நண்பர்கள்.
ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள்.
அர்த்தங்கள் மட்டுமல்ல. அன்பும் அளவளாவியது.
தாய் தகப்பனின் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாக, சகோதர, சகோதரிகளின் அக்கறைக்கு ஈடாக அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் நல் உள்ளங்கள்.
ஆயிரம் சொந்தங்களுக்கு ஈடானவர்கள்.
சில நேரங்களில் அப்பா செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்கள். சில நேரங்களில் அம்மா காட்ட வேண்டிய பாசத்தை காட்டுபவர்கள்.
சில நேரங்களில் ஆசான் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பவர்கள்.
ஆபத்தில் நம்மைக் காக்க முதல் ஆளாக நிற்பவர்கள். நம் பிரச்சினைய அவர் பிரச்சினையாக எடுத்துத் தீர்ப்பவர்கள்.
எவ்வளவு தான் சொல்றது?
சொல்லி முடிக்க முடியாது.
நான் செய்ய வேண்டிய கடமைகளைத் தான் செய்து விட்டு எதுவுமே செய்யாதது போல ஓரம் நின்ற நண்பர்கள்.
எனது சொந்த அனுபவத்தில், கல்லூரி விடுதி ஆண்டு விழாவில் நான் செய்த தகராறுக்காக தான் முன்னின்று பின்னர் தெருவில் நிற்கும் நிலைக்குப் போன நண்பர்.
இன்னும் ஏராளம்.
வாழ்க்கையை வல்லவனாகக் வாழக் கற்றுக் கொடுத்த நண்பர்கள். நன்மை, தீமைகளைக் கற்றுக் கொடுத்த நண்பர்கள்.
கழுதை வயதில் கூட குழந்தை போல விளையாடி மகிழ்விக்கும் நண்பர்கள்.
நண்பர்கள் நம் வாழ்வில் செய்யும் நன்மைகள், உருவாக்கும் இன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
உணவு, உடை, இருப்பிடம் போல நட்பும் இன்றியமையாதது.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
திருவள்ளுவர் கூட நட்பைப் பற்றி தான் சொல்லியிருக்கிறார், ஆபத்தில் உதவுபவர்கள் என்று.
நட்பைப் பற்றி பேசத் துவங்கினால் முடிக்க முடியாது.
நண்பர்களே, நீங்கள் இன்றி நானில்லை…
நண்பர்கள் இன்றி யாருமில்லை…
கடவுளும் நல்ல நண்பர்களும் ஒன்றுதான்.
தவறு.
கடவுளை விட நல்ல நண்பர்கள் மேல்.
இதுவும் தவறு,
கடவுள் இருக்கலாம் அல்லது இல்லை, ஆனால் நண்பர்கள் இருக்கிறார்கள்.
இதுதான் சரி.
எனக்கு துயரம் வரும்போது கடவுளிடம் முறையிட்டேன். சரியானதும் ஆகாததும் என்னுடைய முயற்சியில் தான் நிகழ்ந்தது.
ஆனால்,
நண்பர்கள்.
என்னுடைய துயர வேளையில் அவர்களிடம் முறையிட்டேன்.
என் நன்மைக்காக சில ஆலோசனைகளும் ஆறுதல்களும் சொன்னார்கள்.
கண்டிப்பாக துயரத்திலிருந்து மீண்டு வந்தேன். இப்போது அது அவர்களது அறிவுறையினால் நிகழ்ந்தது.
தகப்பனும் நண்பனாகலாம், மனைவியும் நட்பாகலாம். யார் நண்பர் என்பதில் விதிவிலக்கெல்லாம் ஏதுமில்லை.
ஒவ்வொரு முறையும் எதையுமே எதிர்பாராமல் துயரத்தில் தோள் கொடுத்த நண்பர்கள், உறவுகள், பாசப்பிணைப்புகளுமே கடவுள் போன்றவர்களே!
கோயிலில் இருக்கும் கல் சிலை அல்ல.
நாம் தொடர்பு கொள்ள முடியாத பல நண்பர்கள், உறவுகள், ரத்த பந்தங்கள், குடும்ப உறவுகள், நாம் எங்கிருந்தாலும், பேசவே இல்லை என்றாலும் நன்றாக இருந்தால் சரி என நினைக்கும் அனைவரிடமும் மனமார்ந்த நன்றியைச் சொல்லி, மன்னிப்பையும் கேட்டுக்கொள்வோம்.
சூழ்நிலையால் உந்தப்பட்டு இப்படி நடந்து கொள்கிறேனே தவிர வேறு ஏதும் காரணங்களில்லை!