பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த பாவத்திற்காக, அந்த நாட்டைச் சார்ந்த அப்பாவி மக்களைப் பழிவாங்குவதும் ஒரு விதத்தில் பயங்கரவாதம் தான்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கும் நோயாளிகள் உட்பட அனைவரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நடவடிக்கையும், பெரும்பாலான பாகிஸ்தான் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமும், பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் ஆன சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற நடவடிக்கை எல்லாம் மிக முட்டாள்தனமான மனிதநேயமற்ற செயல்.
26 இந்தியர்களைக் கொன்ற அந்தத் தீவிரவாதிகளின் தீவிரவாதத்தை விட மிகக் கொடியது தான்.
எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அந்தத் தீவிரவாதிகளைத் தேடிப்பிடித்து அவர்களைக் கழுத்தை அறுத்து எறிவதை விடுத்து, இன்னொரு நாட்டின் மீது போர் என்பது ஒருபோதும் நல்ல முடிவைத் தராது.
போர் என்றால் துப்பாக்கி எடுத்து சுடத்தான் வேண்டுமோ?
இப்படி நம்பி வந்த நோயாளிகளைத் திருப்பி அனுப்புவதும், தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வதும் தான் வன்முறை.
இது தீவிரவாதிகள் செய்த வன்முறையைக் காட்டிலும் கொடியது.
எந்தச் சூழலிலும் அந்தச் சம்பவத்திற்கு இந்தச் செயல்கள் பதிலடி என்பது நியாயமானதல்ல.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்போவது அப்பாவி மக்கள் பலரை.
எல்லையை மூடுவது, இனி சில காலத்திற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கு யாரும் வர அனுமதி கிடையாது என்பதெல்லாம் சரி. அது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ளக் கூடியது.
ஆனால் நாம் மேலே சொன்ன தண்ணீர் தரமாட்டோம், இங்கே சிகிச்சை தரமாட்டோம் என்பதெல்லாம் மனிநேயமில்லாத செயல்கள்.
பயங்கரவாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் ஆக்கிவிடும். எத்தனை காலம் தான் அப்பாவி மக்கள் பலியாவது?
ஒரு நாட்டின் இராணுவத்திற்கும், ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவைச் சார்ந்த போர்க்குழுவிற்கும் நீண்ட நாட்களாக நிகழ்ந்த சண்டையில் அந்த நாட்டின் இராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.
அந்தக் கோபத்தை, அந்தக் குறிப்பிட்ட இனக்குழுவின் மீது காட்டியது அந்த இராணுவம்.
பிற நாட்டு இராணுவ உதவியோடு அந்தப்படையை அழித்த பிறகு, கோபம் தீராமல் அந்த இனமக்களை இனப்படுகொலை செய்த சம்பவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.
அப்படிப்பட்ட இனப்படுகொலைக்கு இணையான இந்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் சேர்ந்த அப்பாவி மக்களை பாதித்து விடக்கூடாது.
இதை எழுதும் போது, நமது இந்தியர்கள் 26 பேர் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்ற கொதிப்பு இருந்த போதிலும், அப்பாவிகளின் பலிக்கு இரை அப்பாவிகள் ஆகிவிடக்கூடாது என்ற பதட்டமும் இருக்கிறது.
கண்ணுக்கண்ணும்,
பல்லுக்குப் பல்லும் சரியே!
ஆனால் அப்பாவிக்கு பதில் அப்பாவிகள் பலி என்பது ஒருபோதும் சரியாகாது.