சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவரை பொருளாதார அடிப்படையில் பிரிக்கும் பகுப்புகளாக இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை. ஒரு நீதிபதியே தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரது மகன் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து பெரிய காவல்துறை அதிகாரி ஆகலாம். அவரது பேரன் மீண்டும் அதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மருத்துவர் ஆகலாம்.
இப்படி வளர்ச்சியின் பலனை அனுபவித்த சிலரே திரும்பத் திரும்ப அந்த சலுகைக்களை அனுபவிக்கும் போது, நாம் எதற்காக இந்த திட்டங்களை சகித்துக் கொண்டு வாழ்கிறோமோ, அந்த திட்டங்களுக்கான பலனே இல்லாமல் போய்விடுகிறது.
இதைப் பேசினாலே நம்மை சாதிக்கு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துப் பேசுகிறோம் என்று கிளம்பி விடுவார்கள். அந்த மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டதால் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, அதுல போயி அப்படின்னு பேசத்துவங்குவார்கள்.
நாம் எடுத்து வைக்கும் வாதமும் அவர்களுக்குத் தான்.
உண்மையிலேயே அவர்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் சிலர் அந்த சலுகைகளை அனுபவித்து முன்னேற்றத்தை அடைந்து விட்டார்கள். அந்தச் சலுகை இப்போதும் கஷ்டப்படும் ஆட்களுக்குப் போக வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் நிச்சயம் இட ஒதுக்கீட்டில் பகுப்பு அவசியம்.
இப்படிப்பட்ட பகுப்பை இப்போது மாநில இட ஒதுக்கீட்டில் தெலுங்கானா மாநிலம் முதல் முதலாகச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆமாம். கந்தசாமி வீட்டுக்கு இந்த 2 வாழைப்பழம் என்று சொல்லி கொடுத்துவிட்டால் கந்தசாமி வீட்டில் இருக்கும் ஒரே ஆள் அந்த இரண்டு பழத்தையும் சாப்பிட்டு விடுவார். அப்படியானால் மீதி ஆட்கள்? பட்டினி கிடப்பதா?
நமது கடமை முடிந்தது. இரண்டு வாழைப்பழத்தை அங்கே தள்ளியாச்சு என்று அரசாங்கம் கைவிரித்து விட்டால் சமூக நீதி எங்கிருந்து காப்பாற்றப்படும்?
அந்த இரண்டு வாழைப்பழங்களும் எப்படி அந்தக்குடும்பத்திற்குப் பிரித்துத் தர வேண்டும் என்பதை அரசு தான் செய்ய வேண்டும்.
தெலுங்கானா இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இதைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
அதாவது 15 சதவீத இட ஒதுக்கீட்டை, 1 சதவீதம், 9 சதவீதம், 5 சதவீதம் எனப் பிரித்து, ஏற்கனவே ஓரளவு பொருளாதார ரீதியாக உயர்ந்த உட்சாதிகளைப் பகுத்தாய்ந்து அந்த இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்திருப்பது, இதுவரை இந்தச் சலுகையை அனுபவிக்காத அந்த வளராத மக்கள் இதை அனுபவித்து வளர ஒரு வாய்ப்பு.
இன்றைய காலகட்டத்தில் இது மாதிரியான ஒரு பகுப்பு கட்டாயம் அவசியம்.
தெலுங்கானாவின் இந்த முன்னெடுப்பு, இந்தியா முழுக்கப் பரவி, சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.