இன்று நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சம்பவம், காஷ்மீரில் நடந்த படுகொலைகள் தான்.
சுற்றுலா சென்ற பயணிகளை, லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடன்ட் ப்ரெண்ட்ஸ் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் எந்த மதம் என்று கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாய தாக்குதல் என்று பேசி, ஒரு மதத்திற்கு எதிராக இந்த பயங்கரவாத சம்பவத்தை அடிக்கோளிடுவது முறையல்ல.
இஸ்லாமிய மதம் தான் அந்தத் தீவிரவாதிகளுடையது என்பது ஊர்ஜிதமானாலும், நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்திற்கும், மதத்திற்கும் துளியும் சம்பந்தமிருக்காது. இது வழிதவறி தீவிரவாதிகளான மனித மிருகங்களால் நடத்தப்பட்ட கொடூரம்.
இந்தப்புரிதல் இருந்தால் போதும் நமது பொது ஜனத்திற்கு.
உலகின் மற்ற உயிர்களை தன்னுயிர் போல நினைக்காத ஒருவன் மனிதனாகவே கருதப்படமாட்டான், இதில் அவனுக்கு மத அடையாளம் வேறா?
இஸ்லாமியன் இந்து மக்களை என்ற வார்த்தைகளை விடுத்து மனித மிருகங்கள், அப்பாவி மனிதர்களைக் கொன்று விட்டன என்று அர்த்தம் கொள்வோம்.
ஏனென்றால் தொடர்ச்சியாக சில குழுக்களால் பரப்பப்படும் ஒரு மதத்திற்கு எதிரான பரப்புரை நமது மனதையும் பலவீனப்படுத்தி, இந்த மதம் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி விடக்கூடாது.
இஸ்லாமிய பின்புலத்தில் இருந்து நிறைய பேர் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மற்ற மதத்தினர் எல்லாம் அன்பே உருவாக இருக்கிறார்களா என்றால் நிச்சயம் அதுவும் இல்லை. அங்கே தெரிகிறது. இங்கே மாறு வேடத்தில் மறைந்திருக்கிறது.
அந்தக் குறிப்பிட்ட மதத்தில் தவறான வழிநடத்தலால், பாதை மாறி பயங்கரவாதிகளாக மாறிய இளைஞர்கள் பலர்.
அந்தக்குறிப்பிட்ட எண்ணிக்கை காரணமாக மதத்தின் மீதான துவேஷம் தவறானது.
அது நாளை நமது இஸ்லாமிய நண்பனை நாம் பார்க்கும் பார்வையை மாற்றி விடும்.
இத்தனைக்கும் இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளோடு போராடி முதல் ஆளாக உயிரை விட்டவர் ஒரு இஸ்லாமியர் தான் என்பதையும் நாம் நன்கு அறிவோம். பிறகென்ன விளக்கம்?
இங்கே மதம் எங்கிருந்து வந்தது? நடந்த சண்டை மனிதநேயமிக்க ஆட்களுக்கும், மனித மிருகங்களுக்குமானது.
சம்பவம் நிகழ்ந்தது உண்மை. அதில் நமக்கெல்லாம் மிகப்பெரிய மனபாரம், தாங்க இயலாத் துன்பம் ஏற்பட்டதும் உண்மை.
இதற்காக கட்டாயம் அந்த மனித மிருகங்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்பதும் 100 சதவீத தேவை.
ஆனால் இதன் பின்புலத்தில் எக்காரணம் கொண்டும், மதத்திற்கு எதிரான துவேஷமோ, மத அரசியலோ நுழைந்து விடக்கூடாது.
அன்பை போதிக்கும் குரானைப்படித்தவன் ஒருபோதும் தீவிரவாதி ஆக மாட்டான்.
தீவிராவதியாகி மனிதர்களைக் கொன்று குவிப்பவன் ஒரு போதும் குரானை வழித்தொடரும் நல்ல இஸ்லாமியனாக மாட்டான்.
மதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கத் துவங்கினால் ஒரு போதும் ஒரு பிரச்சினையும் இல்லை.