மதியம் வரை துரை தூங்குறீங்க.”

“ஏதாவது உதவி செய்யலாம்ல,”

லப லப லப லப லப லப என வழக்கம் போல பேசிக்கொண்டிருக்க,

ராகேஷ் பேசாமல் ப்ரஷை எடுத்து வாயில் வைத்து பாத்ரூமுக்குள் சென்று விட்டார்.

“விதி வலியது, ஒருத்தன் கொள்ளை அடிச்சுட்டு கூட தப்பிச்சுடலாம்” ஆனா பொண்டாட்டிக்கிட்ட இருந்து ம்ஹூம்!!!!!

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம்

செ நு உருவாக்கிய படம்