Categories
தமிழ் நினைவுகள் மறைவு

இளைப்பாறுங்கள் சாம்ராட் – ரத்தன் டாடா

மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது.

கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை.

சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, மக்கள் அவர்மீது அப்படியான நம்பிக்கையையும், மரியாதையையும் கொண்டிருப்பது வியப்பு தானே!

எத்தனை எளிமையான மனிதரோ, அத்தனை தன்னம்பிக்கை உடைய மனிதரும் கூட.

ஒரு முறை அவரிடம் ஒரு நேர்காணலில் BMW வாங்க உங்களுக்கு எத்தனை நாள் தேவைப்படும் என்று கேட்டார்களாம். அதற்கு அவர், ஒரு வருடமோ, அல்லது சில மாதங்களோ ஆகலாம் என்றாராம்.

ஏன் ஐயா, ஒரு பொறியாளரோ, ஒரு மருத்துவரோ நினைத்தால் 2 அல்லது 3 மாதங்களில் வாங்கி விடுவார்கள், உங்களுக்கு ஏன் அவ்வளவு காலம் என்றார்களாம். அப்போது அவர் சொன்ன பதில் திகைப்பு.
“நான் ஒரு வாகனத்தைக் குறிப்பிடவில்லை. மொத்த BMW நிறுவனத்தைக் குறிப்பிட்டேன்” என்று.

இப்படி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இன்று நம்மோடு இல்லை.

டாடா சக்ரா கோல்டு் டீ, டாடா உப்பு, என்று சாமானியன் துவங்கி, டைடன், விவான்டா இந்தியன் ஏர் லைன்ஸ் என்று பணக்காரர்கள் வரை டாடா பொருட்களை பயன்படுத்தாத ஆட்களே இந்தியாவில் கிடையாது.

பல்வேறு துறைகளில் கொடிக்கட்டிப் பறந்த பத்மவிபூஷன் ரத்தன் டாடாவுக்காக நமது தேசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அவரது நல்ல மனதிற்காகாவும், நன்கொடைக்காகவும் இந்த சிறப்பு அவருக்குக் கிடைக்க வேண்டும்.

உலகை விட்டு அவரது உடல் மறைந்தாலும், அவரது உருவாக்கங்கள் அவரது பெயரை தினமும் முழங்கிக்கொண்டே தான் இருக்கும்.

இளைப்பாறுங்கள் சாம்ராட்!

வருத்தத்துடன் நினைவுகள் வலைப்பக்கம்