பயணம் மற்றும் சுற்றுலா.
இன்றைய தினத்தில் பயணம் மற்றும் சுற்றுலா என்பது மிகவும் யதார்த்தமாகிப்போன ஒரு விஷயமாக உள்ளது.
இந்த விதமான மக்கள் தான் பயணிக்கிறார்கள், சுற்றுலா வருகிறார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுமே பயணிக்கத் துவங்கி விட்டார்கள்.
அதன் விளைவு தான் எங்கு நோக்கினும், கூட்டமும், நெரிசலும், சிக்கல்களும்.
ஒரு காலத்தில் வெள்ளியங்கிரி மலைப்பயணம் என்பது சீண்டப்படாத மிக அரிதானதாக இருந்தது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தின் காரணமாக கடந்த வருடம் லட்சக்கணக்கான ஆட்கள் மலையேறி பயணித்ததை அறிந்தோம்.
நல்ல முயற்சிதான். எல்லோருக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதில் சிலர் இறந்து போன செய்தியை அறிந்த போது சற்றே மனம் நொறுங்கித்தான் போனது.
வெள்ளியங்கிரி கதை மட்டுமல்ல, சபரிமலையிலும் கூட்டம், குற்றாலத்திலும் கூட்டம், இப்படி இன்ப சுற்றுலாத் தளங்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் கடுமையான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.
இவ்வளவு ஏன், சமீபத்தில் 2000 முதல் 25000 வரை கட்டணம் பெறப்பட்டு, நடத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களது இசைக்கச்சேரியில் கூட கட்டுக்கடங்காத கூட்டத்தினால், சில கசப்பான அனுபவம் ஏற்பட்டது மறக்க முடியாத ஒன்று.
இத்தனை சம்பவங்களையும் நினைவுறுத்தக் காரணம், தற்போதைய நிகழ்வு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த கூட்டத்தில் ஐந்து பேர் நெரிசலில் சிக்கி, நீர் பற்றாக்குறை மற்றும் நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் நூற்றுக்கணக்கானோர் உடல் நிலை சீரிழந்து மருத்துவமனையில் அனுமதி.
இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி அல்ல. இந்த விஷயத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், அரசாங்கத்தையும் சிறிது கடிந்து கொண்டாலும், நமது சுயதற்காப்பு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கண்டிப்பாக கூட்ட நெரிசல் இருக்கும், மெரினா கடற்கரையில் அவ்வளவு கூட்டத்திற்கும், இருக்கைகளோ, நிழலோ, தண்ணீரோ இருக்காது என்பதை தெரிந்த மக்கள், அதற்கான முன்னெச்சிரக்கையை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில், ஒரு தண்ணீர் குவளையை சுமந்து செல்ல அசிங்கப்பட்டுக் கொள்கிறோம்.
முன்பெல்லாம் குடும்பமாக பயணிக்கும் போது, தேவையான சாப்பாடு கூட வீட்டிலிருந்தே சுமந்து செல்வார்கள். வெளியே உணவகங்களில் சாப்பிடும் சாப்பாட்டின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை.
அந்தக்காலத்தில் உணவகங்கள் தரமாக இருந்த போதே அந்த நிலை.
ஆனால் தற்காலத்தில் மிகுந்த மக்கள் கூட்டத்தின் காரணமாக, சில உணவகங்கள் தரத்தில் சிறிய தளர்ச்சிகளை செய்தாலும், நாமென்னவோ பெரிய நாகரீகவாதிகள் போல கைகளை வீசிக்கொண்டு அந்த உணவகங்களை நாடுகிறோம்.
பெரும்பாலான மக்கள் கைக்குழந்தைக்குக்கூட பால் எடுத்து வருவதில்லை. கேட்டால், அத யாரு சுமப்பது என்கிறார்கள்.
இப்படி நாமும் தவறு செய்து விட்டு முழுப்பழியையும், அரசாங்கம் மீது போடக்கூடாது. வருமுன் காத்துக்கொள்வது நம் கடமை.
சண்டைக்குப் போகும் போது வாளும் , கவசமும், கேடயமும் சுமை என்று நினைத்தால்?
அதே நிலை தான்.
இனியாவது எங்கேயாவது வெளியே செல்லுமுன், தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு செல்லலாம்.
அன்புடன் நினைவுகள்
தொடர்ந்து வாசிக்க, செயற்கை நுண்ணறிவு குறித்து சிவப்ரேம் இங்கு எழுதுகிறார்.